கூடுதல் விலை முறைகேட்டை தடுக்க, ஒரு இடத்தில் ‘டோக்கன்’ வழங்கவும், ‘டாஸ்மாக்’ கடைகளில் மது பாட்டிலை விற்கவும், தமிழக அரசு ஆலோசித்து வருகிறது.
‘டாஸ்மாக்’ கடைகளில், பாட்டிலுக்கு கூடுதலாக, 30 ரூபாய் வரை வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
இதை தடுக்க, ‘கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, கியு.ஆர்.கோடு ஸ்கேன்’ வாயிலாக, ‘டிஜிட்டல்’ முறையில் பணம் வசூலிக்க, அனைத்து கடைக்கும், விற்பனை முனைய கருவி வழங்கப்பட்டு உள்ளன. அதில் பணம் செலுத்த, வாடிக்கையாளர்கள் ஆர்வம் காட்டினாலும், ஊழியர்கள் கருவியை இயக்க மறுக்கின்றனர்.
கேரளாவில் உள்ள மது கடைகளில் ஒரு கவுன்டரில் பணம் பெற்று, ‘டோக்கன்’ வழங்கப்படுகிறது. அந்த டோக்கனை எடுத்து சென்று, மற்றொரு கவுன்டரில் வழங்கினால், மது பாட்டில் தரப்படும்.
எனவே தமிழகத்திலும், 20 – 25 மது கடைகளுக்கு பொதுவான ஒரு இடத்தில் பணம் பெற்று, ‘டோக்கன்’ வழங்குவது குறித்தும், அதை பயன்படுத்தி, எந்த கடையிலும் மது வாங்குவது குறித்தும், அரசு ஆலோசித்து வருகிறது.
இதனால் கடைகளில் கூட்டம் இருக்காது; கூடுதல் விலைக்கு மது விற்பதும் தடுக்கப்படும் என கருதப்படுகிறது.
இதுகுறித்து, ஊழியர்கள் கூறியதாவது:
கேரளாவில் மது கடை வாடகை, உடையும் பாட்டிலுக்கு இழப்பீட்டையும், அரசு வழங்குகிறது. இதனால் அம்மாநில ஊழியர்கள், மது பாட்டிலை கூடுதல் விலைக்கு விற்பதில்லை. அதேபோல், தமிழகத்திலும் மது கடை செலவினங்களை, அரசு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கடைகளில் விலை பட்டியல்
சென்னை, தலைமை செயலகத்தில், டாஸ்மாக் மாவட்ட, மண்டல மேலாளர்களுடன், மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, நேற்று ஆய்வு கூட்டம் நடத்தினார்.செந்தில்பாலாஜி பேசியதாவது:மதுபானங்களின் விலை பட்டியல், அனைத்து வாடிக்கையாளருக்கும் தெளிவாக தெரியும்படி, மதுபான கடையின் முன்புறத்தில் வைக்கப்பட வேண்டும். இதை மாவட்ட மேலாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.மது கடைகளை தவிர, மற்ற இடங்களில் மதுபானம் விற்கப்படும் இடங்களை கண்டறிந்து, போலீசாருக்கு தெரிவித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்