புதுடெல்லி: செங்கோல் பற்றி கூறப்படும் தகவல்கள் பொய் என கூறிய காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷுக்கு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கண்டனம் தெரிவித்துள்ளார்.
செங்கோல் பற்றி கருத்து தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது: தமிழகத்தில் அரசியல் செய்வதற்காக பிரதமரும் அவரது ஆதரவாளர்களும் செங்கோலை பயன்படுத்துகின்றனர். தங்களின் நோக்கங்களுக்கு பொருந்தும் வகையில் உண்மைகளை இவர்கள் திரித்து கூறுகின்றனர். கம்பீரமான செங்கோலை, தமிழகத்தைச் சேர்ந்த மத அமைப்பு, சென்னையில் தயாரித்து, அதை ஜவஹர்லால் நேருவுக்கு கடந்த 1947-ம் ஆண்டு அளித்தது. ஆங்கிலேயரிடம் இருந்து இந்தியாவுக்கு ஆட்சி மாற்றத்தின் அடையாளமாக இந்த செங்கோல் வழங்கப்பட்டதாக மவுன்ட்பேட்டன், ராஜாஜி, நேரு ஆகியோர் கூறியதற்கான எந்த ஆதாரமும் இல்லை.
இந்த தகவல்கள் எல்லாம் சுத்தப் பொய். இவை சிலரின் மனதில் உருவாக்கப்பட்டு வாட்ஸ் அப் மூலம் பரப்பப்படுகிறது. தற்போது ஊடகங்களிலும் பரப்பப்படுகிறது. இந்த தகவல் ராஜாஜி பற்றி ஆய்வு செய்த அறிஞர்கள் இருவருக்கே ஆச்சர்யமாக உள்ளது. இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதாவது: இந்தியாவின் பாரம்பரியத்தை யும், கலாச்சாரத்தையும் காங்கிரஸ் கட்சி ஏன் இந்த அளவுக்கு வெறுக்கிறது? இந்தியா சுதந்திரம் பெற்றதற்கான அடையாளமாக, புதனிமான செங்கோலை, தமிழகத்தைச் சேர்ந்த சைவ மடம், பண்டிட் நேருவுக்கு வழங்கியது. ஆனால், ‘ஊன்றுகோல்’ என கூறி அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டது.
தற்போது காங்கிரஸ் மற்றொரு வெட்கக்கேடான அவமதிப்பை செய்கிறது. இந்தியா சுதந்திரம் பெற்ற நேரத்தில் செங்கோலின் முக்கியத்துவம் பற்றி புனிதமான சைவமடம் திருவாவடுதுறை ஆதீனம் கூறியதை, பொய் என காங்கிரஸ் கூறுகிறது. இவ்வாறு அமித் ஷா கூறினார்.