Recommendation for Indias inclusion in NATO Plus | நேட்டோ பிளஸ் அமைப்பில் இந்தியாவை சேர்க்க பரிந்துரை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

வாஷிங்டன் : ‘நேட்டோ பிளஸ்’ அமைப்பை வலுப்படுத்தும் விதமாக, அதில் இந்தியாவையும் சேர்க்க, அமெரிக்கா பரிந்துரைத்துள்ளது. ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க நாடுகள் அங்கம் வகிக்கும் அமைப்பு ‘நேட்டோ’ ஆகும். இந்த அமைப்புடன் இணைந்து, உலகளாவிய பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிக்க, அமெரிக்க மற்றும் நேட்டோ நாடுகளின் ஐந்து நட்பு நாடுகளை ஒன்றிணைக்கும் ஏற்பாடாக ‘நேட்டோ பிளஸ்’ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.
இதில், பசிபிக் தீவு நாடுகளான ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, கிழக்காசிய நாடுகளான ஜப்பான், தென் கொரியா மற்றும் மேற்காசிய நாடான இஸ்ரேல் ஆகியவை உறுப்பினர்களாக உள்ளன.இந்த அமைப்பில், இந்தியாவை ஆறாவதாகச் சேர்க்க அமெரிக்கா கடந்த சில ஆண்டுகளாக முயற்சி செய்து வருகிறது.

latest tamil news

இந்நிலையில், அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையின் குழு, நேட்டோ பிளஸ் அமைப்பில் இந்தியாவை இணைக்க பரிந்துரைத்து உள்ளது.
இதில் கூறப்பட்டுள்ளதாவது:இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆக்கிரமிப்புகளை சமாளிப்பதும், தைவானின் பாதுகாப்பை உறுதி செய்வதும் தற்போது அவசியமான ஒன்று. இதற்கு, இந்தியா உட்பட நம் நட்பு நாடுகளுடனான உறவை அமெரிக்கா வலுப்படுத்த வேண்டும்.நேட்டோ பிளஸ் அமைப்பில் இந்தியாவையும் சேர்த்துக்கொள்வது, அமெரிக்கா – இந்தியா இடையிலான நெருங்கிய உறவை மேலும் வலுப்படுத்தும்.

இது, உலகளாவிய பாதுகாப்பிற்கும், இந்தோ – -பசிபிக் பிராந்தியத்தில் சீன ஆக்கிரமிப்பைத் தடுக்கவும் உதவும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக அடுத்த மாதம் அமெரிக்கா செல்ல உள்ள நிலையில், நேட்டோ பிளஸில் இந்தியாவை இணைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது சர்வதேச அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.