அகமதாபாத்: இன்று ஐபிஎல் இறுதிப் போட்டி நடைபெறும் நிலையில், அங்கே மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தமிழ்நாடு வெதர்மேன் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்
ஒவ்வொரு ஆண்டும் கோடைக் காலம் வந்தாலே கிரிக்கெட் ரசிகர்களுக்குக் கொண்டாட்டம் தான். காரணம் ஐபிஎல்.. மார்ச் மாதம் தொடங்கும் ஐபிஎல் தொடருக்கு உலகெங்கும் ரசிகர்கள் கொட்டிக் கிடக்கிறார்கள்.
கிரிக்கெட்டையும் தாண்டி இப்போது உலகின் மிகவும் பிரபலமான லீக்குகளில் ஒன்றாக ஐபிஎல் மாறிவிட்டது. அதன்படி இந்தாண்டும் கடந்த 31ஆம் தேதி ஐபிஎல் தொடர் தொடங்கியது. முதல் போட்டியில் சென்னை, குஜராத் அணிகள் மோதின.
ஐபிஎல்:
இன்று இறுதிப் போட்டி நடைபெறும் நிலையில், இப்போது மீண்டும் சென்னை, குஜராத் அணிகளே பலப்பரீட்சை நடத்துகிறது. இந்தாண்டு ஐபிஎல் தொடர் முன்பு எப்போதும் இல்லாத வகையில் மிகவும் நெருக்கமாக இருந்தது. பல போட்டிகளில் 200+ ரன்கள் அடிக்கப்பட்டன, பல போட்டிகள் கடைசி ஓவர் வரை வந்தது. இந்தாண்டு ப்ளே ஆப் சுற்றுக்கு யார் செல்வார்கள் என்பதே கடைசி நாளில் தான் தெரிய வந்தது.
சென்னையில் முதலில் நடைபெற்ற குவாலிபையர் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணி குஜராத்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு நேரடியாகத் தகுதி பெற்றது. அதைத் தொடர்ந்து அங்கு நடந்த எலிமினேட்டரில் லக்னோவை வீழ்த்தியது மும்பை. இந்தச் சூழலில் தான் நேற்று முன்தினம் இரண்டாவது மும்பை குஜராத் அணிகள் பலப்பரீட்சை நடத்தினர். இதில் மும்பை அணியை வீழ்த்தி குஜராத் அதிர்ச்சி தந்தது. இதன் மூலம் இரண்டாவது அணியாகக் குஜராத் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.
இறுதிப் போட்டி:
உலகெங்கும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த ஐபிஎல் தொடரின் இறுதிப் பட்டி இன்று நடைபெறுகிறது. குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று மாலை 7.30 மணிக்குப் போட்டி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான டிக்கெட்கள் அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிட்ட நிலையில், ரசிகர்கள் மைதானத்திற்குப் படையெடுத்துள்ளனர்.
இதற்கிடையே இன்றைய தினம் அகமதாபாத்தில் மழை பெய்யும் சூழல் உருவானது. குறிப்பாக, ஸ்டேடியத்தை சுற்றிலும் மழை மேகம் சூழ்ந்துள்ளது. இதனால் போட்டி திட்டமிட்டபடி நடைபெறுமா என்று கேள்வி எழுந்துள்ளது. இன்றைய தினம் இறுதிப் போட்டி நடைபெற வேண்டும் என்றே பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர். இதற்கிடையே இன்று போட்டி நடக்குமா.. அங்கே வானிலை எப்படி இருக்கிறது என்பது குறித்த தகவல்களைத் தமிழ்நாடு வெதர்மேன் பகிர்ந்துள்ளார்.
தமிழ்நாடு வெதர்மேன்:
இது குறித்து அவர் தனது ட்விட்டரில், “இடியுடன் கூடிய மழை வரும். அதைத் தொடர்ந்து கொஞ்ச நேரம் தூறல் இருக்கும். எனவே, போட்டி தாமதமாகத் தொடங்கும் வாய்ப்பு உள்ளது. ஆனால் அதற்குப் பிறகு போட்டி நிச்சயம் தொடங்கும். 30 நிமிடங்கள் வரை தொடர்ந்து மழை வர வாய்ப்பு இருக்கிறது” என்று பதிவிட்டுள்ளார். அதில் பைனல்ஸ் நடைபெறும் மைதானத்தை நோக்கி மழை மேகங்கள் வரும் படத்தையும் அவர் பகிர்ந்திருந்தார்.
மேலும், மற்றொரு ட்வீட்டில், “இடியுடன் கூடிய மழை ஸ்டேடியத்தை நோக்கி நகர்கிறது, குறைந்தபட்சம் 30 நிமிடங்களுக்கு மழை தொடரும். போட்டி 1000% தாமதமாகத் தான் தொடங்கும். இதில் சந்தேகமே இல்லை. கடந்த போட்டியை விடத் தாமதம் அதிகமாகவே இருக்கும்” என்று பதிவிட்டுள்ளார். இதில் அவர் பகிர்ந்துள்ள படத்தில் அகமதாபாத்தில் பெரியளவு மழை மேகங்கள் சூழ்ந்து இருப்பது தெளிவாகத் தெரிகிறது.
அவர் கடைசியாகப் பதிவிட்ட போட்டியில், “பலர் பரபரப்பாக இருப்பதால் ஒன்றைச் சொல்லிக் கொள்கிறேன். அகமதாபாத்தில் கனமழை 30 நிமிடங்களில் நின்றுவிடும், பின்னர் கொஞ்ச நேரம் தூறல் இருக்கும். இன்று போட்டி ரத்தாக வாய்ப்பு இல்லை. மைதானம் ஈரமாக இருக்கும் என்பதால் போட்டி தாமதமாகத் தொடங்கும்..
இரவு 8.30 அல்லது 9.00 மணிக்குப் போட்டி தொடங்கும் முழுமையாக 20 ஓவர்கள் போட்டி நடக்கும். ராஜஸ்தானில் இருந்து மேலும் ஒரு மழை மேகம் வருகிறது, ஆனால் அது அகமதாபாத்தை நோக்கி நகர வாய்ப்பில்லை” என்று பதிவிட்டுள்ளார்.