பெய்ஜிங்: ஒரே நேரத்தில் ஆறு பாட்டில் மதுவை வரிசையாகக் குடித்த நபர் பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கு என்ன காரணம் என்பது குறித்தும் நாம் எப்படி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது குறித்தும் மருத்துவர்கள் விளக்கியுள்ளனர்.
உலகின் பல்வேறு நாடுகளிலும் மது விற்பனை என்பது இருந்து கொண்டு தான் இருக்கிறது. மதுவுக்கு எதிராக ஒரு தரப்பினர் தொடர்ந்து குரல் கொடுத்தாலும் மற்றொரு தரப்பினர் மதுவுக்கு ஆதரவாகவே கருத்துகளைக் கூறி வருகின்றனர்.
தனிப்பட்ட உரிமையில் அரசு தலையிடக் கூடாது என்பதே இவர்களின் வாதமாக இருக்கிறது. இந்தச் சர்ச்சை ஒரு பக்கம் தொடர்ந்தாலும் மதுவால் ஏற்படும் மரணங்கள் உலகெங்கும் நடந்து கொண்டே தான் இருக்கிறது. அப்படியொரு மோசமான சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது.
உயிரிழப்பு:
ஒரே நேரத்தில் அளவுக்கு அதிகமாக மது குடித்தால் சீனாவைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். “சீன ஓட்கா” என்று அழைக்கப்படும் பைஜியு என்ற வகை மதுவை அளவுக்கு அதிகமாகக் குடித்ததால் அவர் உயிரிழந்துள்ளார். சீனாவின் டிக்டாக் வெர்ஷனான டூயின் என்ற தளத்தில் அவர் இதை லைவாகவும் ஸ்டிரீம் செய்துள்ளார்.
அப்போது அவர் 7க்கும் அதிகமான பாட்டில் மதுவைக் குடித்ததாகக் கூறப்படுகிறது. அதன் பின்னர் அவர் லைவை முடித்துக் கொண்டார். இருப்பினும், மதுவைக் குடித்த 12 மணி நேரம் கழித்து அவர் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். மது குடித்து உயிரிழந்த அவர், கிழக்கு சீனாவின் ஜியாங்சு மாகாணத்தைச் சேர்ந்த 34 வயதான வாங் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
என்ன நடந்தது:
வாங் எப்போதும் லைவ் வீடியோவில் மது குடிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். மே 16ஆம் தேதி அவர் லைவில் சில போட்டிகளில் கலந்து கொண்டார். அதில் தொடர்ச்சியாக 3 போட்டிகளில் அவர் தோல்வியடைந்தார். இதையடுத்து அவர் தண்டனையாகச் சீன ஓட்டகாவான பைஜியுவை குடித்தார். இது 60% வரை ஆல்கஹால் கொண்டிருக்கும் ஒரு மது வகை.
ஒரே அடியாக ஏழு பாட்டில்களை நள்ளிரவு வரை குடித்துள்ளார். அதன் பிறகு அவர் லைவை முடித்துக் கொண்ட நிலையில், மறுநாள் மதியம் அவரது சடலம் கண்டறியப்பட்டுள்ளது. டூயின் தளத்தில் மது அருந்துவதை ஒளிபரப்ப தடை இருக்கிறது. ஏற்கனவே மது அருந்தியதை ஒளிபரப்பியதற்காக வாங் டூயின் தளத்தில் தடை செய்யப்பட்டிருந்தார். இருப்பினும், அவர் புதிய கணக்கை ஓபன் செய்து மீண்டும் மது குடிப்பதை ஒளிபரப்பியுள்ளார். அதைத் தொடர்ந்து அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
என்ன காரணம்:
சீனாவில் லைவ் ஸ்டிரீமிங்கில் மிகக் கடுமையான போட்டி இருக்கிறது. எனவே, அங்கு மக்கள் கவனத்தை ஈர்த்து சப்ஸ்கிரைபர்களை கூட்ட எந்த எல்லைக்கும் சென்று வருகின்றனர். அதற்கு ஒரு உதாரணம் தான் இந்தச் சம்பவம். எனவே, சமூக வலைத்தளங்களுக்குக் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நபர் திடீரென இப்படி உயிரிழக்க ஆல்கஹால் பாய்சனிங் காரணமாக இருக்கிறது. குறுகிய காலத்தில் அதிக அளவு மது குடித்தால் ஆல்கஹால் பாய்சன் ஏற்படும். ஒரே நேரத்தில் அதிக அளவு ஆல்கஹால் எடுத்துக் கொண்டால்,, சுவாசம், இதயத் துடிப்பு மற்றும் உடல் வெப்பம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் மூளையின் முக்கியமான பகுதிகளை முடக்கிவிடும். இது மரணத்திற்கும் வழிவகுக்கும்.