மாஸ்கோ: இந்தியா பொதுத்துறை நிறுவனங்களான ஓஎன்ஜிசி, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் உள்ளிட்ட நிறுவனங்களுக்குச் சொந்தமான 300 மில்லியன் டாலர், அதாவது இந்திய மதிப்பில் 2400 கோடி ரஷ்யாவில் சிக்கியுள்ளது. அதற்கான காரணத்தைப் பார்க்கலாம்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் ஓராண்டிற்கு மேலாகத் தொடர்ந்து வருவது அனைவருக்குமே தெரியும். இந்த போர் விவகாரத்தில் பெரும்பாலான நாடுகளுக்கு உக்ரைனுக்கு எதிரான ஒரு நிலைப்பாட்டையே எடுத்தன.
இதுவரை இல்லாத அளவுக்கு உலக நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை அறிவித்தன. அதன்படி சர்வதேச அளவில் நிதி பரிவர்த்தனைகளைக் கையாளும் SWIFT அமைப்பில் இருந்தும் ரஷ்ய வங்கிகள் தடை செய்யப்பட்டன. இதன் மூலம் ரஷ்யாவால் சர்வதேச நிதி பரிவர்த்தனை முறையை அணுக முடியாமல் போனது. இது மற்ற நாடுகளைக் காட்டிலும் இந்தியாவுக்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. ஏன் தெரியுமா.. வாங்கப் பார்க்கலாம்.
கச்சா எண்ணெய்:
ரஷ்யாவில் கச்சா எண்ணெய் கொட்டிக் கிடப்பது அனைவருக்கும் தெரியும். அங்கே உள்ள எண்ணெய் சார்ந்த கட்டமைப்புகளில் இந்திய நிறுவனங்கள் பல பில்லியன் டாலரை முதலீடு செய்துள்ளன. இதில் இருந்து கிடைக்கும் பணத்தை எடுக்க முடியாமல் தான் இந்திய நிறுவனங்கள் திணறி வருகின்றன.
பல ஆண்டுகளாக, இந்தியப் பொதுத்துறை நிறுவனங்கள் ரஷ்யாவில் எண்ணெய் மற்றும் எரிவாயு திட்டங்களில் பல பில்லியன் டாலரை முதலீடு செய்துள்ளன. ஒட்டுமொத்தமாக $6 பில்லியன் டாலர், அதாவது இந்திய மதிப்பில் 5 லட்சம் கோடியை அவர்கள் முதலீடு செய்துள்ளனர். நமது நாடு எரிசக்திக்கு இறக்குமதியையே பெரும்பாலும் சார்ந்துள்ள நிலையில், இது முக்கியமான ஒரு முதலீடாகக் கருதப்படுகிறது.
முதலீடுகள்:
இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே நிலவும் நீண்ட நல்லுறவுக்கு இதுபோன்ற முதலீடுகளும் முக்கிய காரணமாக இருக்கிறது. இந்திய பொதுத் துறை நிறுவனமான ஓஎன்ஜிசி ரஷ்யாவில் உள்ள Sakhalin-1 திட்டத்தில் 20 சதவிகிதமும் வான்கார்னெஃப்ட் திட்டத்தில் 26% சதவிகிதமும் பங்குகளை வைத்துள்ளது. அதேபோல சைபீரியாவில் எண்ணெய் கிணறுகளைக் கொண்டிருக்கும் இம்பீரியல் எனர்ஜி நிறுவனமும் அவர்கள் பேரில் தான் இருக்கிறது.
அது மட்டுமின்றி இந்தியன் ஆயில், மற்றும் பாரத் பெட்ரோலியம் ஆகியவை வான்கார்னெப்ட் உள்ளிட்ட பல இடங்களில் எண்ணெய் வயல்களைக் கொண்டுள்ளன.
கடந்த பிப்ரவரி 2022இல் உக்ரைன் போர் ஆரம்பிக்கும் வரை இந்திய நிறுவனங்கள் ரஷ்யாவில் தங்கள் செய்த முதலீடுகளிலிருந்து டிவிடெண்ட் மூலம் நல்ல வருமானத்தைப் பெற்றன. அதேநேரம் போர் தொடங்கிய பிறகு அவர்களால் டிவிடெண்ட் வருமானத்தை அடைய முடியாமல் போனது. போருக்குப் பின்னரும் இந்த டிவிடெண்ட்கள் வழங்கப்பட்டாலும் கூட அவை இந்தியாவுக்கு வருவதில்லை.
என்ன காரணம்:
மாறாக ரஷ்யாவில் உள்ள Commercial Indo Bankஇல் பணம் குவிந்து வருகிறது. இதன் மூலம் இந்திய நிறுவனங்கள் ஓரளவுக்கு வட்டியையும் பெற்று வருகிறது. இருப்பினும், SWIFT அமைப்பில் இருந்து ரஷ்ய வங்கிகள் தடை செய்யப்பட்டுள்ளதால் அந்த பணத்தை இந்தியாவுக்குள் எடுத்து வர முடிவதில்லை.
டிவிடெண்ட் மூலம் பெறப்பட்ட தொகையில் CIBL வங்கியில் இப்போது எவ்வளவு தேங்கி இருக்கிறது என்பது குறித்த அதிகாரப்பூர்வ தரவு எதுவும் இல்லை. இருப்பினும், சுமார் 300 மில்லியன் டாலர், அதாவது 4 ஆயிரம் கோடி ரூபாய் ரஷ்ய வங்கிகளில் சிக்கியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
தீர்வு என்ன:
ரஷ்யாவிடம் இருந்து நாம் பல லட்சம் லிட்டர் கச்சா எண்ணெய்யை வாங்கும் நிலையில் அதற்கு இந்த தொகையைப் பயன்படுத்தலாம். இருப்பினும், அதில் பல சிக்கல்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் இந்த டிவிடெண்ட் தொகையை இந்தியாவுக்கு எடுத்து வருவது குறித்து இந்திய அதிகாரிகள் ரஷ்யத் தரப்பிடம் தொடர்ந்து ஆலோசித்து வருகிறார்கள். இருப்பினும், அதில் இதுவரை எந்தவொரு முடிவும் எட்டப்படவில்லை.
இந்தப் பிரச்சினை இப்போதைக்கு முடியாது என்பதால் இப்படி இந்தியாவுக்கு சொந்தமான பல ஆயிரம் கோடி ரூபாய் ரஷ்யாவிலேயே உறங்கிக் கொண்டிருக்கிறது.