வங்கி ஊழியரைத் தாக்கிப் பணம் பறிப்பு! – சம்பவத்துக்கு மூளையாகச் செயல்பட்ட பெண் உட்பட நால்வர் கைது

ஈரோடு மாவட்டம், அரச்சலூரைச் சேர்ந்தவர் நடராஜ். தனியார் வங்கி ஊழியரான இவர், மற்ற வங்கிகளில் நகை கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் ஏலம்போகும் நிலையில் இருக்கும் நகைகளின் உரிமையாளர்களுக்குப் பணம் கொடுத்து, அந்த நகைகளை மீட்டு, தனது வங்கியில் அடமானம் வைக்கும் வேலை செய்து வருகிறார்.

கைதுசெய்யப்பட்டவர்கள்

இந்நிலையில், ரத்தீஸ்குமார் என்பவர் நடராஜனைத் தொடர்பு கொண்டு, தனது 30 பவுன் தங்க நகைகள் வங்கியில் ஏலம்போக இருப்பதால், அவற்றை மீட்டு நடராஜனின் வங்கியில் மறு அடமானம் வைக்குமாறு கேட்டிருக்கிறார். இதை நம்பி ரத்தீஸூக்கு ரூபாய் 1.1 லட்சத்தைக் கொடுக்க பெருந்துறை அருகே பொன்முடி என்ற இடத்துக்கு நடராஜ் சென்றிருக்கிறார். அப்போது காரில் வந்த சிலர், அவரை அடித்து பணத்தைப் பறித்துச் சென்றனர்.

இது குறித்து நடராஜ் அளித்த புகாரின்பேரில், பெருந்துறை போலீஸார் வழக்கு பதிவுசெய்து தனிப்படை மூலம் பணத்தை பறித்துச் சென்றவர்களைத் தேடிவந்தனர். அதில், சம்பவ இடத்துக்கு அருகே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்ததில், பணப் பறிப்புச் சம்பவத்துக்குப் பயன்படுத்தப்பட்ட கார் திருப்பூர் பதிவு எண் கொண்டது என்பது தெரியவந்தது. அதை வைத்து விசாரணை நடத்தியதில், ரத்தீஸ்குமார் தன்னுடைய நண்பர்களான சரண்நித்தி, மணிகண்டன், சரத் ஆகியோருடன் இணைந்து நடராஜனிடமிருந்து பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.

கைது

அதையடுத்து ரத்தீஸ்குமார், சரண்நித்தி, மணிகண்டன் ஆகிய மூவரைப் பிடித்து விசாரணை நடத்தியதில், நடராஜன் மூலம் ஏற்கெனவே நகையை மீட்டு மறு அடமானம் வைத்த பெருந்துறையைச் சேர்ந்த செங்காவேரி என்பவர் நடராஜனிடம் பணத்தைப் பறிக்கத் திட்டம் தீட்டியது தெரியவந்தது. இந்தத் திட்டத்தை திருப்பூரைச் சேர்ந்த தன்னுடைய நண்பரான ரத்தீஸ்குமார் மூலம் அந்தப் பெண் நிறைவேற்றியது தெரியவந்தது. இதையடுத்து, செங்காவேரியை பெருந்துறை போலீஸார் கைதுசெய்தனர். மேலும், இந்தச் சம்பவத்துக்குப் பயன்படுத்திய கார், 1.1 லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர். மேற்கொண்டு தலைமறைவாக இருக்கும் சரத் என்பவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

Loading…

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.