புதுடெல்லி: செங்கோலை புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் வைப்பது நாட்டின் கலாச்சாரத்தை சித்தரிப்பதாக அமையும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
நாடு சுதந்திரம் அடைந்த போது, தமிழக ஆதீனத்தால் அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேருவிடம் செங்கோல் வழங்கப்பட்டது. அந்த செங்கோலை தான் தற்போது புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நிறுவ முடிவு செய்துள்ளனர். ஜனநாயகத்தின் சின்னமான மக்களவையில், மக்களவைத் தலைவர் இருக்கைக்கு அருகில் இந்தியா விடுதலை அடைந்த
போது தமிழகத்தின் திருவாவடுதுறை ஆதீனத்தால் வழங்கப்பட்ட தமிழ் வாசகங்கள் பொறிக்கப்பட்ட செங்கோல் வைக்கப்பட உள்ளது.
இன்று நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்படும் நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த 21 ஆதினங்கள் டெல்லி சென்றுள்ளனர். மத்திய கலாச்சார அமைச்சகத்தின் சார்பில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் டெல்லி வந்துள்ள ஆதீனங்களைப் பிரதமர் நரேந்திர மோடி தனது இல்லத்தில் சந்தித்தார். அவர்களிடம் இருந்து ஆசியும் பெற்றார்.
இதைத் தொடர்ந்து விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது: தமிழ்நாடு மிகவும் புண்ணியபூமியாகத் திகழ்கிறது. நாட்டின் விடுதலைக்காக ஏராளமான தலைவர்கள் தமிழ்நாட்டில் இருந்து பாடுபட்டனர். தங்களது இன்னுயிரை ஈந்துள்ளனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரமங்கை வேலு நாச்சியார், மருது சகோதரர்கள், தேசியக் கவி சுப்பிரமணிய பாரதி உள்ளிட்ட ஏராளமான தலைவர்கள் சுதந்திரத்துக்காக பாடுபட்டனர்.
சுதந்திர வேட்கையை மக்களிடையே பரப்பினர். பாரதத் தாயின் சுதந்திரத்துக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும் பாடுபட்ட தலைவர்கள் நினைவுகூர்வது நமக்குச் சிறப்புகளைத் தரும். தமிழகத்தைச் சேர்ந்த தலைவர்களின் சுதந்திரப் போராட்டம் அளப்பரியது. இந்த விழாவில் அதை நான் எடுத்துக் கூறுவதை பெருமையாக நினைக்கிறேன். ஆனால் அவர்களது தியாகம் போற்றப்படவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது.
கடந்த 1947-ல் ஆங்கிலேயர்களிடம் இருந்து நாம் சுதந்திரம் பெற்ற போது செங்கோலைப் பெற்று ஆட்சி மாற்றம் நடைபெற்றது. ஆனால் அந்த புனிதமான செங்கோலுக்கு உரிய மரியாதை தரப்பட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால், உத்தர பிரதேச மாநிலத்தின் பிரயாக்ராஜ் ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக்’ என்று காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
தற்போது நமது அரசு அந்த செங்கோலை ஆனந்த பவனில் இருந்து வெளியே கொண்டு வந்துள்ளது. இந்த செங்கோலை ஒப்படைப்பதற்காக தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆதீனங்கள் டெல்லிக்கு வந்து ஆசீர்வாதம் வழங்கியுள்ளனர். உங்கள் ஆசீர்வாதம் எங்களை மகிழ்விக்கிறது. எல்லாம்வல்ல சிவனின் கருணையால் மீண்டும் செங்கோல் இங்கு வந்துள்ளது. நாளை திறக்கப்பட உள்ள நாடாளுமன்ற கட்டிடத்தில் அந்த செங்கோல் நிறுவப்பட உள்ளது. அந்த செங்கோலுக்கு இன்று மறுவாழ்வு கிடைத்துள்ளது.
இந்தியா எந்த அளவுக்கு ஒன்றுபட்டிருக்கிறதோ, அவ்வளவு வலுவாக இருக்கும். வளர்ச்சிக்கான நமது பாதையில் தடைகளை உருவாக்குபவர்கள் பல்வேறு சவால்களை முன்வைப்பார்கள். இந்தியாவின் முன்னேற்றத்தை சகிக்க முடியாதவர்கள் நமது ஒற்றுமையை உடைக்க முயற்சிப்பார்கள். ஆனால் உங்கள் அமைப்புகளிடமிருந்து தேசம் பெற்றிருக்கும் ஆன்மீகத்தின் வலிமை, எல்லா சவால்களையும் எதிர்கொள்ள எங்களுக்கு உதவும் என்று நான் நம்புகிறேன்.
தமிழகத்தைச் சேர்ந்த அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர், திருமூலர் ஆகியோர் தமிழின் வளர்ச்சிக்கும், ஆன்மீக வளர்ச்சிக்கும் பாடுபட்டனர். இமயமலை தமிழகத்தில் இருந்து வெகுதொலைவில் இருந்தாலும், இரண்டுக்கும் இடையில் பல்வேறு மகான்கள் தொடர்புகளை பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே ஏற்படுத்தி உள்ளனர்.
அதிகார பரிமாற்றத்தின் அடையாளமாக, 1947-ம் ஆண்டு சுதந்திர தினத்தின் போது திருவாவடுதுறை ஆதீனத்தால் சிறப்பு செங்கோல் செய்யப்பட்டு வழங்கப்பட்டது. செங்கோல் 1947-ம் ஆண்டு அதிகாரப் பரிமாற்றத்தின் அடையாளமாக மாறியது. அதேநேரத்தில் காலனித்துவ காலத்துக்கு முந்தைய புகழ்ப்பெற்ற இந்தியாவை அதன் எதிர்காலத்துடன் இணைத்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
பிரதமர் மோடி தனது பேச்சை அனைவருக்கும் வணக்கம் என்று தமிழில் பேசி தொடங்கினார். பின்னர் பேச்சை முடிக்கும்போது வணக்கம் என்று தமிழில் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து ஓம் நமச்சிவாய என்று கூறி முடித்தார்.