சேலம்: ஏற்காட்டில் கடந்த 8 நாட்களாக நடைபெற்று வந்த கோடை விழா மலர்க் கண்காட்சி இன்று (ஞாயிறு) மாலையுடன் நிறைவடைந்தது. ஐந்து லட்சம் மலர்களால் அமைக்கப்பட்டிருந்த மலர்ச்சிற்பங்கள், வண்ண ஒளி விளக்கு அலங்காரங்கள், தினந்தோறும் போட்டிகள் என விமரிசையாக நடைபெற்ற கோடை விழாவினை சுற்றுலாப் பயணிகள் ஒரு லட்சம் பேர் கண்டு களித்தனர்.
தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான ஏற்காட்டில், சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் 46-வது கோடை விழா மலர்க் கண்காட்சி அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் ஆகியோரால் கடந்த 21-ம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது.
சுற்றுலாப் பயணிகளை கவரும் அண்ணா பூங்காவில், பொன்னியின் செல்வன் படகு, டிராகன் வாரியர், ஹனி பீம் என பல்வேறு மலர்ச்சிற்பங்கள், அலங்கார மலர்த்தொட்டிகள் என 5 லட்சம் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மேலும், சுற்றுலா இடங்களில் இருக்கும் மரங்கள் யாவும் அலங்கார மின் விளக்குளால் இரவில் ஒளிர வைக்கப்பட்டு, ஏற்காடு விழாக்கோலம் பூண்டிருந்தது.
ஏற்காடு வந்த சுற்றுலாப் பயணிகளுக்காக அரசின் பல்வேறு துறைகள் சார்பில் கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள், செல்லப்பிராணிகள் கண்காட்சி என தினந்தோறும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் சிறப்பாக நடத்தப்பட்டன.
இந்நிலையில், கடந்த 8 நாட்களாக நடைபெற்று வந்த கோடை விழா மலர்க்கண்காட்சி இன்று மாலையுடன் நிறைவடைந்தது. நிறைவு நாளான இன்று தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் பல ஆயிரம் ஏற்காடு வந்தனர்.
இதனால், ஏற்காட்டில் அண்ணா பூங்கா, படகுத்துறை உள்பட சுற்றுலா இடங்கள் யாவிலும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் மிகுந்திருந்தது. மேலும், சுற்றுலா வந்தவர்களின் வாகனங்களால், ஏற்காட்டில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. போலீஸார் ஆங்காங்கே நின்றபடி, போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். எனினும், ஏற்காடு வருபவர்கள் எண்ணிக்கை அதிகரித்தால், மலைப்பாதையின் 17-வது கொண்டை ஊசி வளைவில் இருந்து, ஏற்காடு வரையிலான மலைப்பாதையில் கார்கள் தேங்கி நின்றன.
இதனிடையே, கோடை விழா மலர்க் கண்காட்சி நிறைவு இன்று மாலை நடைபெற்றது. சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தலைமை வகித்து, கோடை விழா மலர்க் கண்காட்சி ஏற்பாடுகளை செய்திருந்த அனைத்து துறை அதிகாரிகள், ஊழியர்களுக்கு பரிசுகள் வழங்கி கவுரவித்தார்.
விழாவில் ஆட்சியர் கார்மேகம் பேசும்போது, ‘ஏற்காட்டில் நடைபெற்ற கோடை விழா மலர்க் கண்காட்சியை சுற்றுலாப் பயணிகள் 1 லட்சம் பேர் கண்டு களித்தனர். ஏற்காட்டினை பேரூராட்சியாக மேம்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். இதன் மூலம் ஏற்காட்டில் மேலும் பல வசதிகளை செய்து தர முடியும். ஏற்காடு ஏரியைச் சுற்றி நடைமேடை அமைக்கவும், அண்ணா பூங்கா, லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட் உட்பட அனைத்து சுற்றுலா இடங்களிலும் சுற்றுலா மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
விழாவில், மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பாலசந்தர் மற்றும் அரசின் பல்வேறு துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.