புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் மக்களவை சபாநாயகர் இருக்கைக்கு வலப்புறத்தில் செங்கோலை பிரதமர் நரேந்திர மோடி நிறுவினார்.
புதிய நாடாளுமன்றக் கட்டிடம் இன்று திறப்பு விழா காண உள்ளது. இதை முன்னிட்டு, நாடாளுமன்றத்தில் மக்களவை சபாநாயகர் இருக்கைக்கு அருகில் செங்கோல் நிறுவும் வைபவம் இன்று நிகழ்ந்தேறியது. செங்கோல் நிறுவப்படுவதற்கு முன்பாக அதற்கு முறைப்படி பூஜைகள் செய்யப்பட்டன. திருவாவடுதுறை ஆதீனம் உள்ளிட்ட பல்வேறு சைவ மடங்களைச் சேர்ந்த ஆதீனங்கள் முன்னிலையில் வேத மந்திரங்களும் தேவாரமும் ஓத செங்கோலுக்கு பூஜை மேற்கொள்ளப்பட்டது. மேலும், செங்கோலுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. இதையடுத்து, புனித செங்கோல் முன்பாக பிரதமர் நரேந்திர மோடி விழுந்து வணங்கினார்.
இதையடுத்து, வேத மந்திரங்கள் ஓத, தேவாரம் பாட, மங்கள இசை இசைக்க தமிழகத்தின் திருவாவடுதுறை ஆதீனம், தருமபுரம் ஆதீனம், குன்றக்குடி ஆதீனம், மதுரை ஆதீனம், பேரூர் ஆதீனம், வேளாக்குறிச்சி ஆதீனம் உள்ளிட்ட ஆதீனங்கள் புனித செங்கோலை பிரதமர் நரேந்திர மோடியிடம் வழங்கினார்கள். புனித செங்கோலை கைகளில் ஏந்தியவாறு நாடாளுமன்ற மக்களவைக்குள் சென்ற பிரதமர் மோடி, அங்கு சபாநாயகரின் இருக்கைக்கு அருகில் செங்கோலை நிறுவினார். அப்போது சபாநாயகர் ஓம் பிர்லாவும் உடன் இருந்தார். இவ்விழாவில் அமித் ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், யோகி ஆதித்யாநாத் உள்ளிட்ட மாநில முதல்வர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
புனித செங்கோல் வரலாறு: ஆங்கிலேயர்களிடம் இருந்து நாடு சுதந்திரம் அடைந்தபோது அதை அடையாளப்படுத்தும் விதமாக மேற்கொள்ளப்பட்ட நிகழ்வே புனித செங்கோல் வழங்கும் நிகழ்வு. தமிழகத்தின் பழமையான ஆதீனமான திருவாவடுதுறை ஆதீனத்தின் சார்பில், பிரதமர் ஜவஹர்லால் நேருவிடம் இந்த செங்கோல் வழங்கப்பட்டது. இதற்காக திருவாவடுதுறை ஆதீன தம்பிரான், ஓதுவார், மங்கள இசை இசைப்பவர்கள் ஆகியோர் செங்கோலுடன் தனி விமானம் மூலம் டெல்லி சென்றனர். ஆதீன தம்பிரான் முதலில் செங்கோலை ஆங்கிலேயர்களின் கடைசி கவர்னர் ஜெனரலாக இருந்த மவுண்ட் பேட்டனிடம் வழங்கினார். பின்னர் அவரிடம் இருந்து செங்கோலை வாங்கிய அவர், அதற்கு புனித நீர் தெளித்து தேவாரம் பாடி செங்கோலை ஊர்வலமாக எடுத்துச் சென்று பிரதமர் ஜவஹர்லால் நேருவிடம் வழங்கினார். பிரதமர் ஜவஹர்லால் நேரு புனித செங்கோலைப் பெற்றுக்கொண்டார். இவ்விதமாகவே, ஆட்சி மாற்றம் நிகழ்ந்ததற்கான சடங்குகள் நிகழ்ந்தேறின.