பிரமாண்டமான, கம்பீரமான நாடாளுமன்றக் கட்டிடம் கட்டப்பட்டு நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் நரேந்திர மோடி.
நாடாளுமன்றம் கட்டடம் திறக்க வந்த பிரதமர் மோடியை முக்கிய பிரமுகர்கள் கரகோஷம் எழுப்பி வரவேற்றனர்.புதிய நாடாளுமன்ற திறப்பு விழா தேசிய கீதத்துடன் தொடங்கியது.நாடாளுமன்றம் செங்கோல் குறித்த குறும்படங்கள் விழாவில் திரையிடப்பட்டன.
புதிய நாடாளுமன்றத்தைத் திறந்து வைத்து உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “புதிய நாடாளுமன்றத்தைத் திறந்த இந்த நாள் வரலாற்று சிறப்புமிக்கது. இது வெறும் கட்டடம் அல்ல; இந்திய மக்களின் கனவுகளைப் பிரதிபலிக்கிறது. புதிய நாடாளுமன்றத் திறப்பு விழாவில் சர்வ மத பிரார்த்தனை நடைபெற்றது. புதிய நாடாளுமன்றம் பன்முகத்தன்மையைப் பிரதிபலிக்கிறது.
புதிய பாதைகளில் பயணம் செய்வதே புதிய குறிக்கோள்களை அடைய முடியும். புதிய பாதையில் புதிய பயணத்தை நம் நாடு தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டு ஆதீனங்களின் ஆசியுடன் நாடாளுமன்ற வளாகத்தில் செங்கோல் வைக்கப்பட்டுள்ளது. செங்கோல் என்பது கடமையின் பாதையில் செல்ல வேண்டும் என்பதற்கான அடையாளம். ராஜாஜி மற்றும் ஆதீனத்தை சேர்ந்தவர்களின் பங்களிப்புடன் செங்கோல் உருவாக்கப்பட்டது.
900 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் ஜனநாயக பாரம்பரியம் கடைப்பிடிக்கப்பட்டது. சோழர் காலத்தில் நீதி மற்றும் நல்லாட்சியின் அடையாளமாக செங்கோல் விளங்கியது. ஆட்சி, அதிகார மாற்றத்துக்கான அடையாளம் செங்கோல். செங்கோல் புனிதமானது, முக்கியத்துவம் வாய்ந்தது. உலகமே இந்தியாவை உற்று நோக்குகிறது; இந்தியா முன்னேறினால் உலகமே முன்னேறும். ஆங்கிலேயர் காலத்தில் அதிகாரப் பகிர்வுக்கு பயன்பட்ட செங்கோலுக்கு உரிய மதிப்பு அளித்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த விழாவில், மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பிரதமர் தேவ கவுடா, முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், மாநில முதலமைச்சர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், உச்சநீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் சிறப்பம்சங்கள்:
டெல்லியில் அமைக்கப்பட்டுள்ள புதிய நாடாளுமன்றக் கட்டிடம் 64,500 சதுர மீட்டர் பரப்பளவில் உருவாக்கப்பட்டுள்ளது. நவீன வசதிகளுடன் நான்கு மாடிகள் கொண்ட கட்டிடமாக உருவாக்கப்பட்ட இதில், மக்களவை மற்றும் மாநிலங்களவை அரங்கங்கள் மற்றும் பல்வேறு அலுவலகங்கள் ஆலோசனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
புதிய நாடாளுமன்ற வளாகத்தைக் கட்டமைக்க மொத்த செலவு 970 கோடி ரூபாய் என மத்திய அரசு கணித்துள்ளது. புதிய நாடாளுமன்ற வளாகத்தைக் கட்டுமானம் செய்ய 26,000 டன் எஃகு மற்றும் 63,000 டன் சிமெண்ட் பயன்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது பயன்பாட்டில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் மக்களவையில் 544 உறுப்பினர்கள், மாநிலங்களவையில் 245 உறுப்பினர்கள் அமர வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
புதிய நாடாளுமன்ற வளாகத்தில் மக்களவையில் 888 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 384 உறுப்பினர்களும் அமர வசதிச் செய்யப்பட்டுள்ளது. மக்களவை மயில் வடிவத்திலும், மாநிலங்களவை தாமரை வடிவத்திலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
குடியரசுத் தலைவர் உரை போன்ற சிறப்பு நிகழ்வுகளுக்காக, மக்களவை மற்றும் மாநிலங்களவை கூட்டு அமர்வுகள் நடைபெறும் போது, 1,280 கூட்டு அமர்வுகளில் அமரலாம். நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்க, உரைகள் மற்றும் விவாதங்களின் மொழியாக்கங்களைக் கேட்க, நாடாளுமன்றக் குழு கூட்டங்களை நடத்த, நவீன வசதிகள், புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் உருவாக்கப்பட்டுள்ளன.
முழுக்க முழுக்க பசுமை கட்டிடமாகவும், சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும், அதிநவீன வசதிகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது.
1. டாடா ப்ராஜெக்ட்ஸ் லிமிடெட் மூலம் கட்டப்பட்ட புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில், இந்தியாவின் ஜனநாயக பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் பிரமாண்டமான அரசியலமைப்பு மண்டபமாக உருவாக்கப்பட்டுள்ளது.
2. எம்.பி.க்களுக்கான ஓய்வறை, நூலகம், பல குழு அறைகள், உணவு சாப்பிடும் பகுதிகள் மற்றும் ஏராளமான வாகன நிறுத்துமிடங்கள் உள்ளிட்டவைகள் உள்ளன.
3. 64,500 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில், முக்கோண வடிவில், 4 மாடி கட்டடமாக, புதிய நாடாளுமன்ற கட்டடம் உருவாக்கப்பட்டு உள்ளது.
4. புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் கியான் திவார், ஷக்தி திவார் மற்றும் கர்மா திவார் என்ற பெயரில், 3 முகப்பு வாசல்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
5. முக்கிய நபர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு என தனித்தனி நுழைவு வாயில்கள் உள்ளன்.
6. புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்ட பயன்படுத்தப்பட்டுள்ள பொருட்கள், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளன.
7. 800 மக்களவை உறுப்பினர்கள் மற்றும் 300 மாநிலங்களவை உறுப்பினர்கள் அமரும் வகையில், விசாலமாக, புதிய நாடாளுமன்றக் கட்டடம் உருவாக்கப்பட்டு உள்ளது.
8. நாடாளுமன்ற நடவடிக்கைகள் சீராக நடைபெறும் பொருட்டு, கமிட்டி அறைகளில் ஆடியோ – வீடியோ வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.
9. கூட்டு அவை நிகழ்வுகளின் போது, மக்களவை சபாநாயகர் அறையில், 1280 பேர் அமரும் வசதி செய்யப்பட்டு உள்ளது.
10. புதிய நாடாளுமன்ற கட்டடத்தில், மக்களவை பகுதி, தேசிய பறவையான மயில் போன்ற காட்சி அமைப்பிலும், மாநிலங்களவை தேசிய மலரான தாமரை காட்சி அமைப்பிலும் வடிவமைக்கப்பட்டு உள்ளன.