இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் கடந்த சில வாரங்களாக வன்முறைச் சம்பவங்கள் தொடர்ச்சியாக அரங்கேறி வருகின்றன. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அந்த மாநில முதல்வர் பிரேன் சிங், “கடந்த 3-ம் தேதி மணிப்பூரில் ஏற்பட்ட வன்முறையைத் தொடர்ந்து, இந்திய ராணுவம் வன்முறையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. வன்முறை சம்பவங்கள் மற்றும் பொதுமக்கள்மீது தாக்குதல்களை நடத்திய நபர்களுக்கு எதிராக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்புப்படையினர் மேற்கொண்ட நடவடிக்கையில், 40-க்கும் மேற்பட்ட ஆயுதமேந்திய பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
மேலும், சிலர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். இவர்கள் குக்கி போராளிக் குழுக்களுடன் தொடர்புடையவர்கள் எனக் கூறப்படுகிறது. பாதுகாப்புப்படையினருக்கும், ஆயுதமேந்திய பயங்கரவாதிகளுக்கும் இடையே மட்டுமே துப்பாக்கிச் சண்டை நடந்திருக்கிறது. மக்களிடையே துப்பாக்கிச் சண்டை நடைபெறவில்லை. அதனால், மக்கள் அமைதி காக்க வேண்டும், ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டே மணிப்பூருக்குச் சென்றிருக்கும் நிலையில், நேற்று இரவு முதல் காங்போக்பி, சுராசந்த்பூர், பிஷ்னுபூர் உள்ளிட்ட பல பகுதிகளில் தொடர்ச்சியாக துப்பாக்கி மோதல் நடைபெற்று வருவதாகத் தகவல்கள் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.
மணிப்பூரில் மெய்தெய் சமூகத்தினர் 53 சதவிகிதம் அளவுக்கு வசித்து வருகின்றனர். அவர்கள் தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று அரசிடம் முறையிட்டனர்.
அதற்கு குக்கி, நாகா உள்ளிட்ட பழங்குடிப் பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் கடந்த 3-ம் தேதி, இரு தரப்பினரும் நடத்திய ஊர்வலத்தில் கலவரம் வெடித்தது. கலவரம் பல்வேறு மாவட்டங்களுக்குப் பரவி, மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதளவில் பாதிக்கப்பட்டது. வாகனங்கள், வீடுகள், பள்ளிகள் என அனைத்துக்கும் தீவைக்கப்பட்டன. நாட்டையே உலுக்கிய இந்தக் கலவரத்தில், 60-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.