இம்பால்: மணிப்பூரில் ஆளும் பாஜக கூட்டணி அரசின் முதல்வர் பைரோன்சிங் தங்களுக்கு துரோகம் செய்துவிட்டதாக குக்கி இன மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். ஆகையால் குக்கி இன மக்களுக்கான தனி மாநிலம் அமைக்க வலியுறுத்தி போராடுவோம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மணிப்பூரில் நாகா, குக்கி இன மக்கள் பழங்குடிகள் பட்டியலில் உள்ளனர். இப்பட்டியலில் மைத்தேயி இன மக்களை சேர்க்க வகை செய்யும் உத்தரவை மணிப்பூர் உயர்நீதிமன்றம் பிறப்பித்தது. மணிப்பூரில் ஆளும் பாஜக அரசும் இதற்கு ஆதரவாக இருந்தது.
இதனால் கொந்தளித்த குக்கி, நாகா இன மக்கள் வீதிகளில் இறங்கி போராடினர். இதன் விளைவாக மணிப்பூர் மாநிலமே பற்றி எரிந்தது. மணிப்பூரில் மைத்தேயி இனமக்கள் குறிவைத்து தாக்கப்பட்டனர். இந்த வன்முறைகளில் 60க்கும் மேற்பட்டோர் பலியாகினர். பல்லாயிரக்கணக்கான மக்கள் அகதிகளாக இடம்பெயர்ந்தனர். இந்த வன்முறையின் தாக்கம் இன்னமும் ஓயவில்லை., மணிப்பூர் செல்லும் மத்திய அமைச்சர்கள் முற்றுகையிடப்பட்டு வருகின்றனர். மணிப்பூரின் பல பகுதிகளில் திடீர் திடீரென வன்முறைகள் நிகழ்கின்றன. இதனால் இம்மாநிலத்தில் மேலும் 5 நாட்களுக்கு இணைய சேவைகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன.
இதனிடையே மணிப்பூர் பாஜக அரசின் முதல்வர் பைரோன்சிங் தங்களுக்கு துரோகம் செய்துவிட்டார் என குக்கி இன மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். அத்துடன் இனியும் மைத்தேயி இன மக்களுடன் நாங்கள் மணிப்பூரில் இணைந்து வாழ முடியாது. எங்களுக்கு தனி மாநிலம் அல்லது தனி யூனியன் பிரதேசம் அல்லது தனி நிர்வாக அமைப்பு உருவாக்கித் தர வேண்டும். இதற்காக எங்கள் போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர்.
மணிப்பூரில் ஆளும் பாஜக ஆட்சியை ஆதரிக்கக் கூடிய குக்கி மக்கள் கூட்டமைப்பின் செயலாளர் Wilson Lalam Hangshing இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இருந்த போதும் அதிகாரப்பூர்வமாக மணிப்பூர் பாஜக அரசுக்கான ஆதரவை தாங்கள் இன்னமும் விலக்கிக் கொள்ளவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். வடகிழக்கு மாநிலங்களில் பல்வேறு இனக்குழுக்களுக்கு தனி நிர்வாக அமைப்புகள் உருவாக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.