டெல்லியில் நாடாளுமன்ற புதிய கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்துள்ளார். தமிழில் மந்திரங்கள் முழங்க, ஆதீனங்கள் வழங்கிய வரலாற்று சிறப்புமிக்க செங்கோலை, மக்களவை சபாநாயகர் இருக்கையின் அருகே பிரதமர் நிறுவியுள்ளார்.
16 ஏக்கர் பரப்பளவு..! 4 தளங்கள்..! அதி நவீன வசதிகள்..! நாடு முழுவதும் இருந்து வரழைக்கப்பட்ட பிரத்யேகப் பொருட்களால் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு டெல்லியில் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கிறது, நாடாளுமன்ற புதிய கட்டிடம்..!
புதிய கட்டிடத்தை திறந்து வைக்க வந்த பிரதமர் நரேந்திர மோடி, முதலில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு சென்ற பிரதமர், பாரம்பரிய முறைப்படி வேத விற்பன்னர்கள் நடத்திய கணபதி ஹோமத்தில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுடன் இணைந்து பங்கேற்றார்.
யாகத்துக்குப் பின், தமிழகத்தைச் சேர்ந்த ஆதீனங்களிடம் பிரதமர் மோடி நெடுஞ்சாண்கிடையாக ஆசி பெற்றார். திருஞானசம்பந்தர் இயற்றிய கோளறு பதிகம் பாடப்பட்டு “அரசாள்வார் ஆணை நமதே” என்ற இறுதி வரியின் போது, ஆதீனங்கள் பிரதமரிடம் தங்கச் செங்கோலை வழங்கினர்.
மங்கல வாத்தியங்கள் இசைக்க, அரோகரா முழக்கம் ஒலிக்க, ஆதீனங்கள் புடை சூழ செங்கோலை கைகளில் ஏந்தி மக்களவைக்கு சென்றார் பிரதமர்.
மக்களவைத் தலைவர் இருக்கை அமைந்துள்ள மேடை மீது ஏறிய பிரதமர், சற்று தொலைவில் நின்று கொண்டிருந்த சபாநாயகர் ஓம் பிர்லாவை தமக்கு அருகே அழைத்தார். பின்னர் அங்கே அமைக்கப்பட்டுள்ள பிரத்யேகமான பேழை மீது பிரதமர் மோடி செங்கோலை நிறுவி மலர்களைத் தூவினார். அருகில் இருந்த குத்துவிளக்கையும் ஏற்றி வைத்தார்.
இதைத் தொடர்ந்து நாடாளுமன்ற புதிய கட்டிடத்தின் திறப்பு விழாவை குறிக்கும் கல்வெட்டுகளை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
பின்னர், புதிய நாடாளுமன்றத்தின் கட்டுமானப் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு பிரதமர் சால்வை அணிவித்து கவுரவித்து நினைவுப் பரிசுகளை வழங்கினார்.
அதன்பின், இஸ்லாம், கிறிஸ்தவம், சீக்கியம், பவுத்தம் உள்ளிட்ட சர்வ மதத் தலைவர்கள் பிரார்த்தனைகளை நடத்தினர். புதிய நாடாளுமன்ற கட்டிடம், தேசத்தை வளர்ச்சியின் புதிய உயரங்களுக்கு கொண்டு செல்லும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். மக்களுக்கு அதிகாரமளித்து, அவர்களின் கனவுகளை நனவாக வளர்த்தெடுக்கும் இடமாக இந்த கட்டிடம் அமையும் என்றும் திறப்பு விழாவுக்குப் பின் வெளியிட்ட ட்வீட் ஒன்றில் பிரதமர் தெரிவித்துள்ளார்.