12 வருடங்களுக்கு முன்!
கடந்த 2011 ஐபிஎல் சீசனில் இதே நாளில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் இறுதிப் போட்டியில் மோதின. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி 205 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக 52 பந்துகளில் 95 ரன்கள் எடுத்து அசத்தினார், முரளி விஜய். அடுத்து களமிறங்கிய ஆர்.சி.பி அணி 147 ரன்கள் மட்டுமே எடுத்து, தோல்வியடைந்தது. தொடர்ந்து இரண்டாவது முறையாக (2010,2011) சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வென்றது. இந்நிலையில், GT vs CSK இடையேயான இறுதிப் போட்டியில், சி.எஸ்.கே அணி வெற்றி பெறுமா என்பதை இன்றிரவு காண்போம்.
கோப்பை யாருக்கு?
அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் இறுதி போட்டியில் விளையாடுகின்றது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. கோப்பையை வெல்வது எந்த அணி என பல வீரர்களும் தங்களது கணிப்புகளை தெரிவித்து வருகின்றனர். இதில் மேத்யூ ஹெய்டன், ஃபாப் டூ பிளேசிஸ் மற்றும் ஶ்ரீஷாந்த் ஆகிய மூவரும் CSK அணி கோப்பையை வெல்லும் என்று கணித்துள்ளனர். அடுத்து, கெவின் பீட்டர்சன் மற்றும் வெங்கடேஷ் ஐயர் இருவரும் குஜராத் அணி கோப்பையை வெல்லும் என்று கணித்துள்ளனர். சமூக வலைதளங்களில் ரசிகர்களும் தங்களது கணிப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
தோனியின் 250:
இன்று நடைபெற உள்ள 2023 ஐபிஎல் சீசனின் இறுதிப் போட்டி தான், ஐபிஎல் தொடரில் தோனி விளையாடும் 250-வது போட்டியாகும். இந்த சாதனையைப் படைக்கும் முதல் வீரர் தோனியே ஆவார். இவரின் ஐபிஎல் கரியரில் பல சாதனைகளை படைத்துள்ளார், தோனி. ஐபிஎல் வரலாற்றில் 200+ ஸ்ட்ரைக் ரேட்டில் அதிக அரைசதங்கள் (8) அடித்த வீரர் இவரே. ஐபிஎல் போட்டிகளில் கடைசி 2 ஓவர்களில் 1000 ரன்கள் எடுத்த ஒரே வீரர் எம்.எஸ்.தோனியே ஆவார்.
தோனி பற்றி பேசியுள்ள சுனில் கவாஸ்கர், “எம்.எஸ்.தோனியால் சிஎஸ்கே அணி, இந்த 2023 ஐபிஎல் சீசனில் வெற்றிபெற வேண்டும் என்று என் மனது விரும்புகிறது.” என்று தெரிவித்துள்ளார்.
இனிமே நீ தான்.!
குஜராத் டைட்டன்ஸ் அணியின் வீரரான சுப்மன் கில், இந்த ஐபிஎல் தொடர் முழுவதும் சிறப்பாகவே விளையாடி வருகின்றார். பல முன்னணி ஜாம்பவான்கள் இவரை பெரிதும் பாராட்டி வருகின்றனர். அந்த வரிசையில் பேட்டி ஒன்றில் பேசிய கபில் தேவ், “இன்றைய முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவராக கில் இடம்பெறுவதற்கு முன், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அவர் நன்றாக கவனம் செலுத்த வேண்டும். சுனில் கவாஸ்கருக்கு பிறகு, சச்சின் நல்ல பேட்ஸ்மேனாக உருவெடுத்தார். சச்சினுக்கு பிறகு, தற்போது விராட் கோலி அந்த இடத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இவர்களைத் தொடர்ந்து சுப்மன் கில், தனது வியக்கத்தக்க திறமையுடன் உலக கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தத் தயாராகி வருவது இந்திய கிரிக்கெட்டிற்கு அதிர்ஷ்டமான ஒன்று,” என தெரிவித்துள்ளார்.
GT -யின் 3 அரண்கள்:
நடப்பு 2023 ஐபிஎல் சீசனில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களின் பட்டியலில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் மூன்று பௌலர்கள், முதல் மூன்று இடத்தை பிடித்து அசத்தியுள்ளனர். முதலிடத்தில் முகமது ஷமி, 16 போட்டிகளில் விளையாடி 28 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இரண்டாவதாக 16 போட்டிகளில் 27 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார், ரஷித் கான். மூன்றாவதாக, 13 போட்டிகளில் மட்டுமே விளையாடி 24 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார், மோஹித் சர்மா. இந்த தொடரில் குஜராத் அணியின் பௌலிங் ஆர்டரில் தடுப்பு அரண்களாக இந்த மூவரும் செயல்பட்டு வருகின்றனர். ஐபிஎல் வரலாற்றிலேயே, ஒரே சீசனில் அதிக விக்கெட்டுகளை எடுத்த மூன்று வீரர்களும் ஒரே அணியில் இடம்பெற்றிருப்பது இதுவே முதல் முறையாகும்.