ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் ராமநாத சுவாமி கோயிலில் நடைபாதையில் கொளுத்தும் வெயிலால் பக்தர்கள் கடும் அவதிப்படுகிறார்கள். இதனால் குழந்தைகளை தூக்கிக் கொண்டு வெயிலில் இருந்து கால்கள் தப்பிக்க ஓடுகிறார்கள்.
ராமநாத சுவாமி திருக்கோயில், இது தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் பாண்டிய நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர், அப்பர் ஆகியோரின் பாடல் பெற்ற தலம் இதுவாகும். இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்க தலங்களுள் ஒன்றாக திகழ்கிறது.
இந்த கோயிலில் ராவணனைக் கொன்ற பாவம் தீர ராமர் வழிபட்டார் என்பதால் இங்கு பக்தர்கள் ஏராளமானோர் வருகை தருவர். இங்கு மொத்தம் 22 தீர்த்தங்கள் உள்ளன. அமாவாசை நாளில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுக்க அக்னி தீர்த்த கடலில் மக்கள் நீராடுவர்.
அது போல் இறந்தவர்களின் அஸ்தியை கரைக்கவும் ராமேஸ்வரம் செல்வர். காசி செல்ல முடியாதவர்கள் ராமேஸ்வரத்தில் கரைப்பர். இங்கு அவ்வபபோது தாய், தந்தை, உறவினர்களுக்கு திதி கொடுக்கிறார்கள் என்பதால் இங்கு நாள்தோறும் கூட்டம் அதிகமாகவே காணப்படும். மேலும் பாம்பன் பாலம், தனுஷ்கோடி சுற்றுலா தலங்களுக்கு வருகை தருவோர் ராமநாத சுவாமியை தரிசிக்க வருவர்.
ஜோதிர் லிங்கம் என்பதால் ராமநாத சுவாமி கோயிலை சுற்றி ஷாமியானா பந்தல் ஏதும் போடப்படவில்லை. இதனால் தகிக்கும் வெயிலில் பக்தர்கள் கடும் அவதிப்படுகிறார்கள். 300 அடிக்கு எந்த ஒரு நிழலும் இல்லாததால் செருப்பின்றி கோயிலுக்குள் நடக்க பக்தர்கள் சிரமப்படுகிறார்கள். நடைபாதையில் காலை வைத்தாலே கொப்பளம் போடும் அளவுக்கு வெயில் சுட்டெரிக்கிறது.
கோயிலுக்கு செல்வோர் கிழக்கு கோபுரம் வழியாக அனுமதிக்கப்படுகிறார்கள். இதனால் அவர்களுடைய காலணிகளை அங்கேயே பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்துவிட்டு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகிறார்கள். தரிசனம் முடிந்த பின்னர் இவர்கள் தெற்கு ராஜகோபுரம் வழியாக வெளியேறுகிறார்கள். கிழக்கு கோபுரத்திற்கு அருகே விட்ட காலணிகளை எடுக்க பக்தர்கள் 300 அடி தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
சுட்டெரிக்கும் வெயிலில் நடைபாதையில் அக்னி போல் பற்றி எரிவதால் காலை வைத்து சிறிது தூரம் நடந்தாலே கொப்புளம் போடும் நிலை ஏற்பட்டுள்ளது. எனினும் நிறைய பேர் வெயிலின் தாக்கத்தால் நடக்க முடியாமல் ஓட்டம் பிடித்து செல்கிறார்கள்.அது போல் பெண்களும் தங்கள் குழந்தைகளை இடுப்பில் தூக்கிக் கொண்டு செருப்பை எடுக்க ஓடுகிறார்கள்.
இந்த ராஜகோபுரம் வழியாக வாகனங்களுக்கு அனுமதி இல்லை என்பதாலும் கத்திரி வெயிலின் சூட்டை கால்கள் பொறுத்துக் கொள்ள முடியாததால் கிடைக்கும் நிழலில் ஓடி சென்று ஒதுங்கியபடியே சென்று செருப்பை எடுக்கிறார்கள். குறிப்பிட்ட நேரத்திற்கு மாடவீதியில் தண்ணீர் தெளிப்பது, தென்னை நார் தரை விரிப்புகளை நடைபாதையில் விரித்து அதன் மீது தண்ணீர் ஊற்றும் பழைய வழக்கங்கள் கைவிடப்பட்டது ஏன் என பக்தர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். வெயிலை கருத்தில் கொண்டு இந்த நடைமுறைகளை கொண்டு வரவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.