கர்நாடகாவில் தற்போது நடந்துமுடிந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் 135 இடங்களுடன் தனிப்பெரும்பான்மையாக ஆட்சியைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து காங்கிரஸின் நீண்ட ஆலோசனைக்குப் பிறகு கடந்த 20-ம் தேதி சித்தராமையா முதல்வராகவும், டி.கே.சிவக்குமார் துணை முதல்வராகவும் பதவியேற்றனர். அவர்களுடன் 8 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றுக்கொண்டனர்.
அதன் தொடர்ச்சியாக பெங்களூருவிலுள்ள ஆளுநர் மாளிகையில், பெண் எம்.எல்.ஏ ஒருவர் உட்பட 24 எம்.எல்.ஏ-க்கள் அமைச்சர்களாக நேற்று பதவியேற்றுக்கொண்டனர். இந்த நிலையில் அமைச்சர் பதவியேற்றுக்கொண்ட பிரியங்க் கார்கே, `சமூகத்தில் அமைதியைச் சீர்குலைக்க முயற்சி செய்தால் அம்பேத்கரின் அரசமைப்புச் சட்டத்தின் ஆற்றலைக் காட்டுவோம்’ என பா.ஜ.க-வுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
இது குறித்து பிரியங்க் கார்கே தனது ட்விட்டர் பக்கத்தில், “ஆர்.எஸ்.எஸ் அமைப்பை தடைசெய்ய பா.ஜ.க-வினர் தொடர்ந்து சவால் விடுத்து வருகின்றனர். இது பார்வையற்றவர்களின் ஆட்சியில் இவ்வளவு காலம் விளையாடியதுபோல் அல்ல. இப்போது ஒரே ஒரு முறை, அமைதியைச் சீர்குலைக்க முயற்சி செய்யுங்கள். இறந்த உடலை வைத்து அரசியல் ஆதாயம் தேட முயற்சி செய்யுங்கள். அரசியலமைப்புக்கு விரோதமான செயலைச் செய்யுங்கள். அப்போது பாபா சாஹேப் அம்பேத்கரின் அரசியல் சாசனத்தின் அதிகாரத்தைக் காட்டுவோம்” என்று பதிவிட்டிருக்கிறார்.
இதுமட்டுமல்லாமல் முன்னதாக மே 25-ம் தேதியன்று, “கர்நாடகாவில் எந்தவொரு அமைப்போ, மதமோ, அரசியல் கட்சியோ அல்லது சமூகமோ அதிருப்தி மற்றும் ஒற்றுமையின்மையை விதைத்தால் அதனைப் பொறுத்துக்கொள்ள முடியாது. பஜ்ரங் தள், பி.எஃப்.ஐ அல்லது வேறு எந்த அமைப்பாக இருந்தாலும் அவற்றின்மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுப்போம். மேலும் அவர்கள் சட்டம் ஒழுங்குக்கு அச்சுறுத்தலாக இருக்கும் பட்சத்தில், அவர்களைத் தடைசெய்யத் தயங்க மாட்டோம்” என்று கூறியிருந்தார்.