திருச்சி மாவட்டம் துறையூர் தாலுக்கா நரசிங்கபுரம் கிராமத்தில் அரசு அனுமதியின்றி மணல் கடத்தல் நடைபெறுவதாக வருவாய் ஆய்வாளர் பிரபாகரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் வருவாய்த்துறை ஆய்வாளர் பிரபாகரன் தலைமையிலான அதிகாரிகள் மணல் கடத்தலில் ஈடுபடுபவரை பிடிக்க முயன்றனர்.
அப்போது திமுகவைச் சேர்ந்த நரசிங்கபுரம் ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரன் தலைமையிலான கும்பல் வருவாய் ஆய்வாளர் பிரபாகரனை கொலை வெறியுடன் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் தலையில் பலத்த காயம் அடைந்த பிரபாகரன் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வருவாய் ஆய்வாளர் பிரபாகரன் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் திமுக ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரன் மற்றும் தாக்குதல் நடத்திய கும்பலை வலை வீசி தேடி வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்டத்தில் மணல் கடத்தும் கும்பலால் கிராம நிர்வாக அலுவலர் பிரான்சிஸ் அவரது அலுவலகத்தில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்பொழுது திருச்சியில் மணல் கடத்தல் கும்பலால் அரசு அதிகாரி மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு வருவதால் கைதுப்பாக்கி வழங்க வேண்டும் என கிராம நிர்வாக அலுவலர்கள் நல சங்கத்தினர் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.