தமிழ்நாட்டின் சிறப்பான மருத்துவ கல்லூரிகளை முடக்க பாஜக சதி – வைகோ விளாசல்

தமிழகத்தின் முக்கியம் வாய்ந்த ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி, திருச்சி மற்றும் தருமபுரியில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்தாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தேசிய மருத்துவ ஆணையம் ஒவ்வொரு ஆண்டும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரத்தை புதுப்பிக்கும்.

அதற்காக மருத்துவ கல்லூரிகளை ஆய்வு செய்து குறைகள் இருந்தால் கல்லூரி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்கும். பின்னர் குறைகளை சரிசெய்துகொள்ள கால அவகாசமும் கொடுக்கப்படும். அந்த வகையில் சென்னை ஸ்டான்லி, திருச்சி மற்றும் தருமபுரி மருத்துவ கல்லூரிகளில் மாணவர்கள், மருத்துவர்களின் பயோ மெட்ரிக் வருகை சரியாக இல்லாததாலும், சிசிடிவி கேமராக்கள் இல்லாததாலும் மேற்கண்ட மூன்று மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என்று நோட்டிஸ் அனுப்பப்பட்டது.

இதனால் மூன்று கல்லூரி நிர்வாகமும் கால அவகாசம் கேட்டு குறைகளை சரிசெய்துகொள்ள தீவிரம் காட்டி வருகின்றன. இந்த நிலையில் தேசிய மருத்துவ ஆணையத்தின் எச்சரிக்கைக்கு அரசியல் கட்சிகள் எதிர்வினையாற்றி வருகின்றனர். மேலும், இந்த நெருக்கடியால் நடப்பு ஆண்டில் மருத்துக்கல்விக்கான 500 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை தடைபடும் நிலைமை உருவாகி இருப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சாடியுள்ளார்.

இதுகுறித்து அவரது அறிக்கையில், தமிழகத்தின் பழமை வாய்ந்த சென்னை ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி, திருச்சி மற்றும் தருமபுரியில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரிகளின் அங்கீகாரத்தை தேசிய மருத்துவ ஆணையம் ரத்து செய்ய முடிவு செய்திருப்பது அதிர்ச்சி தருகிறது. மத்திய பாஜக அரசின் இந்நடவடிக்கையால் இந்த மூன்று கல்லூரிகளில் நடப்பு ஆண்டில் மருத்துக்கல்விக்கான 500 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை தடைபடும் நிலைமை உருவாகி இருக்கிறது.

சென்னை ஸ்டான்லி, திருச்சி, தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரிகளில் பேராசிரியர் மற்றும மாணவர்களின் ஆதாருடன் இணைக்கப்பட்ட பயோ- மெட்ரிக் வருகைப் பதிவு, சிசிடிவி கேமராக்கள் போன்றவை முறையாக இல்லாததும், பராமரிக்கப்படாததும் அங்கீகாரத்தை ரத்து செய்ததற்குக் காரணம் என தேசிய மருத்துவ ஆணையம் கூறுவதை ஏற்று கொள்ள முடியாது.

மேற்கண்ட மருத்துவக்கல்லூரி நிர்வாகங்கள் அளித்த விளக்கத்தை ஏற்க மறுத்து, அங்கீகாரத்தை ரத்து செய்தது வன்மையான கண்டனத்துக்கு உரியது. மிகச் சதாரணமான காரணங்களைக் கூறி தமிழகத்தில் சிறப்பாக இயங்கி வரும் மூன்று மருத்துவக் கல்லூரிகளை முடக்க மத்திய பாஜக அரசு முனைந்திருப்பது உள்நோக்கம் கொண்டதாகும். இதனை நியாயப்படுத்தவே முடியாது. எனவே மத்திய அரசு, சென்னை ஸ்டான்லி, திருச்சி, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யும் முடிவை கைவிட வேணடும் என்று வலியுறுத்துகிறேன்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.