1 கல்லில் 3 மாங்கா.. கமல்ஹாசன் நாளைக்கு விழாவுக்கு போறாராமே.. டக்குனு பார்த்த எதிர்க்கட்சிகள்.. ஏன்?

சென்னை: நாளை நடக்க போகும், புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில், மநீம தலைவர் கமல்ஹாசன் பங்கேற்க போவதாக அறிவித்துள்ளார்.. அத்துடன் எதிர்க்கட்சிகளுக்கும் முக்கிய கோரிக்கை விடுத்துள்ளார்.. என்ன காரணம்?

நாளை புதிய நாடாளுமன்ற திறப்பு விழா நடக்க போகிறது.. நாட்டின் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு புறக்கணிக்கப்படுவதாக, அதனைக் கண்டிக்கும் எதிர்க்கட்சிகளின் போராட்டம் உச்சம் பெற்றுள்ளது. இந்த விழாவில் பிரதமர் மோடி மட்டுமே முன்னிறுத்தப்படுவதாகவும், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு புறக்கணிக்கப்படுவதாகவும் ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் கண்டனக் குரல் எழுப்பி வருகின்றன.

ஆனால், அனைத்து கட்சிகளும், விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று மத்திய அமைச்சர்கள் வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள்..

நிர்மலா சீதாராமன்:

அதிலும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “பிரதமர் மோடிக்காக இல்லாவிட்டாலும், மக்களுக்காவாவது நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு விழாவில் எதிர்க்கட்சிகள் கலந்து கொள்ள வேண்டும்” என்று அழைப்பு விடுத்திருந்தார். ஆனால், எதிர்க்கட்சிகள் யாரும் பங்கேற்பது போல தெரியவில்லை.. திருமாவளவன் ஒருபடி மேலேபோய், திறப்பு நாளை, துக்க நாளாக அனுசரிக்க போவதாக அறிவித்துவிட்டார்.

அறிக்கை:

இப்படிபட்ட சூழலில், மநீம தலைவர் கமல்ஹாசன், அந்த விழாவில் கலந்து கொள்ள போவதாக அறிவித்துள்ளார்.. இதற்காகவே ஒரு அறிக்கையும் வெளியிட்டு, அதற்கான காரணத்தையும் சொல்லி உள்ளார்.

முக்கியமாக, “புதிய பாராளுமன்றத்தின் பதவியேற்பு விழாவில் நான் பங்கேற்க உள்ளேன். அதே நேரத்தில் தேசப் பெருமிதத்தின் இந்த தருணம் அரசியல் ரீதியாக பிளவுபட்டுள்ளது. நான் எனது பிரதமரிடம் ஒரு எளிய கேள்வியைக் கேட்கிறேன், எங்கள் புதிய பாராளுமன்றத்தின் திறப்பு விழாவில் இந்திய குடியரசுத் தலைவர் ஏன் கலந்து கொள்ளக் கூடாது என்பதை தயவுசெய்து நாட்டுக்கு சொல்லுங்கள்.

நீங்கள் குடியரசு தலைவரை அழைக்காமல் போனால், வரலாற்றில் பெரும் பிழையாகப் பதியப்படும். அதனை நீங்கள் இப்போதே திருத்திக் கொள்ளுமாறு பிரதமரை நான் கேட்டுக்கொள்கிறேன். எங்கள் குடியரசின் புதிய வீட்டில் அதன் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்பார்கள் என்று நான் நம்புகிறேன், எனவே நிகழ்வைப் புறக்கணிக்க முடிவு செய்துள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் தங்களின் முடிவை மறுபரிசீலனை செய்ய அழைப்பு விடுக்கிறேன்.

ஒருமைப்பாடு:

நம்மைப் பிரிப்பதை விட, நம்மை ஒன்றிணைப்பதே அதிகம் என்பதை அனைத்து அரசியல் கட்சிகளும் நினைவில் கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். முழு நாடும் இந்த நிகழ்வை எதிர்நோக்கி இருக்கிறது. உலகத்தின் கண்கள் நம்மீது உள்ளது. புதிய பாராளுமன்றத்தின் பதவியேற்பு நிகழ்வை தேசிய ஒருமைப்பாட்டின் சந்தர்ப்பமாக, நமது அரசியலாக ஆக்குவோம். கருத்து வேறுபாடுகள் ஒரு நாள் காத்திருக்கலாம்” என்பது உட்பட பல்வேறு கருத்துக்களை கமல்ஹாசன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தான் கலந்து கொள்ள போவதாக அறிவித்துள்ளதுடன், எதிர்க்கட்சிகளும் கலந்து கொள்ள வேண்டும் என்பதுடன், ஜனாபதியையும் பிரதமர் அழைக்க வேண்டும் என 3 விதமான விஷயங்களை அந்த அறிக்கையில் கமல் தெரிவித்துள்ளது, அனைவரின் கவனத்தையும் பெற்று வருகிறது. மற்றொருபக்கம் இருவேறு கருத்துக்களையும், அதையொட்டிய விவாதங்களையும், கமலின் அறிக்கை சோஷியல் மீடியாவில் கிளப்பி விட்டுள்ளது.

சந்தேகங்கள்:

“ராகுல் காந்திக்காக, கர்நாடகத்தில் பிரச்சாரம் செய்ய போவதாக, தன்னுடைய நிர்வாகிகளிடம் கமலே அறிவித்திருந்தார்.. ஆனால், கமல் பிரச்சாரத்துக்கு கடைசி நாள்வரை போகவில்லை.. கமல் வந்து பிரச்சாரம் செய்தால் நன்றாக இருக்கும் என்று ராகுலே தனிப்பட்ட முறையில் ஆசைப்பட்டு அழைத்துள்ளார்.. அப்போதும்கூட, கமல் பிரச்சாரத்துக்கு செல்லவில்லை.

என்ன காரணம்:

காங்கிரஸ் தரப்பில் போனை போட்டாலும், கமல் தரப்பில் யாரும் பதிலளிக்கவில்லை என்று செய்திகள் கசிந்தன.. எதற்காக கமல் பிரச்சாரம் செய்யவில்லை என்று தெரியவில்லை. இதற்கு பிறகு, கர்நாடக முதல்வர் பதவியேற்பு விழாவுக்கு கமல் சென்றிருந்தார்.. ஆனால், சித்தராமையா, டிகே சிவக்குமார் ஆகிய இருவரும் கமலுக்கு சற்று தொலைவில் இருந்தபடியே வணக்கம் செலுத்திவிட்டு சென்றுவிட்டார்கள்..

அருகில் வந்து கைகொடுக்கக் கூட இல்லை. இந்த நிகழ்வில் கமலை யாரும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை என்று அனைத்து மீடியாக்களிலும் செய்திகள் வெளியாகின..

இப்படிப்பட்ட சூழலில், விழாவுக்கு போவதாக சொல்கிறார்.. எதிர்க்கட்சிகள் அனைவரும் ஓரணியில் திரளும்போது, இவர் மட்டும் பங்கேற்பதாக சொல்கிறார்.. இத்தனைக்கும், இவரது அபிமான கட்சியான, ஆம் ஆத்மிகூட விழாவை புறக்கணித்துள்ளது.. எனினும், கமல் கலந்து கொள்வதாக சொல்வது அவரது தனிப்பட்ட உரிமை, விருப்பமாக இருக்கலாம்.. அதேசமயம், பாஜக விழாவில் கமல் பங்கேற்பதில் ஒன்றும் ஆச்சரியமில்லையே” என்கிறார்கள்.

கமல்ஹாசன்:

ஆனால் மற்றொரு தரப்போ மாற்று கருத்தை முன்வைக்கிறது.. “கமல் சொல்வது நியாயமே.. ஒற்றுமை என்ற வார்த்தையை வலியுறுத்துவதன் அர்த்தத்தையும் சரியாக விளக்குகிறார்.. எதிர்க்கட்சிகள் உட்பட, அனைவரின் எதிர்பார்ப்புமே, ஜனாதிபதியை அழைக்க வேண்டும் என்பதுதானே? அதைத்தான் கமலும் சொல்கிறார்.. பிரதமரிடமே காரணத்தையும் கேட்கிறார்..
அதேபோல, விழாவை புறக்கணிக்க கூடாது என்பதையும் எதிர்க்கட்சிகளுக்கு வலியுறுத்துகிறார்.. இதில் என்ன தவறு இருக்கிறது? நடுநிலைமையுடன் கமல் இந்த விஷயத்தை அணுகுகிறார்.. இதையே எதிர்க்கட்சிகளும் பரிசீலிக்கலாமே.. அதைவிட்டுவிட்டு, எதற்கெல்லாம் அரசியல் உள்நோக்கம் கற்பித்து கொண்டிருப்பது சரிகிடையாது” என்று ஒருசாரார் சொல்கிறார்கள்.

சபாஷ் அறிக்கை:

“ஒற்றுமையை” வலியுறுத்தி கமல் விடுத்திருக்கும் அறிக்கையானது, மிகுந்த முக்கியத்துவத்தையும், கவனத்தையும் அரசியலில் ஏற்படுத்தி வருகிறது. அதேசமயம், நாட்டின் முதல் குடிமகளான, ஜனாதிபதியை ஒதுக்கி வைத்து நடத்தப்படும் ஒரு விழாவில், ஒற்றுமையையும், தேசிய ஒருமைப்பாட்டையும் கமல்ஹாசன் எப்படி எதிர்பார்க்கிறார்? என்ற கேள்வியும் எழவே செய்கிறது.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.