சென்னை: ரேஷன் கடைகளில், இனி 2 பொருட்களுக்கு தட்டுப்பாடு உள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்திருந்த நிலையில், அது தற்போது தமிழ்நாட்டின் கிராமப்புறங்களிலும் எதிரொலிக்க துவங்கி உள்ளது.
தமிழகத்தில் நியாயவிலைக் கடைகள் மூலம், அனைத்து அட்டைதாரர்களுக்கு குறைந்த விலையிலும், இலவசமாகவும் அரிசி, பருப்புகள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன..
இதனால் கோடிக்கணக்கான மக்கள் நேரடியாகவே ஏராளமான பலன்களை அடைந்து வருகின்றனர். அரசு விநியோகிக்கும் இந்த பொருட்களினால், அவர்களின் வாழ்வாதாரம் காக்கப்பட்டு வருகின்றன..
மண்ணெண்ணெய்:
இந்நிலையில், அமைச்சர் சக்கரபாணி சில நாட்களுக்கு முன்பு தலைமை செயலகத்தில் ஒரு பேட்டி தந்திருந்தார்.. அதில், “தமிழ்நாட்டிற்கு மத்திய அரசால், ஒதுக்கீடு செய்யப்பட்டு வரும் மண்ணெண்ணெய் அளவு 2006ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒன்றிற்கு 59,852 கிலோ லிட்டராக இருந்தது. இந்த ஒதுக்கீடு படிப்படியாகக் குறைக்கப்பட்டு 01.4.2021 முதல் மாதம் ஒன்றிற்கு 7536 கிலோ லிட்டர் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
மறுபடியும் 01.4.2022 முதல் அதுவும் குறைக்கப்பட்டு மாதம் ஒன்றிற்கு 4520 கிலோ லிட்டர் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 01.4.2023 முதல் அதுவும் குறைக்கப்பட்டு தற்போது மாதம் ஒன்றிற்கு 2712 கிலோ லிட்டர் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மண்ணெண்ணெய் மற்றும் கோதுமை பற்றாக்குறைக்கு காரணம் கடந்த ஆட்சியாளர்கள் உணவுப் பாதுகாப்பு சட்டத்தில் கையெழுத்திட்டது தான்.. எரிவாயு இணைப்பு அதிகம் உள்ள மாநிலம் என்பதால், தமிழகத்திற்கு மண்ணெண்ணெய் மற்றும் கோதுமை விநியோகம் குறைக்கப்பட்டுள்ளது.. இதுகுறித்து முதலமைச்சருடன் ஆலோசித்து மத்திய அமைச்சரை சந்தித்து முறையிட போகிறோம்.
கேஸ் ஏஜென்சி:
மண்ணெண்ணெய்க்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் மானியம் முழுவதையும் தமிழ்நாடு அரசே ஏற்றாலும் ஒதுக்கீடு செய்வது மத்திய அரசாக இருப்பதால் ஒதுக்கீட்டை அதிகப்படுத்த ஒன்றிய அரசிடம்தான் கோரிக்கை வைக்க முடியும்.. மத்திய அரசு அனுமதி வழங்கினால்தான் மண்ணெண்ணெயைக் கொடுக்க முடியும்.
ஏனென்றால் பெட்ரோலாக இருந்தாலும் சரி, டீசலாக இருந்தாலும் சரி, மண்ணெண்ணெயாக இருந்தாலும் சரி, எரிவாயு இணைப்பாக இருந்தாலும் சரி ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற காரணத்தால், இன்றைக்குப் பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள்..
மத்திய அரசு:
7000 கிலோ லிட்டராக இருந்த ஒதுக்கீட்டை 2012 லிட்டராக குறைத்துள்ளனர். இப்போது நமக்கு 9 ஆயிரம் கிலோ லிட்டர் தேவை இருக்கிறது. ஆனால், தேவைக்கு ஏற்ப மண்ணெண்ணெய், கோதுமை ஒதுக்கப்படுவதில்லை” என்று கூறியிருந்தார். இந்நிலையில், சமீப காலமாகவே, மண்ணெண்ணெய்யை முறையாக வழங்கப்படுவதில்லை என்ற புகார்கள் கிராமப்புற மக்கள் தரப்பில் இருந்து கிளம்பி வருகின்றன..
குறிப்பாக, கோவை மாவட்ட கிராமப்புறங்களில் ரேஷன் கடைகளில் அதிகளவில் மண்ணெண்ணெய் தட்டுப்பாடு நிலவுவதாக புகார்கள் எழ துவங்கி உள்ளன.. 5 மாதங்களுக்கு ஒரு முறை மட்டுமே ரேஷன் அட்டைதாரர்களுக்கு மண்ணெண்ணெய் வழங்கப்படுவதாகவும் குமுறுகிறார்கள் அந்த பகுதி மக்கள்.. அதாவது, ஒரு மாதம் ஒரு லிட்டர் வாங்கினால், அத்துடன் 5 மாதங்களுக்கு பிறகுதான் மண்ணெண்ணெய் கிடைக்கிறதாம்.
பெரும் தட்டுப்பாடு:
ஆனால், ரேஷன் கடை ஊழியர்களோ, “குறைவான அளவு மண்ணெண்ணெய் மட்டுமே தங்களுக்கு வருவதாகவும், அது அனைவருக்கும் கிடைக்கும் வகையில் சுழற்சி முறையில் விநியோகிக்கிறோம்” என்றும் காரணம் கூறுகிறார்கள்..
எனவே, மத்திய அரசு முறையாக மண்ணெண்ணெய் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள், கிராமப்புற மக்களிடமிருந்து வலுக்க துவங்கி உள்ளது.. அத்துடன், மத்திய அரசு செவிசாய்க்கும் வரை காத்திருக்காமல், வேறு ஏதாவது மாற்று நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்து மக்களின் அத்தியாவசியப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்றும் ரேஷன் அட்டைதாரர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.