ம.பி.யில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுடன் தொடர்புள்ள 3 பேரை கைது செய்தது என்ஐஏ

போபால்: மத்திய பிரதேசத்தில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுடன் தொடர்புடைய 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பாக 3 வழக்கறிஞர்கள் உட்பட பலரிடம் என்ஐஏ தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

பாகிஸ்தானில் செயல்படும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புஇந்தியாவின் மத்திய பிரதேசத்தில் கால் பதித்து ரகசியமாக ஆட்களை சேர்த்து வருவதாக தேசிய புலனாய்வு அமைப்புக்கு (என்ஐஏ) தகவல் கிடைத்தது.

இதன்பேரில் மத்திய பிரதேசத்தின் ஜபல்பூர் பகுதிகளில் கடந்த26, 27-ம் தேதிகளில் என்ஐஏ அதிகாரிகள், மாநில தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் இணைந்து 13-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தினர். அப்போது ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய சையது மமூர் அலி, முகமது அடில் கான், முகமது ஷாகித் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் போபாலில் உள்ள என்ஐஏ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். 3 பேரையும் 7 நாட்கள் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இந்தவழக்கு தொடர்பாக 3 வழக்கறிஞர்கள் உட்பட பலரிடம் என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து என்ஐஏ வட்டாரங்கள் கூறியதாவது: தடை செய்யப்பட்ட சிமி அமைப்பை சேர்ந்தவர்கள் மத்திய பிரதேசத்தில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் அந்த மாநிலத்தின் ஜபல்பூர் பகுதியில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடையவர்களின் வீடு, அலுவலகங்களில் நடத்திய சோதனைகளில் முக்கிய ஆவணங்கள் கிடைத்தன. அந்த ஆவணங்களில் வரும் 2050-ம் ஆண்டில் இந்தியாவை முஸ்லிம் நாடாக மாற்ற வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

முஸ்லிம் இளைஞர்களை மூளைச் சலவை செய்து ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்த்துள்ளனர். இதற்காக வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் குழுக்களை உருவாக்கி இளைஞர்களை ஒருங்கிணைத்து உள்ளனர். தற்காப்பு கலை என்ற பெயரில்இளைஞர்களுக்கு ஆயுத பயிற்சி வழங்கி உள்ளனர். ஆயுத பயிற்சிக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி, தோட்டாக்களை பறிமுதல் செய்துள்ளோம்.

இந்தியா முழுவதும்…: பெருமளவு வெடிபொருட்களை கொள்முதல் செய்து இந்தியா முழுவதும் தீவிரவாத தாக்குதல்களை நடத்த ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர்கள் சதித் திட்டம் தீட்டி உள்ளனர். லவ் ஜிகாத் மூலம் இந்து பெண்களை முஸ்லிம் பெண்களாக மாற்ற தீவிர முயற்சி செய்துள்ளனர். இவ்வாறு என்ஐஏ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.