சென்னை: 2023ம் ஆண்டின் இரண்டாம் பாதியில் தமிழில் ஏராளமான படங்கள் வெளியாகவுள்ளன.
சூப்பர் ஸ்டார் ரஜினி, தளபதி விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன், கார்த்தி என முன்னணி நடிகர்களின் படங்கள் அடுத்தடுத்து ரிலீஸாகின்றன.
இதனையடுத்து முன்னணி ஹீரோக்களின் படங்களில் இருந்து தொடர்ந்து அப்டேட்கள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில், ஜூன் மாதம் கோலிவுட் ரசிகர்களுக்கு இன்னும் தரமான அப்டேட்ஸ் வெளியாகவுள்ளன.
கோலிவுட் ஜூன் 2023 அப்டேட்ஸ்
கொரோனா ஊரடங்கிற்குப் பின்னர் கடந்த இரு வருடங்களாக திரையுலகம் பரபரப்பாக காணப்படுகிறது. 2022ம் ஆண்டை தொடர்ந்து 2023-லும் டாப் ஹீரோக்களின் பிரம்மாண்டமான படங்கள் வெளியாகவுள்ளன. முக்கியமாக 2023 இரண்டாம் பாதியில் ரஜினி முதல் சிவகார்த்திகேயனின் படங்கள் வரை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இதில் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள ஜெயிலர் தான். நெல்சன் இயக்கியுள்ள இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. ரஜினியுடன் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சிவ ராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் திரைப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி ரிலீஸாகவுள்ளதால், ஜூன் மாதம் ஜெயிலர் ஃபர்ஸ்ட் சிங்கிளை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாம். இதற்கான அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல், விஜய்யின் லியோ படத்தில் இருந்து கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்று ஜூன் மாதம் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. ஜூன் 22ம் தேதி விஜய் தனது 49வது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார். அதனால் விஜய் பிறந்தநாள் ஸ்பெஷலாக லியோ கிளிம்பிஸ் வீடியோ வெளியாகும் என சொல்லப்படுகிறது. லியோ படத்தை முடித்துவிட்டு வெங்கட் பிரபு இயக்கும் தளபதி 68ல் விஜய் நடிக்கவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இன்னொருபக்கம் அஜித்தின் விடமுயற்சி படத்தின் ஷூட்டிங் ஜூன் மாதம் தொடங்கவுள்ளதாம். இதற்கான அபிஸியல் அப்டேட் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், சூர்யாவின் கங்குவா படத்தின் ப்ரோமோவும் அடுத்த மாதம் வெளியாகவுள்ளதாகக் கூறப்படுகிறது. சிறுத்தை சிவா இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே ஜூன் மாதம் கேப்டன் மில்லர் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என ஏற்கனவே படக்குழு அறிவித்திருந்தது. அதனால், ஜூனில் தனுஷின் கேப்டன் மில்லர் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகவுள்ளது உறுதியாகியுள்ளது. அதேபோல், கேப்டன் மில்லர் படத்தின் ரிலீஸ் தேதி பற்றிய அறிவிப்பும் ஜூன் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வரிசையில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான், மாவீரன் படங்களின் அப்டேட்டும் ஜூன் மாதம் வெளியாகவுள்ளது. முதலில் அயலான் டீசர் வெளியாகும் என்றும், அதனைத் தொடர்ந்து மாவீரன் டீசரை படக்குழு வெளியிடும் எனவும் கூறப்படுகிறது. மாவீரன் திரைப்படம் ஜூலை 14ம் தேதியும், அயலான் தீபாவளிக்கும் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே ஜூன் 1ம் தேதி மாமன்னன் படத்தின் ட்ரெய்லர், பாடல்கள் வெளியாகவுள்ளன. மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி, வடிவேலு, ஃபஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இந்தப் படத்தில் இருந்து இரண்டு பாடல்கள் வெளியாகி ஹிட்டான நிலையில், அடுத்து ட்ரெய்லரும் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல், இந்தப் படமும் ஜூன் மாதம் ரிலீஸாகவுள்ளது.