ஐ.பி.எல்-இல் மும்பைக்கு எதிரான இரண்டாம் தகுதிச்சுற்றுப் போட்டியில் குஜராத் அணி வென்றிருந்தது. அந்த அணியின் சார்பில் சுப்மன் கில் அபாரமாகச் சதமடித்து அசத்தியிருந்தார். இந்தப் போட்டியில் வென்றதன் மூலம் சென்னைக்கு எதிரான இறுதிப்போட்டியில் ஆட குஜராத் அணி தகுதிப்பெற்றிருக்கிறது. மும்பை அணிக்கு எதிரான வெற்றிக்குப் பிறகு நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் குஜராத் அணியின் சார்பில் விஜய் சங்கர் பங்கேற்றிருந்தார். பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் இங்கே.
சுப்மன் கில்லின் ஆட்டத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்? இப்படியான ஆட்டங்களை ஆட அவர் எப்படித் தயாராகிறார்?
“அவர் கிரிக்கெட்டுக்கு ரொம்பவே நேர்மையாக இருக்கிறார். அசாத்தியமான இன்னிங்ஸ்களை ஆடி வருகிறார். ஒவ்வொரு பயிற்சி செஷனிலும் அவர் ஆட்டத்தில் என்ன செய்ய நினைக்கிறாரோ அதைச் செய்து பார்த்துவிடுவார். கில்லால் பெரிய பெரிய சிக்ஸர்களையும் அடிக்க முடியும். கொஞ்சம் கட்டுக்கோப்பான இன்னிங்ஸ்களையும் ஆட முடியும். எந்த சமயத்தில் என்ன மாதிரியான இன்னிங்ஸை ஆட வேண்டும் என்பதும் அவருக்குத் தெரியும். கில் ஒரு அசாதாரணர்.”
உங்களின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன். அணித் தலைவராக அவருடைய அணுகுமுறை எப்படி இருக்கும்?
“அவர் ஆக்ரோஷமான, அதேசமயத்தில் கூலான கேப்டனும் கூட. அணியில் உள்ள அனைவரும் தங்கள் ஆட்டத்தை அனுபவித்து விளையாட வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பவர். ஐ.பி.எல் போன்ற சவால்கள் நிறைந்த தொடரில் கேப்டன் மற்றும் பயிற்சியாளர் என இருவரும் உங்கள் மீது நம்பிக்கை வைக்கும்போது அந்தக் கடினமான சூழலை எளிதாகக் கையாள முடியும்!”
உங்களுக்கு இந்த சீசன் எப்படி அமைந்தது?
“ஐ.பி.எல் வரலாற்றில் என்னுடைய சிறந்த சீசன் இதுதான். காயங்களில் சிக்கியிருந்தேன். அவற்றிலிருந்து மீண்டு வந்து கடந்த 6 மாதங்களாக மனரீதியாக, உடல்ரீதியாக என அத்தனை விதத்திலும் மீண்டும் தயாரானேன். என்னுடைய ஆட்டத்தில் இருக்கும் குறைகளைத் தேடிக் கொண்டே இருந்தேன். அதை இப்போதுதான் கண்டடைந்து நிவர்த்தி செய்திருக்கிறேன் என நினைக்கிறேன். பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன் போன்றோருடன் இணைந்து பணியாற்றியது பெரும் அனுபவமாக இருந்தது.”
உங்கள் அணியின் பேட்டிங் ஆர்டரில் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கிறதே… அது வீரர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தவில்லையா?
“எங்கள் அணியின் அத்தனை பேட்டர்களுமே எந்தச் சூழலிலும் எந்த ஆர்டரிலும் இறங்கி ஆடத் தயாராக இருக்கிறோம். நானே பெங்களூருக்கு எதிரான போட்டியில் நம்பர் 3-இல் களமிறங்கினேன். இன்னொரு போட்டியில் நம்பர் 6-இல் களமிறங்கினேன். எங்கே இறங்கினாலும் பொறுப்பை உணர்ந்து ஆட வேண்டும் என்பதே எங்களின் எண்ணம். அதற்கேற்பதான் பயிற்சியும் செய்வோம். என்னைப் பொறுத்தவரை புதிய பந்திலும் பயிற்சி செய்வேன். டெத் ஓவரில் ஆடுவதற்கும் பயிற்சி செய்வேன். இப்படியான பயிற்சிகளுக்கு ஆட்டத்தில் நல்ல ரிசல்ட் தானாகவே கிடைக்கும்.”
இறுதிப்போட்டியிலும் குஜராத் மைதானம் உங்களுக்குச் சாதகமானதாக இருக்குமா?
“தொடர்ச்சியாக இரண்டாவது இறுதிப்போட்டியில் ஆடப்போகிறோம் என்பது அற்புதமான விஷயம். இத்தனை நாள்களாக நாங்கள் கொடுத்திருக்கும் உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்கும் என நினைக்கிறேன். ஒரு முழுமையான செட்டிலான அணியாக இருக்கிறோம். ஷமி, மோகித், ரஷீத் என விக்கெட் எடுக்கக்கூடிய பௌலர்கள் இருக்கிறார்கள். துரிதமாக ரன்கள் சேர்த்துக் கொடுக்கக்கூடிய பௌலர்கள் இருக்கிறார்கள்.
அகமதாபாத் மைதானம் பெரிய ஸ்கோர்களை அடிப்பதற்கு ஏற்ற மைதானம். நடப்பு சீசனில் இங்கேதான் அதிக சிக்ஸர்கள் அடிக்கப்பட்டிருக்கும் என்றும் நினைக்கிறேன். உள்ளூர் அணி என்பதால் சூழல் எங்களுக்குக் கொஞ்சம் சாதகமாக இருக்கும் என்பதை மறுக்க முடியாது. ஆனால், எல்லாவற்றையும் கடந்து மகிழ்ச்சியாக அனுபவித்து நல்ல கிரிக்கெட்டை ஆட வேண்டும்.”
இம்பாக்ட் ப்ளேயர் விதிமுறையின் தாக்கம் என்னவாக இருக்கிறது?
“இப்போது வரை இம்பாக்ட் ப்ளேயர் விதியின் மூலம் நல்ல விளைவுகளையே பார்க்கிறேன். அணியில் இருக்கும் 16 வீரர்களில் பெவிலியனில் இருக்கும் 5 வீரர்களுக்கு ஆட்டத்தின் எந்த ஒரு தருணத்திலும் வாய்ப்பு கிடைக்கலாம் என்பது சிறப்பான விஷயம். அந்த வாய்ப்பின் மூலம் அந்த வீரர் சிறப்பாக செயல்பட்டு மேலும் முன்னேறி, தனக்கான இடத்தைப் பிடிக்க ஒரு வெளி இருக்கிறது. ஆகையால் இம்பாக்ட் ப்ளேயர் விதியில் எந்தக் குறையும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.”