சென்னை: இந்தியில் உருவான தி கேரளா ஸ்டோரி திரைப்படம் மே 5ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
சுதிப்தோ சென் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஆதா ஷர்மா, சித்தி இத்னானி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
தி கேரளா ஸ்டோரி மத வெறுப்பை தூண்டும் வகையில் உண்மைக்குப் புறம்பான படம் என கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் தி கேரளா ஸ்டோரி படம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
தி கேரளா ஸ்டோரி கதை உண்மையல்ல
சுதிப்தோ சென் இயக்கியுள்ள தி கேரளா ஸ்டோரி திரைப்படம் இந்த மாதம் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தியில் உருவான இந்தப் படம் பல மொழிகளிலும் வெளியாகியிருந்தது. ஆதா ஷர்மா, சித்தி இத்னானி உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படத்தை தடைசெய்ய வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகளும் சமூக அமைப்புகளும் கோரிக்கை விடுத்திருந்தன.
மதவெறுப்பு பிரசாரத்துடன் உருவாகியுள்ள தி கேரளா ஸ்டோரி படத்தில், கேரளாவைச் சேர்ந்த 32000 பெண்கள் சிரியாவுக்கு கடத்தப்பட்டு முஸ்லிமாக மதமாற்றம் செய்யப்பட்டதாக சித்தரிக்கப்பட்டிருந்தது. மேலும், அவர்கள் தீவிரவாத செயல்களில் ஈடுபடுவதாகவும் பாலியல் அடிமைகளாக பயன்படுத்தப்படுவதாகவும் இந்தப் படத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
லவ் ஜிகாத் என்ற போர்வையில் தான் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதாக இயக்குநர் சுதிப்தோ சென் இப்படத்தில் கூறியிருந்தார். இது முஸ்லிம்கள் மீதான பகிரங்க வெறுப்புப் பிரசாரம் என கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் தி கேரளா ஸ்டோரி படத்துக்கு தடைக் கேட்டு கேரளா உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டன. ஆனால், படத்துக்கு தடைவிதிக்க நீதிமன்றங்கள் மறுப்புத் தெரிவித்துவிட்டன.
அதேநேரம், தி கேரளா ஸ்டோரி படத்தின் கதை முழுக்க முழுக்க கற்பனையானது தான் என இயக்குநர் சுதிப்தோ சென் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இப்படம் குறித்து நடிகர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார். பிரசாரப் படங்களுக்கு எதிரானவன் என நான் ஏற்கனவே கூறிவிட்டேன். தி கேரளா ஸ்டோரி உண்மைக் கதை எனக் கூறினால் மட்டும் போதாது, அது உண்மையாக இருக்க வேண்டும். தி கேரளா ஸ்டோரி படத்தில் காட்டப்பட்ட எதுவும் உண்மையில்லை எனக் கூறியுள்ளார்.
முன்னதாக கமல்ஹாசனின் விஸ்வரூபம் திரைப்படம் வெளியான போது, அது முஸ்லிம்களுக்கு எதிரானது தடை கேட்டு போராட்டம் நடந்தது குறிப்பிடத்தக்கது. இதனிடையே தி கேரளா ஸ்டோரி படத்தின் கதைக்கு எதிராக பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக், இயக்குநர் அனுராக் காஷ்யப் ஆகியோர் கருத்து தெரிவித்து சர்ச்சையாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தி கேரளா ஸ்டோரி திரைப்படம் இதுவரை 200 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.