டெல்லியில் கப்படப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். இதில் முக்கிய அம்சமாக தமிழர்களின் கலாச்சார அடையாளமான செங்கோலை பிரதமர் மோடிக்கு தருமபுரம் ஆதீனம் வழங்கினார். அது நிரந்தர பார்வைக்காக அவைக்குள் வைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவையொட்டி, டெல்லி அம்பாலா பகுதியில், மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். சரியாக புதிய கட்டிடம் அமைந்துள்ள இடத்தில் இருந்து சில மீட்டர்கள் தூரத்தில் வீராங்கனைகள் பாலியல் தொல்லைகளுக்கு நியாயம் கோரி போராடி பேரணியாக வந்தனர்.
அவர்களை இரும்பு பேரிகேடுகள் முள்வேலிகள் அமைத்து டெல்லி காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். அப்போது தொடர்ந்து அவர்கள் முன்னேறியதால் மல்யுத்த வீராங்கனைகளை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்தனர். அவர்களை போலீஸ் வாகனத்தில் இழுத்து சென்று அடைத்தனர். இந்த சம்பவத்துக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் வெளிநாட்டில் உள்ள முதல்வர் ஸ்டாலின் இந்த சம்பவத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.
முதல்வர் ட்வீட்டில் ‘ பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் சொல்லிப் பல மாதங்கள் ஆகிவிட்டன. அவர் மீது இதுவரை அக்கட்சியின் தலைமை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மல்யுத்த வீராங்கனைகள் தொடர்ந்து தலைநகரில் போராடி வருகிறார்கள். இந்திய நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத் திறப்பு விழாவின்போது, போராட்டம் நடத்திய அவர்களை இழுத்துச் சென்றும் – தூக்கிச் சென்றும் கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. செங்கோல் முதல் நாளே வளைந்துவிட்டது என்பதையே இது காட்டுகிறது.
குடியரசுத் தலைவரையே புறந்தள்ளி, அனைத்து எதிர்க்கட்சிகளின் புறக்கணிப்புக்கும் ஆளாகி நடைபெறும் திறப்புவிழா நாளில் அராஜகமும் அரங்கேறுவதுதான் அறமா?’ என்று இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
முன்னதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ‘ ஆணவமிக்க மன்னனுடைய மக்களின் குரல்களை நசுக்கும் பணி தொடங்கியது’ என்று காட்டமாக ட்வீட் போட்டிருந்தார். அவரை அடுத்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ‘ மல்யுத்த வீரர்களின் மார்பில் இருக்கும் பதக்கங்களால், நம் நாட்டிற்கு பெருமை. அவர்களின் குரலை மத்திய அரசு இரக்கமில்லாமல் மிதித்து வருகிறது’ என விமர்சித்திருந்தார்.