புதிய நாடாளுமன்ற திறப்பும், செங்கோலும் கடந்த இரு தினங்களாக நாடு முழுவதும் பேசு பொருளாக உள்ளது. ஜனநாயக செயல்பாட்டில் நம்பிக்கை இல்லாத, ஆங்கிலேயரிடம் மன்னிப்பு கேட்டு ஊக்கத் தொகை பெற்ற சாவர்க்கரின் பிறந்தநாள் அன்று நாடாளுமன்றத்தை திறப்பதும், அதேபோல் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் என்பதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் தலைவரான குடியரசு தலைவர் திறப்பு விழாவிற்கு அழைக்கப்படாததும் எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்தன.
அதேபோல் புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவை காங்கிரஸ், திமுக,
, தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட எதிர்கட்சிகள் புறக்கணித்தன. இருப்பினும் இன்று பிரதமர் மோடி புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்தார். ஆட்சி மாற்றத்தை குறிக்கும் வகையில் தமிழ் மன்னர்கள் பயன்படுத்திய செங்கோலைப் போன்று, வேறொரு செங்கோல் சபாநாயகரின் இருக்கைக்கு அருகில் வைக்கப்பட்டது.
சாவர்க்கர் பிறந்தநாளில் நாடாளுமன்றத்தை திறப்பதால், இன்றைய நாளை துக்கநாளாக அறிவித்து வீடுகள் தோறும் கருப்பு கொடி கட்ட விசிக அறைகூவல் விடுத்தது. இந்தநிலையில் விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு தனது ட்விட்டர் பதிவில், ‘‘செங்கோல் குறித்து விவாதங்கள் வந்ததும் பாஜக கும்பல் அதற்கான பதிலையும் ஆதாரத்தையும் தராமல் சினிமா பிரமுகர்களிடம் தஞ்சம் அடைந்துள்ளது.
பணமதிப்பு நீக்கம் வந்ததும் முதல் நபராக ஆதரித்தவர் ரஜினிகாந்த் தான். இப்போதும் செங்கோலை ஆதரித்து நிற்கிறார். சூப்பர் ஸ்டாரை தொடர்ந்து இசை மேதை இளையராஜாவும் பாஜகவின் செங்கோலை ஆதரித்துள்ளார். இந்த இரு ஆளுமைகளைத் தொடர்ந்து உலக நாயகன்
ஒரு படி மேலே போய், புதிய நாடாளுமன்றக்கட்டித்திறப்பு விழாவில் பங்கேற்பேன் என அறிவித்துள்ளார்.
மரியாதைக்குரிய இளையராஜா, ரஜினிகாந்த் ஆகியோர் ஆன்மீகத்தை ஏற்றுக்கொண்டு பகுத்தறிவை மறுதலிப்பவர்களாக இருப்பதால் தான் சனாதனக்கும்பல் எளிதாக அந்த இரு ஆளுமைகளையும் கையகப்படுத்த முடிந்தது. ஆனால், கமல் போன்றவர்கள் பகுத்தறிவோடு செயல்படக்கூடியவர் என நம்புகிறோம். அவருமா பாஜகவின் சதி அரசியலை புரிந்து கொள்ள முடியவில்லை?
தமிழ்நாட்டில் எப்படியாவது ஆட்சியை பிடிக்க பாஜக படாதபாடு பட்டுக்கொண்டிருப்பதை நாடே அறியும்.
எப்போதும் மதமும் மதவெறியும் தான் பாஜகவின் ஒரே வழி. இப்போது ஆதினங்களின் மடங்கள் வழியாக அரசியலை தொடங்கியுள்ளது. வடக்கே மடங்களை கைப்பற்றி அரசியல் செய்து வெற்றி பெற்றது போலவே தெற்கே மடங்களை கைப்பற்ற தொடங்கியுள்ளது பாஜக.
இது சனநாயகத்துக்கு ஆபத்தானது. இந்தியாவின் மதச்சார்பின்மை கோட்பாட்டை கட்டமைத்த புரட்சியாளர் அம்பேத்கரை அவமதிக்கும் பாஜகவோடு இணைந்து, இளையராஜா, ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசன் போன்றோரும் அவமதிக்கலாமா?
சினிமா பிரபலங்களையும் ஆதீனங்களையும் வைத்து இந்திய அரசியலமைப்புச்சட்டத்தை தகர்க்க நினைக்கும் சனாதனக்கும்பலான பாஜகவின் சதியை இன்னுமா புரிந்து கொள்ளவில்லை?’’ என கேள்வி எழுப்பியுள்ளார்.