புதுடெல்லி: “முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றக்கூடிய நிலையான அரசை இந்திய மக்கள் தேர்ந்தெடுத்துள்ளதால் எங்களின் சாதனைகள் சாத்தியமாகின. இந்த இணையற்ற ஆதரவு பெரும் பலத்திற்கு ஆதாரமாக உள்ளது” என்று பிதரமர் மோடி தெரிவித்துள்ளாார். ‘மோடி அரசின் 9 ஆண்டுகள்’ குறித்த பொது மக்களின் ட்விட்டர் பதிவுகளைப் பகிர்ந்து, அவற்றுக்கு பதில் அளித்துள்ள பிரதமர் மோடி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில், “காலையில் இருந்து, ‘மோடி அரசின் 9 ஆண்டுகள்’ பற்றிய பல ட்விட்டர் பதிவுகளைப் பார்க்கிறேன். அதில் 2014-ம் ஆண்டு முதல் நமது அரசைப் பற்றி மக்கள் எதையெல்லாம் பாராட்டினார்கள் என்பதை எடுத்துக்காட்டுகிறார்கள். இத்தகைய அன்பைப் பெறுவது எப்போதுமே பணிவினைத் தருகிறது. மக்களுக்காக மேலும் கடினமாக உழைக்க இது கூடுதல் பலத்தை அளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், பிரதமர் நரேந்திர மோடியின் 2014-ஆம் ஆண்டு முதலான அரசைப் பற்றி மக்கள் பாராட்டியதை எடுத்துரைக்கும் ‘மோடி அரசின் 9 ஆண்டுகள்’ குறித்த பொதுமக்களின் ட்விட்டர் பதிவுகளைப் பகிர்ந்து, அவற்றுக்கு பதில் அளித்துள்ளார்.
பொதுமக்களின் ட்வீட்களைப் பகிர்ந்து கொண்ட பிரதமர் அதற்கான தனது பதில் பதிவில், “கடந்த 9 ஆண்டுகளில் நாங்கள் பல களங்களைப் பெற்றுள்ளோம். வரும் காலங்களில் இன்னும் அதிகமாகச் செய்ய விரும்புகிறோம். இதன் மூலம் அமிர்த காலத்தில் வலுவான மற்றும் வளமான இந்தியாவை உருவாக்க முடியும். முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றக்கூடிய நிலையான அரசை இந்திய மக்கள் தேர்ந்தெடுத்துள்ளதால் எங்களின் சாதனைகள் சாத்தியமானது.
இந்த இணையற்ற ஆதரவு பெரும் பலத்திற்கு ஆதாரமாக உள்ளது. வாழ்க்கையை மாற்றியமைக்கவும் இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்திற்கு வேகம் சேர்க்கவும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. முக்கிய உள்கட்டமைப்பு மற்றும் ‘வாழ்க்கையை எளிதாக்குதல்’ திட்டங்களை நீங்கள் முன்னிலைப்படுத்தியுள்ளீர்கள். அவை சமுதாயத்தின் அடித்தட்டு நிலையில் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. 140 கோடி இந்தியர்களின் விருப்பங்களை நிறைவேற்றும் வாய்ப்பைப் பெற்றதற்காக நான் உண்மையிலேயே பணிவாக உணர்கிறேன்” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
வரும் 30-ம் தேதி பிரதமர் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் தொடர்ந்து இரண்டு முறை பெற்ற வெற்றியின் ஆட்சியில் 9 ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.