Culture and constitution are the new barley: PM Modi | கலாசாரமும், அரசியலமைப்பும் கலந்தது புதிய பார்லி: பிரதமர் மோடி

புதுடில்லி: கலாசாரமும், அரசியலமைப்பும் கலந்தது தான் நமது பார்லிமென்ட் என்றும், இது காலத்தின் தேவை எனவும், இன்று வரலாற்று சிறப்பு மிக்க நாள் எனறும், புதிய பார்லிமென்டில் பிரதமர் மோடி ஆற்றிய முதல் உரையில் குறிப்பிட்டார்.

உற்சாக வரவேற்பு

புதிய பார்லிமென்ட் இன்று திறந்து வைக்கப்பட்டது. தொடர்ந்து, 2ம் கட்ட நிகழ்ச்சி தேசிய கீதத்துடன் துவங்கியது. புதிய பார்லிமென்டிற்கு வந்த பிரதமர் மோடியை அமைச்சர்கள், எம்.பி.,க்கள், பல்வேறு மாநில முதல்வர்கள் கைதட்டியும், ‘ மோடி, மோடி’ என கோஷம் போட்டும் வரவேற்றனர். அனைவருக்கும் வணக்கம் தெரிவித்தபடியே பிரதமர் வந்தார்.

மரியாதை

சாவர்க்கர் படத்திற்கு பிரதமர் மோடி, சபாநாயகர் ஓம்பிர்லா, பாஜ., தலைவர் நட்டா உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

ஆவணப்படம்

புது பார்லிமென்ட் குறித்த ஆவணப்படம் ஒளிபரப்பு செய்யப்பட்டது. பார்லிமென்ட் கட்டுமானம், அதன் சிறப்புகள், இடம்பெற்றுள்ள தொழில்நுட்ப வசதிகள், செய்யப்பட்டுள்ள வசதிகள், செங்கோல் குறித்த விளக்கங்கள் இடம்பெற்றன.

நாணயம் வெளியீடு

புதிய பார்லிமென்ட் திறக்கப்பட்டதை முன்னிட்டு 75 ரூபாய் நாணயம் மற்றும் தபால் தலை வெளியிடப்பட்டது.

புதிய பார்லிமென்டில் அமைந்துள்ள லோக்சபாவில் முதல்முறையாக நரேந்திர மோடி பேசியதாவது:பிரதமர் மோடி

பிரதிபலிப்பு

மே 28 எப்போதும் வரலாற்றில் பொறிக்கப்பட்டு இருக்கும். வரலாற்று சிறப்பு மிக்க தருணம் இது. 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டிற்கு கிடைத்துள்ள பரிசு புதிய பார்லிமென்ட். இந்தியர்களின் நம்பிக்கை, எதிர்பார்ப்புகளை புதிய பார்லிமென்ட் பிரதிபலிக்கிறது.

நமது தீர்மானத்தை எதிரொலிக்கிறது. இந்தியா வளரும் போது, உலகம் வளரும். இந்தியாவின் சக்தியை இன்று மீண்டும் உலகிற்கு காட்டி உள்ளோம். வார்த்தைகளை செயல்பாட்டிற்கு கொண்டு வருவது தான் பார்லிமென்ட். தன்னிறைவு இந்தியாவின் சூரிய உதயமாக புதிய பார்லிமென்ட் விளங்குகிறது.

சரியான இடத்தில் செங்கோல்

அரசு அதிகார மாற்றத்திற்கான அடையாளம், புனித சின்னமாகவும் செங்கோல். செங்கோல், நீதி நேர்மை தேசப்பற்றை பிரதிபலிக்கிறது. புனிதமான செங்கோல் தற்போது லோக்சபாவில் நிறுவப்பட்டுள்ளது. செங்கோலை மிகுந்த மதிப்போடு வணங்குகிறேன்.

செங்கோல், கடமையின் பாதையில் செல்ல வேண்டும் என்பதற்கான அடையாளம். தமிழகத்தில் இருந்து வந்து ஆசி வழங்கி, செங்கோலை வழங்கிய ஆதீனங்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். அவர்கள் முன்பு தலைவணங்குகிறேன்.

சோழ மரபில் இருந்து ராஜபாதையின் அடையாளமாக செங்கோல் திகழ்கிறது செங்கோலின் கவுரவத்தை மீண்டும் பறைசாற்றுவோம். தமிழகத்தின் செங்கோல் நம் அனைவருக்கும் தொடர்ந்து ஊக்கம் அளித்து கொண்டிருக்கும்.

சோழர் காலத்தில், நீதி நல்லாட்சியின் அடையாளமாக செங்கோல் இருந்தது. ஒவ்வொரு முறையும் பார்லிமென்ட் கூடும் போது, நமக்கு உத்வேகம் அளிக்கும். தற்போது சரியான இடத்தில் செங்கோல் வைக்கப்பட்டு உள்ளது.

புதிய உயரத்தை நோக்கி

ஜனநாயகம் என்பது ஒரு அமைப்பு மட்டுமல்ல. மாண்பு. இந்தியா ஜனநாயகத்தின் தாயாக விளங்குகிறது. நமது அரசியலமைப்பு சட்டம் தான் நமது வலிமை. நாட்டின் பாரம்பரியம் மற்றும் பண்பாட்டை காக்க வேண்டும். முயற்சியை தொடரும் போது முன்னேற்றமும் தொடரும். உலக நாடுகள் இந்தியாவை மிகுந்த மரியாதையுடன் பார்த்து வருகின்றன. 75 ஆண்டு சுதந்திர இந்தியா பல்வேறு சவால்களை கடந்து வந்துள்ளது. புதிய உயரத்தை நோக்கி நகர்ந்து வருகிறோம்.

பிரதிபலிப்பு

காலத்திற்கு ஏற்றவாறு நம்மை தகவமைத்து கொள்ள வேண்டும். சோழர் மற்றும் முகலாயர் காலத்து கட்டட கலைகள் வெளிநாட்டவர்களை ஈர்க்கும் வகையில் உள்ளது. இந்தியாவின் வளர்ச்சி மற்றும் குறிக்கோளை நிறைவேற்ற புதுமைகளை படைக்க வேண்டும். புதிய பார்லிமென்ட் இந்தியா வளர்ச்சியுடன், உலகத்தின் வளர்ச்சியையும் எடுத்துரைக்கும். நாட்டின் வலிமையை புதிய பார்லிமென்ட் பறைசாற்றுகிறது. ஒரே இந்தியா வலிமையான இந்தியா என்பதையும், நாட்டின் தேசிய சின்னங்களையும் பிரதிபலிக்கிறது.

காலத்தின் தேவை

புதிய பார்லிமென்ட் காலத்தின் தேவை. கலாசாரமும், அரசியலமைப்பும் கொண்டது. புதிய பார்லிமென்ட், 21ம் நூற்றாண்டில் இந்தியா முன்னிலையில் உள்ளது. புதிய தேசத்தின் அடையாளமாக புதிய பார்லிமென்ட் உள்ளது. 60 ஆயிரம் பேர் பணியாற்றும் வகையில் கட்டப்பட்டு உள்ளது. உலகிலேயே இல்லாத வகையில் டிஜிட்டல் கேலரி அமைக்கப்பட்டு உள்ளது.

ஏழைகளுக்காக

கடந்த 9 ஆண்டுகளில் ஏழைகளின் வளர்ச்சிக்காக பா.ஜ., அரசு பாடுபட்டது. அவர்களுக்காக 4 கோடி வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை கவுரவமாக கருதுகிறேன். மஹாத்மா காந்தியின் ஒத்துறையாமை இயக்கம், மக்களிடம் எழுச்சியை கொடுத்தது. இந்தியா 100வது சுதந்திர தினத்தை கொண்டாடும் போது, வளர்ச்சியடைந்த நாடாக இருக்கும். இவ்வாறு நரேந்திர மோடி பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.