சென்னை: தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மத்திய கூட்டுறவு வங்கிகளில் யுபிஐ பணப் பரிவர்த்தனை வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மாநிலத்தில் ஏற்கெனவே காஞ்சிபுரம் தவிர, மற்ற 22 மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளிலும் யுபிஐ (UPI) பணப் பரிவர்த்தனை வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியிலும் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 623 நியாயவிலைக் கடைகள், கூட்டுறவு மருந்தகங்கள், கூட்டுறவு மொத்த விற்பனைப் பண்டக சாலை உள்ளிட்ட அனைத்து கூட்டுறவுநிறுவனங்களிலும் பணமற்ற பரிவர்த்தனை சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இது படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டு, மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து 33,841 நியாயவிலைக் கடைகள், 41 கூட்டுறவு விற்பனைப் பண்டக சாலைகள், 363 பிரதம கூட்டுறவுப் பண்டக சாலைகள், 380 கூட்டுறவு மருந்தகங்கள், 58 கூட்டுறவு பெட்ரோல் பங்குகள் ஆகிய அனைத்திலும் விரிவுபடுத்தப்படும் என்று கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அ.சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார்.