பாஜக கம்யூனிஸ்ட் வார்த்தை மோதல்.. சொத்தை காரணங்களுக்காவா.?. சமூகவலைதளங்களில் சமர்.!

புகழ்மிக்க மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை சொத்தை காரணங்களை குறிப்பிட்டு ரத்துசெய்வதா?

உள்நோக்கம் கொண்ட நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தனது ட்விட்டர் பதிவில்,‘‘தமிழ் நாட்டில் 3 மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் பறிக்கப்படும் என்ற அதிர்ச்சிகரமான செய்தியை தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டது, மாணவர் சேர்க்கையும் இதனால் தடைபட்டுள்ளது கண்டனத்திற்குரியதாகும்.

இந்தியாவிலேயே அதிகமான அரசு மருத்துவக் கல்லூரிகளை கொண்டுள்ள தமிழ்நாடு, மருத்துவ சேவையிலும், மருத்துவக் கல்வியிலும் சிறந்து விளங்குகிறது. இந்த நிலையில், சென்னையில் செயல்படும் புகழ்பெற்ற ஸ்டான்லின் அரசு மருத்துவக் கல்லூரி, திருச்சி கி.ஆ.பெ விசுவநாதம் மருத்துவக் கல்லூரி மற்றும் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவைகளில் – வருகைப் பதிவினை ஆதாருடன் இணைக்கவில்லை, சி.சி.டி.வி காட்சிகளை இணையம் வழியாக பார்க்க முடியவில்லை என்ற காரணங்களை சொல்லி அங்கீகாரம் ரத்து செய்வதாக தேசிய மருத்துவ ஆணையம் சொல்கிறது, மாணவர் சேர்க்கையும் தடைபட்டுள்ளது.

இந்த முயற்சி தமிழ்நாட்டின் மருத்துவக் கல்லூரி கட்டமைப்பை அவமதிக்கும் செயல் என்பதுடன், மாநில நிர்வாகத்தினை கிள்ளுக்கீரையாக கருதும் அதிகாரக் குவிப்பு போக்கும் அதில் வெளிப்படுகிறது.

அங்கீகாரம் ரத்து பற்றிய தனது அறிக்கையை தேசிய மருத்துவ ஆணையம் உடனடியாக திரும்பப் பெற வேண்டும். மாநில அரசாங்கத்தின் பதில்களை ஏற்பதுடன் – கண்காணிப்பு நடவடிக்கைகளை மத்தியப்படுத்தும் அவசியமற்ற, சாத்தியமற்ற முயற்சிகளை ஒன்றிய அரசாங்கம் திரும்பப் பெற்றிட வேண்டும் என்றும் சி.பி.ஐ(எம்) சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்’’ என கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஆனால் இதற்கு எதிர்வினை ஆற்றிய தமிழ்நாடு பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி தனது ட்விட்டர் பதிவில், ‘‘புகழ் மிக்க மருத்துவக்கல்லூரிகள் தங்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் அளவிற்கு சொத்தையான நிர்வாகத்தை நடத்திக் கொண்டிருந்தால் ரத்து செய்வதில் எந்த தவறும் இல்லை. கொடி பிடித்து கலகம் செய்ய இது தொழிற்சாலை அல்ல மருத்துவம் கற்றுக் கொடுக்கும் கல்விச்சாலை’’ என தெரிவித்துள்ளார்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.