சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதவிருந்த இறுதிப்போட்டி இன்று திடீர் மழையால் தடைப்பட்டது. இப்படியான பெருமழையை இன்று யாருமே எதிர்பார்க்கவில்லை. விட்டுவிட்டுப் பெய்த மழையில், போட்டி எப்போது வேண்டுமானாலும் தொடங்கலாம் எனக் கடைசிவரை காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 11 மணி அளவில் மழை நின்றாலும், தேங்கியிருக்கும் மழைநீரை வெளியேற்றவே கட் ஆஃப் டைம் (12.06 am) தாண்டிவிடும் என்பதால் போட்டி ‘ரிசர்வ் டே’க்குச் செல்லும் என அறிவிக்கப்பட்டது.
இப்போது ரசிகர்களுக்கு இருக்கும் சந்தேகம், நாளையும் மழை பெய்தால் என்னவாகும் என்பதுதான். இன்று போட்டியை நடத்த என்னென்ன சாத்தியக்கூறுகள் எல்லாம் விவாதிக்கப்பட்டதோ அதேதான் நாளையும் நடக்கும். இரவு 9.35 மணிக்கு முன்பு போட்டி தொடங்கப்பட்டால் முழு 20 ஓவர்களும் வீசப்படும். மொத்தமாக, நள்ளிரவு 12.06 வரை கட் ஆஃப் டைம் இருக்கும். அதற்குள் தொடங்கினால் குறைந்தது 5 ஓவர் போட்டியை நடத்த முடியும். அதையும் நடத்த முடியாவிட்டால், சூப்பர் ஓவர் நடத்த முடியுமா என ஆலோசிக்கப்படும். அப்படியும் இல்லை என்றால் புள்ளிப்பட்டியலில் முன்னிலை வகித்த அணியே வெற்றியாளர் என அறிவிக்கப்படும்.
இதன்படி, முதல் குவாலிஃபையர் 1-ல் வெற்றிபெற்று முதல் அணியாக இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றிருந்தாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் ஆக முடியாது. மாறாக, லீக் போட்டிகளின் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த குஜராத் டைட்டன்ஸ் அணியே சாம்பியன் என அறிவிக்கப்படும். சிஎஸ்கே ரசிகர்கள் நம்பவில்லை என்றாலும் இதுதான் நிஜம். ஐபிஎல் விதிகள் அப்படித்தான் வகுக்கப்பட்டிருக்கின்றன.
நாளையும் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை அறிக்கைகள் சொன்னாலும் இன்று போல அல்லாமல் போட்டி நல்ல முறையில் நடத்தப்பட்டுச் சிறந்த அணி எதுவென்ற முடிவு எட்டப்படும் என்பதே அனைவரின் நம்பிக்கையாகவும் இருக்கிறது.