சிதம்பரம் குழந்தை திருமணம் விவகாரத்தில் பொய் பேசிய ஆளுநர் ரவி மன்னிப்பு கேட்க வேண்டும் என
கோரிக்கை விடுத்துள்ளது.
சிதம்பரம் தீட்சிதர்கள் மேட்டர் தான் தற்போது ஹாட் டாஃபிக். குழந்தை திருமணம் அதாவது 18 வயது நிரம்பாத சிறுமிகளை திருமணம் செய்து வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. சிதம்பரத்தில் 2015ஆம் ஆண்டு 25 குழந்தை திருமணங்கள் ஒரே நாளில் நடத்தப்பட்டது. குற்றவாளிகள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்று வழக்கு தொடரப்பட்டது. இனி இது போன்ற குழந்தை திருமணங்கள் நடக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று காவல்துறைக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியதே தவிர அப்போது 25 குழந்தை திருமணங்களை நடத்திய குற்றவாளிகளை கைது செய்யுங்கள் என்று உத்தரவிடவில்லை.
இந்தசூழலில் மீண்டும் சிதம்பரத்தில் குழந்தை திருமணங்கள் நடைபெறுவதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் 6 தீட்சிதர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து ஆளுநர் ரவி, குழந்தை திருமணம் செய்யப்பட்ட சிறுமிகளுக்கு இரு விரல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக பேசியது வைரலானது.
அதைத் தொடர்ந்து குழந்தை திருமணம் செய்யப்பட்ட சிறுமிகளின் திருமண போட்டோக்கள் சமூகவலைதளங்களில் வைரலானது. மேலும் சிறுமிகள் முதலிரவுக்குச் செல்லும் போட்டோக்களும் சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இது குறித்து தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளது.
இது குறித்து விசிக துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு தனது ட்விட்டர் பதிவில், ‘‘சிதம்பரத்தில் குழந்தை திருமணங்களை செய்து வைத்ததாக அங்குள்ள பார்ப்பன சமூகத்தைச்சேர்ந்த ஹேம சபேச தீட்சிதர், வெங்கடேஸ்வர தீட்சிதர் மற்றும் அவரது மகன் ராஜரத்தினம் தீட்சிதர் ஆகியோர் கடந்த அக்டோபர் 16,2022 அன்று கடலூர் மாவட்ட போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
குழந்தை திருமணம் நடக்கவில்லை என முழக்கமிட்டு அன்று இரவே தீட்சிதர்கள் சாலை மறியல் செய்தனர். சாலை மறியலில் ஈடுபட்ட 25க்கும் மேற்பட்ட தீட்சிதர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. குழந்தை திருமணம் சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது. அப்படி திருமணம் செய்தால் தண்டனைக்குரிய குற்றமாகும். ஆனால், குழந்தை திருமணம் நடக்கவே இல்லை என சனாதனிகள் வாதிட்டனர்.
கூடுதல் சனாதனியான ஆளுநர் ரவியோ, குழந்தை திருமணத்தை மறைப்பதற்காக, கன்னித்தன்மையை பரிசோதிக்க இரு விரல் சோதனை நடத்தப்பட்டது என அபாண்டமாக குற்றம் சுமத்தினார். இப்போது குழந்தை திருமணம் நடைப்பெற்றதற்கான ஆதாரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இப்போதாவது, ஆளநர் ரவி, குழந்தை திருமணம் செய்தது தவறு என்றும், திருமணத்தை நடத்தியோர் மீது போக்சோ சட்டம் பாய வேண்டும் என வலியுறுத்துவாரா?
இரு விரல் சோதனை குறித்து தான் சொன்ன பொய்யுக்கு மன்னிப்பு கேட்பாரா? “சூத்திரனுக்கு ஒரு நீதி தண்டச்சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி, சாத்திரம் சொல்லிடுமாயின், அது சாத்திரமன்று; சதியென்று கண்டோம்” என முழங்கிய பாரதியின் குரல் கேட்கிறதா?’’ என காட்டமாக கூறியுள்ளார்.