நாட்டுக்காக பதக்கம் வாங்கிக் கொடுத்த வீரர், வீராங்கனைகளிடம் பாஜக அரசு கடுமையாக நடந்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் புகாருக்கு உள்ளான பிரிஜ் பூஷன் ஷரண் சிங் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எதுவும் எடுக்காததை அடுத்து மல்யுத்த வீரர்கள் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் போராட்டத்தை எப்படியாவது கலைத்துவிட வேண்டும் என ஒன்றிய அரசு சதித்திட்டம் தீட்டி வருகிறது.
இதற்கிடையில் நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது டெல்லி போலிஸார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் அவரை கைது செய்யவில்லை. இதனால் மல்யுத்த வீராங்கனைகள் அவரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தித் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று புதிய நாடாளுமன்றம் திறக்கப்பட்ட நிலையில், அதனை முற்றுகையிட்டு மல்யுத்த வீரர்கள் போராட்டம் நடத்த முயன்றனர். இதில் மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக ஏராளமான பொதுமக்கள், விவசாயிகள் திரண்டனர்.
ஆனால், இந்த போராட்டத்தின் போது மல்யுத்த வீரர்கள் மற்றும் பொதுமக்களை தடுப்புகள் வைத்து டெல்லி காவல்துறை தடுத்து நிறுத்தியது. ஆனால், மல்யுத்த வீரர்கள் மற்றும் பொதுமக்கள் தடுப்புகளை தாண்டி செல்ல முயன்றபோது போலிஸார் அவர்களை தாக்கி கைது செய்தனர்.
நாட்டுக்காக ஒலிம்பிக் தொடர், ஆசிய தொடர், காமன்வெல்த் தொடரில் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர், வீராங்கனைகளை ஒன்றிய பாஜக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள டெல்லி காவல்துறைதெருவில் இழுத்துச் சென்று கைது செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
டெல்லி காவல்துறையின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் பொதுமக்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
newstm.in