இனியாவது பேசுபொருளாகுமா மாதவிடாய் வறுமையும் மாதவிடாய் சுகாதாரமும்?#MenstrualHygieneDay

பெண்களுக்கு இயல்பாக வரும் மாதவிடாயை தீட்டாக சித்தரித்த சமூகம், ஏனோ மாதவிடாய் வறுமை ( menstrual poverty) பற்றி பேச மறுத்துவிட்டது. அது பெண்களுடைய பிரச்னை என்பதால் ஆணாதிக்க சமூகம் புறக்கணித்திருக்கலாம். மாதவிடாயை சுற்றியுள்ள மூடப்பழக்கங்களை உடைத்தெறிய வேண்டியது எந்தளவு அவசியமோ, அதே போல் மாதவிடாய் வறுமையை ஒழிக்க வேண்டியதும் அவசியம்.

இந்திய சமூகத்தில், பெண்களுக்கு மாதவிடாய் சுகாதாரம் என்பதே கேள்விக்குறியானதாக இருக்கிறது. தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் நிலையிலும் விளிம்புநிலை மக்களுக்கு கழிவறை வசதி கூட இல்லை. சென்னைக்குள் மற்றும் சென்னையை ஒட்டியுள்ள உழைக்கும் மக்களின் குடியிருப்புகளில் பெண்களுக்கு சுகாதாரமான கழிப்பறை கிடையாது, தண்ணீர் வசதி இல்லை, நாப்கின் வாங்க காசு இல்லை, வாங்கினால் சுத்தமாக அப்புறப்படுத்த முடிவதில்லை. சென்னையிலேயே இந்த நிலைமை என்றால் கிராமங்களில்….?

மாதவிடாய்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அருகில் வீடற்றவர்களுக்கான வீடு (home for homeless) என்று ஓர் இடம் இருக்கிறது. இங்கு மக்கள் சுமார் 22 ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர். சத்திரம் போல் இருக்கும் இந்த இடத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் கார்டுபோர்டு அட்டைகளால் மறைத்தபடி தனித்தனி குடும்பமாக வாழ்கின்றனர். ஆனால் இவர்கள் அனைவருக்கும் தனித்தனி குளியலறை மற்றும் கழிவறை இல்லை. நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கும் ஒரேயொரு பொதுக்கழிப்பறை தான். இது குறித்து அப்பகுதி வாழ் மக்களிடம் பேசினோம்…

“சுமார் 22 வருசமா இங்க இருக்கோம். இந்த இடத்துல பொம்புள பிள்ளைங்கள வச்சிட்டு இருக்குறது வயித்துல நெருப்பக் கட்டிட்டு இருக்குறது போல இருக்கு. ஒரே ஒரு பப்ளிக் பாத்ரூம், அதுவும் சுத்தமா இல்ல. நாங்க மட்டும் அந்த பாத்ரூம பயன்படுத்தல. வெளியில பொதுவா உள்ள மக்களும் பயன்படுத்துறாங்க இருந்தாலும் அத விட்டா வேற வழியில்லை. உள்ள போனாலே குப்புனு ஒரு நாத்தம். அங்கங்க நாப்கின் ரத்தக்கறையோட கிடக்கும். குப்பைத் தொட்டி இருந்தா தானே அதுல போடுவாங்க, அதான் இல்லையே. யார கொற சொல்ல முடியும்.

அந்த பாத்ரூம பயன்படுத்துறதால இங்குள்ள எல்லாப் பொண்ணுங்களுக்கும் பிறப்புருப்புல நோய் தொற்று வருது. நைட் நேரத்துல ஒண்ணுக்கு போறதா இருந்தாலும், நாப்கின் மாத்துறதா இருந்தாலும் பப்ளிக் டாய்லெட் போறதுக்கே பயமா இருக்கு. வெளி ஆட்கள் நடமாட்டம் இரவுல அதிகமா இருக்குறதால ஏதாவது ஆபத்து நேர வாய்ப்புகள் அதிகம்” என்று குமுறினர்.

மாதவிடாய் | மாதிரிப்படம்

சென்னை பிராட்வேயில், காக்கா தோப்பு என்ற பகுதி இருக்கிறது. இங்குள்ள வீடுகள் குருவிக்கூடுகள் போல் மிகவும் சின்னதாக இருக்கும். குறுகிய வீடுகளில் சுமார் 4 முதல் 6 பேர் தங்கி இருப்பர். சுமார் 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இத்தனை குடும்பங்களில் 10 சதவிகித குடும்பங்களுக்கு மட்டுமே தனியாக கழிவறை வசதி உள்ளது. மற்ற குடும்பங்களுக்கெல்லாம் பொதுக்கழிப்பறை தான்.

அங்கு வாழும் பெண்கள், “இங்க இருக்குறது ஒரே ஒரு பப்ளிக் டாய்லெட். அத தான் எல்லாரும் பயன்படுத்துறாங்க. பல நேரங்கள்ல தண்ணி வராது. நைட் பத்து மணி வரையும் தான் தொறந்து இருக்கும். நைட் எல்லாம் பயன்படுத்த முடியாது. அங்க சரியான பாதுகாப்பும் இல்ல. பப்ளிக் டாய்லெட்ட நாங்க மட்டும் இல்ல சாலையோரத்துல உள்ள பெண்களும் பயன்படுத்துவாங்க. எங்களுக்கு பப்ளிக் டாய்லெட் எண்ணிக்கை போதுமானதா இல்ல”, என்றனர்.

ஷாலினி மரியா லாரன்ஸ்

சமூக செயற்பாட்டாளரும் பெண்ணிய எழுத்தாளருமான ஷாலினி மரிய லாரன்ஸ்,“மாதவிடாய் குறித்த மூடநம்பிக்கைகள் அதிகமாகப் பேசப்படும் அளவுக்கு மாதவிடாய் வறுமை பெரும் பேசுபொருளாக இருப்பதில்லை. வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள பெரும்பான்மையான பெண்களுக்கு சானிட்டரி நாப்கின் வாங்கக்கூட காசிருப்பதில்லை. நவீன காலத்திலும் பெண்கள் துணிகளையும் கோணிகளையும் பயன்படுத்தி வருகின்றனர். நகரங்களில் உள்ள உழைக்கும் மக்களான ஏழை எளியவர்களின் குடியிருப்புகளிலும், கிராமப்புறங்களில் ஒடுக்கப்பட்ட மக்களின் குடியிருப்புகளிலும் வாழும் பெண்களுக்கு குளியலறை, கழிவறை வசதிகள் இருப்பதில்லை. சுகாதாரம் என்பது வசதி படைத்த மக்களால் மட்டுமே சொந்தம் கொண்டாடப்படுகிறது. ஏழை மக்களின் இந்த நிலைக்கு விதி தான் காரணமா? சுகாதாரத்திலும் ஏற்றத்தாழ்வுடன் மக்களை வைத்துள்ள அரசு தான் காரணமாக இருக்க முடியும். அரசு இது போன்ற குடியிருப்புகளில் கழிவறை எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். விளிம்புநிலை பெண்களின் மாதவிடாய் சுகாதாரத்தை உறுதிபடுத்தும் கடமை அரசுக்கு இருக்கிறது” என்றார்.

உயர்நீதிமன்ற வழக்கறிஞரும் பெண்ணிய செயற்பாட்டாளருமான சுதா காந்தி,” கிராமம், நகரம் என்ற பாரபட்சமில்லாமல் மாதவிடாய் சுகாதாரம் கேள்விக்குறியாகவே இருக்கிறது. பணம் இருப்பவர்கள் சுகாதாரத்தில் மேம்பட்டு இருக்க விளிம்புநிலை மக்கள் அடிப்படையான தேவை கூட கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள். சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் குடியிருப்புகளில் வீடுகள் மிகவும் குறுகியதாக இருக்கும் பட்சத்தில் கழிவறைக்கான இடவசதியும் குறைவாகவே உள்ளது. பல வீடுகளில் கழிவறை இருப்பதில்லை. இன்னும் எண்ணற்ற கிராமப்புறங்களில் பல காலமாக பொதுக் கழிவறை பூட்டப்ப்ட்டிருக்கிறது. இதனால் இயற்கையான கழிவுகளை வெளியேற்றவும், நாப்கின் மாற்றவும் காடுகள் போன்ற இடங்களுக்கு பெண்கள் செல்கின்றனர். இதனால் அவர்கள் பாலியல் சீண்டலுக்கும், பூச்சிக்கடிகளுக்கும் ஆளாகின்றனர். சுதந்திரம் வாங்கி இத்தனை காலம் கடந்தும் கழிவறை வசதி கூட அனைத்து மக்களுக்கும் இல்லாமல் இருப்பது நாட்டிற்கே அவமானம் ” என்றார்.

சுதா காந்தி

பெண்ணுக்கு வரும் மாதவிடாய் தீட்டல்ல, உடலியல் சுழற்சி என்ற சிந்தனை மாற்றமும், அனைத்து பெண்களுக்குமான மாதவிடாய் சுகாதரம் என்ற சமூக மாற்றமும் காலத்தின் இன்றியமையாத தேவையாக உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.