காபூல்: ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து குலுங்கும் பூமியால் பொதுமக்கள் பீதியில் உறைந்துள்ளனர். இன்று ஒரேநாளில் அதாவது காலையில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் இன்று மாலையிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்த பிப்ரவரி மாதம் துருக்கி, சிரியாவில் தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏறு்பட்டன. இதில் பல ஆயிரம் கட்டடங்கள் தரைமட்டமாகின. மேலும் 55 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகினர். இது மோசமான நிலநடுக்கங்களில் ஒன்றாக பதிவாகி உள்ளது.
இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் அச்சமடைந்து வருகின்றனர். உள்நாட்டு போரில் இருந்து மீண்டு தாலிபான்களிடம் சிக்கியுள்ள ஆப்கன் மக்களுக்கு நிலநடுக்கமும் அவ்வப்போது அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் தான் ஆப்கானிஸ்தானின் பைசாபாத் பகுதியில் இன்று காலையில் 11.19 மணிக்கு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கடியில் 220 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் நிலை கொண்டிருந்தால் சேதம், உயிர் பலி ஏற்படவில்லை. இருப்பினும் இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 5.2 என்ற அளவில் பதிவாகி இருந்தது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்நிலையில் தான் இன்று மாலையில் 6.26 மணிக்கு ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.8 என்ற அளவில் பதிவாகி உள்ளது. இதனையும் தேசிய நில அதிர்வு மையம் உறுதிப்படுத்தி உள்ளது. இருப்பினும் அதிர்ஷ்டவசமாக சேதம், உயிர் பலி எதுவும் ஏற்படவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனாலும் கூட இன்று மட்டும் ஒரே நாளில் 2வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டு இருப்பது அந்நாட்டு மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
முன்னதாக இன்று காலை ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் இந்தியாவின் சில இடங்களிலும் உணரப்பட்டது. டெல்லி, பஞ்சாப், ஹிரியானா, ஜம்மு காஷ்மீர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் லேசாக நிலநடுக்கம் ஏற்பட்டது. சில வினாடிகள் நீடித்த இந்த நிலநடுக்கம், காலை 11.23 மணியளவில் ஏற்பட்டதாக நிலநடுக்க ஆய்வாளர்கள் தெரிவித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.