திருச்சி மாவட்டம் துறையூர் அருகே மணல் கடத்தலை தடுக்க சென்ற வருவாய் துறை அதிகாரி மீது தாக்குதல் நடத்தியதாக நரசிங்கபுரம் ஊராட்சி மன்ற தலைவர் உள்பட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
நரசிங்கபுரம் கிராமத்தில் மணல் கடத்தல் நடைபெறுவதாக துறையூர் தாசில்தார் வனஜாவுக்கு தகவல் கிடைத்ததையடுத்து, அவரது உத்தரவின் பேரில், வருவாய் ஆய்வாளர் பிரபாகரன் சம்பவ இடத்திற்கு விரைந்தார்.
பச்சமலை அடிவாரத்தில், அரசு புறம்போக்கு இடத்தில் மணல் கடத்தல் நடைபெறுவதை கண்ட வருவாய் ஆய்வாளர் பிரபாகரன், அங்கிருந்த ஜேசிபி வாகனத்தின் சாவியை எடுத்துச் சென்று விட்டார்.
அவரை வழிமறித்து ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரன், ஜேசிபி உரிமையாளர் தனபால் உள்ளிட்ட 3 பேர், கற்களாலும், கைகளாலும் தாக்கியதாக கூறப்படுகிறது.
மேலும் அவரை மணி என்பவர் கடித்ததாகவும் சொல்லப்படுகிறது. இதில் காயமடைந்த பிரபாகரன் துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.