சென்னை: 1989ம் ஆண்டு வெளியான புதிய பாதை திரைப்படம் மூலம் இயக்குநராகவும் நடிகராகவும் அறிமுகமானவர் பார்த்திபன்.
நடிகனாக வேண்டும் என்ற ஆசையில் சினிமாவில் வாய்ப்புத் தேடிய பார்த்திபன், முதலில் பாக்யராஜ்ஜிடம் அசிஸ்டெண்ட் இயக்குநராக வேலை பார்த்தார்.
அப்போது பாக்யராஜ் இயக்கிய தாவணிக் கனவுகள் படத்தில் முதன்முறையாக ஒரு காட்சியில் நடித்திருந்தார் பார்த்திபன்.
அந்தக் காட்சி குறித்தும் அதில் நடித்த அனுபவம் பற்றியும் மனம் திறந்துள்ளார் அவர்.
பார்த்திபனின் முதல் அனுபவம்
சினிமாவில் புதிதாக எதேனும் செய்யவேண்டும் என்ற ஆர்வத்தோடு இயங்கி வருபவர் பார்த்திபன். புதிய பாதை திரைப்படம் மூலம் இயக்குநராகவும் நடிகராகவும் அறிமுகமான பார்த்திபன், அதற்கு முன்பு பாக்யராஜிடம் அசிஸ்டெண்டாக வேலை பார்த்து வந்தார். நடிகனாக வேண்டும் என்ற ஆசையில் இருந்த பார்த்திபன், முதலில் அசிஸ்டெண்ட் டைரக்டராக தான் வேலை பார்த்தார்.
கே பாக்யராஜிடம் அசிஸ்டெண்ட்டாக இருந்த போது, நடிப்பில் இருந்த ஆர்வம் குறித்து அவரிடம் கூறியுள்ளார் கே பாக்யராஜ். அவரும் பார்க்கலாம் என சொல்லி வைத்திருந்த போதுதான், தாவணிக் கனவுகள் படத்தைத் தொடங்கியுள்ளார் கே பாக்யராஜ். சிவாஜி, பாக்யராஜ், ராதிகா, இளவரசி உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படம் 1984ம் ஆண்டு வெளியானது. இந்தப் படத்தில் தான் துணை நடிகராக திரையில் தன் முகம் காட்டினார் பார்த்திபன்.
அதாவது தாவணிக் கனவுகள் படத்தில் ஒரு போஸ்ட்மேன் கேரக்டர் இருந்துள்ளது. அப்போது பார்த்திபனின் அப்பா கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அதுமட்டும் இல்லாமல் அவர் போஸ்ட் மேனாக வேலை பார்த்தவர். இதனால், தாவணிக் கனவுகள் படத்தில் வரும் அந்த போஸ்ட்மேன் கேரக்டரில் நடிக்க பார்த்திபனுக்கு ரொம்பவே ஆசையாம். இந்த விஷயம் பாக்யராஜுக்கும் தெரிய வந்துள்ளது.
மேலும் பார்த்திபன் தனது ஆசையை விஷ்வா, ஜிஎம் குமார் ஆகியோரிடம் கூறியுள்ளார். எனது அப்பா தபால்காரராக வேலை பார்த்துள்ளதால் அந்த கதாபாத்திரத்தின் பின்னணி தனக்கு ஓரளவுக்கு தெரியும் எனக் கூறியுள்ளார். அதுமட்டும் இல்லாமல் விதி படத்தில் போஸ்ட்மேனாக நடித்த பாக்யராஜின் அதே காஸ்ட்யூமை பார்த்திபன் தேடிப் பிடித்து வாங்கியுள்ளார். இதனிடையே துணை இயக்குநர் கோவிந்தராஜூம் அதே போஸ்ட்மேன் பாத்திரத்தில் நடிக்க ஆசைப்பட்டுள்ளார்.
இதுவும் பாக்யராஜ் காதுகளுக்குச் செல்ல, கோவிந்தராஜை அழைத்து போஸ்ட்மேன் கேரக்டரில் பார்த்திபன் நடிக்கட்டும், அவனிடம் போஸ்ட்மேன் காஸ்ட்யூம் எடுத்துக்கொடுத்து ஸ்பாட்டுக்கு வரச் சொல்லுங்க எனக் கூறியுள்ளார். இதனால் டென்ஷனான கோவிந்தராஜ், அவரிடம் இருந்த போஸ்ட்மேன் உடையை பார்த்திபனை நோக்கி தூக்கி வீசியுள்ளார். ஆனால், பார்த்திபனோ அவர் ஏற்கனவே வாங்கி வைத்திருந்த போஸ்ட் மேன் யுனிஃபார்மை போட்டுச் சென்றாராம்.
அதுமட்டும் இல்லாமல் பார்த்திபன் தனது முதல் காட்சியில் சிவாஜியுடன் இணைந்து நடித்துள்ளார். அப்போது பார்த்திபனை அழைத்த சிவாஜி, தனது வாயில் நீண்ட நேரம் ரத்தம் வைத்தபடியே நடிக்க வேண்டும். அதனால் நீ இடையில் பிரேக் விடாமால் ஒரே டேக்கில் நடித்துவிடு என ஆர்டர் போட்டுள்ளார். அதனை புரிந்துக்கொண்டு பார்த்திபனும் சமத்தாக நடித்து முடித்துவிட்டாராம். இந்த அனுபவத்தை சமீபத்திய தனது பேட்டியில் கூறியுள்ளார் பார்த்திபன்.