புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்னும் சற்று நேரத்தில் திறந்து வைக்கவுள்ளார். இந்த விழாவில், பா.ஜ.க.வின் 391 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்கவிருக்கிறார்கள். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா கட்சி பங்கேற்கிறது.
மேகாலயாவின் தேசிய மக்கள் கட்சி, தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி, சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா, அ.தி.மு.க., இந்திய ஜனநாயக கட்சி, அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்கம், இந்திய குடியரசுக் கட்சி, மிசோரம் தேசிய முன்னணி, தமிழ் மாநில காங்கிரஸ், திரிபுரா பூர்வகுடி மக்கள் முன்னணி, போடோ மக்கள் கட்சி, பட்டாளி மக்கள் கட்சி, அசாம் கண பரிஷத் உள்ளிட்ட 18 கட்சிகள் திறப்பு விழாவில் பங்கேற்பதாக அறிவித்துள்ளனர்.
இவற்றில் சிவசேனாவைத் தவிர மற்ற அனைத்து கட்சிகளும் ஒரு இலக்க எண்ணிக்கையிலே நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ளனர். இந்த கட்சிகள் அனைத்தும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ளவை.
பா.ஜ.க. கூட்டணியில் இல்லாத லோக் ஜனசக்தி, பிஜு ஜனதா தளம், பகுஜன் சமாஜ், தெலுங்கு தேசம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், அகாலி தளம், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளும் திறப்பு விழாவில் பங்கேற்கின்றனர்.
குடியரசுத் தலைவரைக் கொண்டு நாடாளுமன்றத் திறப்பு விழாவை நடத்தாதற்கும், குடியரசுத் தலைவரை அழைக்காததைக் கண்டித்தும் காங்கிரஸ், தி.மு.க., திரிணாமூல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள், ஆம் ஆத்மி, பாரதிய ராஷ்ட்ரிய சமிதி, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா உள்ளிட்ட 20- க்கும் மேற்பட்ட கட்சிகள் புதிய நாடாளுமன்றத் திறப்பு விழாவைப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.