பிரபல பாஜக நிர்வாகி எஸ்.வி.சேகருக்கு கொலை மிரட்டல்.. போலீசில் பரபரப்பு புகார்..!

நாடகத்துறையில் மிகவும் சிறப்பு பெற்று விளங்கிய எஸ்.வி.சேகர், சுமார் இருபதுக்கும் மேற்பட்ட நாடகங்களை தயாரித்து, கிட்டத்தட்ட 5,000 முறைக்கும் மேலாக நாடகங்களை மேடையில் அரங்கேற்றி உள்ளார். 1979-ல் வெளியான ‘நினைத்தாலே இனிக்கும்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், சுமார் 90-க்கும் மேற்பட்டத் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

2006-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், அதிமுக சார்பில் மைலாப்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு, அக்கட்சியுடன் ஏற்பட்ட மோதலால் 2009-ம் ஆண்டு ஜூலை மாதம் அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டார். அதன்பின், காங்கிரஸ் கட்சியில் இணைந்து அவர், சிறிது காலத்தில் அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். அதை தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வந்தார்.

இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக கட்சி, அரசியல் நிகழ்வுகளில் பங்கேற்காமல் ஒதுங்கி இருந்த எஸ்.வி.சேகர், அண்மையில் தமிழ்நாடு பாஜகவிற்குள் ஏற்பட்ட உட்கட்சி பூசலை தொடர்ந்து மீண்டும் அரசியல் பேசத் தொடங்கி இருக்கிறார். தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது நேரடியாகவும் மறைமுகமாக ட்விட்டரில் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.

நடிகர் எஸ்.வி.சேகர், கடந்த சில தினங்களாகவே தனக்கு கொலை மிரட்டல் வருவதாக கூறி சென்னை மயிலாப்பூர் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். இது தொடர்பாக அவரிடம் கேட்ட போது ‘’கடந்த சில தினங்களுக்கு முன்பு என்னை செல்போனில் ஒருவர் தொடர்பு கொண்டு ஒருமையில் ஆபாசமாக தரக்குறைவான வார்த்தைகளால் திட்டினார்.

பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக கருத்துக்கள் கூறுவதாக கூறி என்னைத் திட்டி கொலை மிரட்டல் விடுத்தார். ஆபாச வார்த்தைகள் அதிகரிக்கவே நான் போனை கட் செய்தேன். மீண்டும் சில நிமிடங்களில் 3 போன் கால்கள் தொடர்ந்து வந்து மீண்டும் ஆபாச வார்த்தைகளுடன் பேசி மிரட்டினார்.

நான் எம்எல்ஏவாக இருந்தவன். அண்ணாமலை கவுன்சிலராகக் கூட ஆகவில்லை, அவருக்கு ஆதரவாக எனக்கு கொலைமிரட்டல் விடுக்கிறார்கள். என்னுடைய வீட்டில் ஏற்கெனவே 2 முறை பெட்ரோல் குண்டு வீசப்பட்டு தாக்குதல் நடந்தது. நான் இந்துத்துவாவுக்கு ஆதரவராக பேசி வருவதாக அடிக்கடி இந்த அச்சுறுத்தல் வருகிறது.

இந்த நிலையில் எனக்கு அளிக்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பை நேற்று திரும்ப பெற்றுக் கொண்டனர். எனது உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் போலீசாரே பொறுப்பு’’ என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.