சென்னை ஸ்டான்லி மருத்துவமனை, தர்மபுரி மற்றும் திருச்சி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பேராசிரியர்களின் பற்றாக்குறை உள்ளிட்ட குறைபாடுகளை சுட்டிக்காட்டி இளநிலை மருத்துவ படிப்பிற்கான அங்கீகாரத்தை தேசிய மருத்துவர் ஆணையத்தின் இளநிலை மருத்துவர் கல்வி வாரியம் நேற்று ரத்து செய்தது. அதேபோன்று புதுச்சேரியில் உள்ள மருத்துவ கல்லூரியின் அங்கீகாரத்தையும் ரத்து செய்தது.
இந்த நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தமிழகத்தில் மேலும் 10 மருத்துவக் கல்லூரிகளின் ஏற்பளிப்பு ரத்து செய்யப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே மருத்துவப் பேராசிரியர் காலியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் “தமிழ்நாட்டில் சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, திருச்சி கி.ஆ.பெ விசுவநாதம் மருத்துவக் கல்லூரி, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி ஆகிய கல்லூரிகளின் ரத்து செய்யப்பட்ட ஏற்பளிப்பை மீண்டும் பெறுவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வரும் நிலையில், மருத்துவப் பேராசிரியர்கள் பற்றாக்குறை காரணமாக மேலும் 10 மருத்துவக் கல்லூரிகளின் ஏற்பளிப்பு ரத்து செய்யப்படும் ஆபத்து இருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியும், கவலையும் அளிக்கின்றன. அவ்வாறு எதுவும் நிகழ்ந்து விடாமல் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!
தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் அனுமதிக்கப்பட்ட 1400 பேராசிரியர் பணியிடங்களில் ஏறக்குறைய 450 பணியிடங்களும், 1600 இணைப் பேராசிரியர் பணியிடங்களில் 550 பணியிடங்களும் காலியாக இருப்பதாகக் கூறப்படுகிறது. புகழ்பெற்ற சென்னை மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட சில கல்லூரிகள் தவிர மீதமுள்ள பெரும்பான்மையான மருத்துவக் கல்லூரிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாமல் தேசிய மருத்துவ ஆணையம் விதித்துள்ள வருகைப் பதிவேட்டு கருவியில் விடுப்பு எடுத்த ஆசிரியர்களின் விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாட்டை நிறைவு செய்ய இயலாது. இருக்கும் பேராசிரியர்களை பணி நிரவல் செய்தாலும் கூட, தமிழகத்தில் உள்ள 36 அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஏறக்குறைய 40%, அதாவது 10 கல்லூரிகளில் போதிய ஆசிரியர்கள் இருக்க மாட்டார்கள் என்பதால் அவற்றின் ஏற்பளிப்பு நீக்கப்படக் கூடும்.
தமிழ்நாட்டில் இரு ஆண்டுகளாக மருத்துவப் பேராசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தப்படாததால் தான் இவ்வளவு காலியிடங்கள் ஏற்பட்டிருக்கின்றன. பதவி உயர்வு கலந்தாய்வை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 3 மாதங்களுக்கு முன் இடைக்காலத் தடை விதித்த நிலையில் அதை நீக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தடையை நீக்கி உடனடியாக கலந்தாய்வு நடத்தப்பட்டால், மருத்துவப் பேராசிரியர்களாகவும், இணைப் பேராசிரியர்களாகவும் பதவி உயர்வு வழங்குவதற்கு தகுதியான மருத்துவர்கள் ஆயிரம் பேருக்கு மேல் உள்ளனர். இதை செய்தால், தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை இல்லாமல் போய்விடும்.
தமிழ்நாட்டின் சிறப்புகளில் ஒன்று இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் அரசு மருத்துவக் கல்லூரிகளையும், மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்களையும் கொண்ட மாநிலம் என்பதாகும். இந்த மருத்துவக் கல்லூரிகளின் ஏற்பளிப்பு ரத்து செய்யப்பட்டால் தமிழகத்தின் சிறப்பே, இழுக்காக மாறிவிடும். அதைத் தடுப்பதற்காக சென்னை உயர்நீதிமன்றம் விதித்துள்ள இடைக்காலத் தடையை நீக்கி மருத்துவப் பேராசிரியர்கள் பதவி உயர்வுக்கான கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும். அதன் மூலம், காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்களை நிரப்பி, அரசு மருத்துவக் கல்லூரிகள் அனைத்து தகுதிகளுடன் நடப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்” என தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.