கும்பகோணம்: கும்பகோணத்திற்கு வந்த மும்பை ரயிலுக்கு ரயில் உபயோகிப்பாளர்கள் சங்கம் மற்றும் வர்த்தகர்கள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்ட பகுதிகளில் இருந்து மும்பை நகரத்திற்கு நேரடி ரயில் இயக்க வேண்டும் என பல ஆண்டுகளாக ரயில் பயணிகள், வணிகர்கள், எம்பி எம்எல்ஏக்கள் உள்பட பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தி வந்தனர். இதே போல் தூத்துக்குடியில் இருந்து டெல்டா மாவட்டத்திற்கு நேரடி ரயில் தொடர்பு வேண்டும் என அந்த மாவட்ட ரயில்வே பயணிகள் சங்கத்தினர் வலியுறுத்தி இருந்தனர். இதை அடுத்து மும்பை சத்ரபதி சிவாஜி மகராஜ் முனையத்திலிருந்து பூனே, ரேணிகுண்டா, திருத்தணி, காஞ்சிபுரம், சிதம்பரம், கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூர், மதுரை வழியாக தூத்துக்குடிக்கு ஒரு சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக மத்திய ரயில்வே அறிவிப்பு அண்மையில் வெளியிட்டது.
அந்த சிறப்பு ரயில் கடந்த 27-ம் தேதி மாலை மும்பையில் புறப்பட்டு காலை தூத்துக்குடி சென்றடைந்தது. மறு மார்க்கத்தில் தூத்துக்குடியில் இருந்து காலை 9.45 மணிக்கு புறப்பட்டு கும்பகோணத்திற்கு மாலை 5.10 மணிக்கு வந்தடைந்தது. கும்பகோணத்திற்கு வந்த புதிய மும்பை ரயிலுக்கு, ரயில் உபயோகிப்பாளர்கள் சங்கம் மற்றும் வர்த்தகர்கள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில், மயிலாடுதுறை எம். பி ராமலிங்கம், சிறப்பு ரயிலை இயக்கி வந்த ரயில் ஓட்டுநர்கள் மனோகரன், சுகன் மற்றும் ரயில் வண்டி மேலாளர் சேரன் ஆகியோருக்கு சால்வை அணிவித்து கௌரவித்தார்.
பாரதிய ஜனதா கட்சி மாவட்டத் தலைவர் சதீஷ், தஞ்சாவூர் மாவட்ட ரயில்வே உபயோகிப்பாளர்கள் சங்க செயலாளர் ஏ. கிரி, உறுப்பினர்கள் நடராஜகுமார், ஈஸ்வர சர்மா, மனோகரன், பாபநாசம் ரயில் பயணிகள் சங்க செயலாளர் சரவணன், கும்பகோணம் அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் சோழா சி மகேந்திரன், செயலாளர் சத்யநாராயணன் உட்பட பலர் பங்கேற்றனர். பின்னர் இந்த சிறப்பு ரயில் மும்பைக்கு புறப்பட்டு சென்றது.
மேலும், இந்த சிறப்பு ரயில் இயக்கத்தை நிரந்தரமாக்க ஆவண செய்ய வேண்டும் என எம். பி ராமலிங்கத்திடம் பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.