புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் அதிநவீன வசதிகளுடன், 5 ஸ்டார் அந்தஸ்தில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்.
நாடாளுமன்றத்துக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என மக்களவையிலும், மாநிலங்களவை யிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து புதிய நாடாளுமன்றம் கட்ட பிரதமர் மோடி கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் 10-ம் தேதி அடிக்கல் நாட்டினார். இந்த கட்டிடத்தை அதிநவீன வசதிகளுடன் டாடா புராஜெக்ட்ஸ் நிறுவனம் கட்டி முடித்துள்ளது.
இதில் நாட்டின் ஜனநாயக பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் பிரம்மாண்டமான அரசியல்சாசன அரங்கம், எம்.பி.க்கள் ஓய்விடம், நூலகம், பல்வேறு குழுக்களுக்கான அறைகள், கேன்டீன் மற்றும் பார்க்கிங் பகுதிகள் உள்ளன. இந்த கட்டிடம் முக்கோண வடிவில் நான்கு மாடி கட்டிடமாக 64,500 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. இங்குள்ள மக்களவையில் 888 உறுப்பினர்கள் சவுகரியமாக அமர முடியும், மாநிலங்களவையில் 300 பேர் அமர முடியும். கூட்டுக் கூட்டம் நடந்தால், மக்களவையில் 1,280 உறுப்பினர்கள் அமர முடியும்.
புதிய நாடாளுமன்ற கட்டிடத் தில், மின்சாரம், நீர்பயன்பாட்டை குறைக்கும் அதிநவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கு 5 நட்சத்திர அந்தஸ்து பசுமை கட்டிட சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
குளிர்காலங்களில் வெப்ப நிலையை குறிப்பிட்ட அளவில் பராமரிக்க அல்ட்ரா சோனிக் கருவிகளும் பொருத்தப்பட்டுள்ளன.
மேலும் பல நவீன வசதிகளுடன் 5 ஸ்டார் அந்தஸ்தில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். சுதந்திரத்தின் போது இந்தியர் களிடம் ஆட்சி மாறியதற்கு அடையாளமாக, நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவிடம், திருவாவடுதுறை ஆதீனம் சார்பில் வழங்கப்பட்ட தங்க செங்கோலை, நாடாளுமன்றத்தில் சபாநாயகர் இருக்கைக்கு அருகே பிரதமர் மோடி நிறுவுகிறார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்க தர்மபுரம், திருவாவடு துறை ஆதீனங்கள் டெல்லி சென்றுள்ளனர். அவர்களை பிரதமர் மோடி, தனது இல்லத்தில் நேற்றுமாலை சந்தித்து ஆசிபெற்றார். இந்நிகழ்ச்சியில், 25 அரசியல் கட்சிகள் பங்கேற்கின்றன. 20 எதிர்க்கட்சிகள் இந்த திறப்பு விழாவை புறக்கணிக்க முடிவு செய்துள்ளன.
கொள்ளை அழகு: புதிய நாடாளுமன்ற கட்டிடதிறப்பு விழாவை புறக்கணிக்கும் எதிர்க்கட்சிகளில் தேசிய மாநாட்டுகட்சி தலைவர் உமர் அப்துல்லாவும் ஒருவர். எதிர்க்கட்சிகளின் கூட்டுகடிதத்தில் அவர் கையெழுத்திட்டுள்ளார். புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் வீடியோ காட்சிகள், சமூக ஊடகங்களில் நேற்று முன்தினம் வெளியாயின. இந்நிலையில் இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள உமர் அப்துல்லா, ‘‘புதியநாடாளுமன்ற கட்டிடம் வரவேற்கத்தக்க ஒன்று அது பார்ப்பதற்கு கொள்ளை அழகுடன் உள்ளது. தொடக்கவிழா புறக்கணிப்பு ஒருபக்கம் இருந்தாலும், இந்த கட்டி டம் வரவேற்கத்தக்கது’’ என்று தெரிவித்துள்ளார்.