அதிமுகவின் அதிகாரமிக்க உச்ச நாற்காலியில் எடப்பாடி பழனிசாமி அமர்ந்துவிட்டார். ஆனால் அனைத்து ஏரியாக்களும் இவரது கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டதா? என்பது கேள்விக்குறியாக தான் இருக்கிறது. குறிப்பாக தொடக்கம் முதலே தலைவலியாக இருப்பது டெல்டா மற்றும் தென் மாவட்டங்கள். ஏனெனில் சசிகலா, டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் செல்வாக்கும், இவர்கள் சார்ந்த முக்குலத்தோர் மக்களின் வாக்கு வங்கியும் எடப்பாடிக்கு எதிராக நிற்பதாக ஒரு பேச்சு அடிபடுகிறது.
எடப்பாடியின் பலம்இதை எடப்பாடி தரப்பு மறுத்தாலும் உண்மை நிலவரத்தை வெளிச்சம் போட்டு காட்டுவது தேர்தல் மட்டுமே. அதற்காக இன்னும் ஓராண்டு காத்திருக்க வேண்டியுள்ளது. தற்போதைய சூழலில் டெல்டாவில் ஆட்டம் காட்டும் நபராக பார்க்கப்படுவர் ஆர்.வைத்திலிங்கம். ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான இவர், பசையான விஷயத்தில் சிறிதும் குறை வைக்காமல் தீவிரமாக வேலை செய்து வருகிறார்.
ஆட்டம் காட்டும் வைத்திலிங்கம்சமீபத்தில் நடந்த திருச்சி மாநாட்டில் வைத்திலிங்கத்தின் பங்கு அளப்பறியது. இவரது செல்வாக்கால் ஒரத்தநாடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் எடப்பாடி நியமித்த நிர்வாகிகளின் வியூகங்கள் பெரிதாக எடுபடுவதில்லை. களப்பணியிலும் பின்னடைவு ஏற்பட்டு வருகிறதாம். இதன் பின்னணியில் வைத்தி முக்கியமான நபராக திகழ்கிறார். எனவே இவருக்கு செக் வைக்க வேண்டிய கட்டாயத்தில் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார்.
ஒரத்தநாடு அதிரடிஎனவே தான் முதல்கட்டமாக எடப்பாடி இரண்டு பட்டியலை கையிலெடுத்திருக்கிறார். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு, மதுக்கூர் ஆகிய இரண்டு பகுதிகளை தேர்வு செய்து, அங்கு நிர்வாகிகளை மாற்றி புதிதாக நம்பிக்கையான நபர்களை நியமிக்க காய்கள் நகர்த்தப்பட்டு வருகின்றன. இவர்களின் செயல்பாடுகள் தடாலடியாக இருக்க வேண்டும். வைத்திக்கு குடைச்சல் கொடுக்கும் வகையில் இருக்க வேண்டும் என விரும்புகிறார்.
டெல்டாவில் மாற்றம்இதுதொடர்பான பரிசீலனை பட்டியல் தற்போது எடப்பாடி வசம் இருக்கிறது. நேரம் வரும் போது அறிவிப்பை வெளியிட்டு நிர்வாகிகள் மாற்றத்தை அரங்கேற்றவுள்ளார். இதன் தொடர்ச்சியாக டெல்டா முழுவதும் ஒரு அதிரடி மாற்றத்தை கொண்டு வரும் திட்டமும் இருப்பதாக கூறுகின்றனர். இதற்கிடையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜிற்கு சீக்ரெட் அசைன்மென்ட் ஒன்று அளிக்கப்பட்டிருக்கிறதாம்.
மாஜி காமராஜ்இவரை பொறுத்தவரை சற்று பசையான புள்ளி. டெல்டாக்காரர். ஜானகி அணியில் இருந்து பின்னர் சசிகலா சகோதரர் திவாகரனின் தீவிர ஆதரவாளராக மாறியவர். திருவாரூர் மாவட்ட அதிமுக செயலாளர். 2021 சட்டமன்ற தேர்தலில் நன்னிலம் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனார். இரட்டை தலைமை விவகாரம் ஒற்றை தலைமையாக மாறிய போது, எடப்பாடி பக்கம் வந்தவர்.
அதிமுகவின் அரசியல் கணக்குதஞ்சாவூரில் எடப்பாடியை முன்னிலைப்படுத்தி பல்வேறு விஷயங்களை அரங்கேற்றி வருகிறார். இந்த சூழலில் வைத்திலிங்கத்தை டீல் பண்ணும் வகையில் ஸ்வீட் பாக்ஸ்களை இறக்கும் பலம் கொண்டவராக பார்க்கப்படுகிறார். எனவே தான் எடப்பாடி இவரை தேர்வு செய்திருப்பதாக ரத்தத்தின் ரத்தங்கள் கூறுகின்றனர். எடப்பாடியின் அரசியல் கணக்கு டெல்டாவில் எந்த அளவிற்கு எடுபடும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.