பெங்களூரு: கர்நாடக முதல்வர் சித்தராமையாதலைமையிலான அமைச்சரவையில், தினேஷ் குண்டு ராவ், ஹெச்.கே.பாட்டீல் உள்ளிட்ட 24 பேருக்கு அமைச்சர்களாக ஆளுநர் தாவர்சந்த் கெலாட் நேற்று பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதை தொடர்ந்து கடந்த 20-ம் தேதி முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே.சிவகுமாரும் பதவி ஏற்றனர். முதல்கட்டமாக பரமேஷ்வரா, கே.ஹெச்.முனியப்பா, எம்.பி.பாட்டீல், பிரியங்க் கார்கே உள்ளிட்ட 8 அமைச்சர்கள் மட்டும் அன்றைய தினம் பதவி ஏற்றனர்.
அமைச்சரவையில் இடம் பிடிக்க மூத்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆர்.வி.தேஷ் பாண்டே, ஹெச்.கே.பாட்டீல், ஹெச்.சி.மஹாதேவப்பா, தினேஷ் குண்டுராவ் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்டோர் இடையே கடும் போட்டி நிலவியது. சித்தராமையாவும், டி.கே.சிவ குமாரும் தங்களது ஆதர வாளர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க முயற்சித்தனர்.
டெல்லியில் ஆலோசனை: அமைச்சரவை விரிவாக்கம்குறித்து இறுதி முடிவெடுப்பதற்காக சித்தராமையாவும், டி.கே.சிவகுமாரும் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் டெல்லி சென்றனர். அங்கு காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மூத்த தலைவர்கள் சோனியா, ராகுல், பிரியங்கா ஆகியோருடன் ஆலோசனை நடத்தினர்.
லிங்காயத், ஒக்கலிகா..: அப்போது தேர்தலில் காங் கிரஸ் வெற்றிக்கு காரணமாக இருந்த பட்டியலின, லிங்காயத், ஒக்கலிகா வகுப்பினருக்கு அமைச்சரவையில் முக்கியத்துவம் அளிக்கமுடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து 24 பேர் அடங்கிய அமைச்சரவை பட்டியலை காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் நேற்று முன்தினம் நள்ளிரவில் வெளியிட்டார்.
பெங்களூருவில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் தாவர்சந்த் கெலாட் தலைமையில் அமைச்சரவை பதவியேற்பு விழா நேற்று நடைபெற்றது.
முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார்,சட்டப்பேரவை தலைவர் யு.டி.காதர் முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், ஹெச்.கே பாட்டீல், கிருஷ்ணபைரே கவுடா, ஹெச்.சிமஹாதேவப்பா, ஈஷ்வர் கண்ட்ரே,எஸ்.எஸ். மல்லிகார்ஜூன் உள்ளிட்ட24 பேருக்கு தனித்தனியாக அமைச்சர்களாக ஆளுநர் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார். அமைச்சர்களாக பதவியேற்ற 24 பேரும்ஆளுநர், முதல்வர், துணைமுதல்வர் ஆகியோரிடம் வாழ்த்து பெற்றனர்.
முதல்வர், துணை முதல்வர் தவிர்த்து 32 பேர் கொண்ட அமைச்சரவையில் லிங்காயத் சமூகத்தினர் 8, பட்டியலின வகுப்பினர் 6, ஒக்கலிகா 4, பழங்குடியினர் 3, முஸ்லிம் 2, மகளிர் 1 ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
அதிருப்தியாளர்கள் போர்க்கொடி: அமைச்சர் பதவி வழங்காததால் ருத்ரப்பா லம்பானி, டி.பி.ஜெயசந்திரா, கிருஷ்ணப்பா, ஆர்.வி.தேஷ் பாண்டே உள்ளிட்டோர் அதிருப்தி அடைந்துள்ளனர். அவர்களின் ஆதரவாளர்கள் கர்நாடகாவில் பல்வேறு இடங்களில் நேற்றுகாங்கிரஸ் தலைமையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதேபோல பாஜகவில் இருந்து வந்த ஜெகதீஷ் ஷெட்டர், லட்சுமன் சவதி ஆகியோரும் பதவிகிடைக்காததால் அதிருப்தி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.