நடிகர்கள்: சானியா மல்கோத்ரா, ஆனந்த் வி ஜோஷி
இசை: ராம் சம்பத்
இயக்கம்: யசோவர்தன் மிஷ்ரா
நேரம்: 1 மணி நேரம் 55 நிமிடங்கள்
ஓடிடி: நெட்பிளிக்ஸ்
சென்னை: Kathal என்றதுமே ஏதோ இந்தியில் ஒரு காதல் படம் எடுத்து வைத்திருக்கிறார்கள் என்றே பலரும் நினைத்து விடுவர். ஆனால், இந்தியில் Kathal என்றால் பலாப்பழம்.
எப்படின்னே இதுல லைட் எரியுதுன்னு பெட்ராமாக்ஸை அமுக்கி செந்தில் காமெடி பண்ணினாரோ அதே போல பலாப்பழத்தை வைத்து ஒரு பக்காவான அரசியல் நய்யாண்டி படமாக இந்த படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகி உள்ளது.
தமிழ் டப்பிங்கிலேயே வசனம் முதல் லிப்சிங்க் வரை கச்சிதமாக இருக்கும் இந்த படத்தை தாராளமாக இந்த வீக்கெண்ட் வீட்டில் இருந்தபடியே ரசிகர்கள் பார்த்து ரசிக்கலாம். சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் இந்த படத்தின் விமர்சனத்தை இப்போது பார்க்கலாம் வாங்க..
பலாப்பழம் திருடுப்போன கதை: கதல் (பலாப்பழம்) இப்படியொரு படத்தை இயக்குநர் யசோவர்தன் மிஷ்ரா இயக்கி உள்ளார். அமைதிப்படை, எல்கேஜி போல இதுவும் அரசியல் நய்யாண்டி கதை தான். இந்த படத்தில் ஹீரோயினாக தங்கல் படத்தில் சிறுமியாக நடித்த சானியா மல்கோத்ரா போலீஸ் அதிகாரி மகிமா பசூர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
எம்.எல்.ஏ. வீட்டில் உள்ள இரண்டு (உயர் (சாதி) ரக) பலாப்பழங்கள் திடீரென காணாமல் போகிறது. அந்த பலாப்பழங்களை ஊர்கா போட்டு பெரிய அரசியல் தலைவருக்கு ஐஸ் வைத்து மந்திரி பதவியை பெற நினைக்கிறார் அந்த எம்.எல்.ஏ.
ஆனால், அவருடைய ஆசையில் மண் விழுந்தது போல பலாப்பழங்கள் இரண்டும் இரவோடு இரவாக காணாமல் போய் விடுகின்றன. உடனடியாக தனது பதவி பலத்தை பயன்படுத்தி மேல் இடத்துக்கு பிரஷர் கொடுத்து ஒரு போலீஸ் ஸ்டேஷனையே வெறும் பலாப்பழத்தை தேட வைக்கிறார் அந்த எம்.எல்.ஏ.
போலீஸ் அதிகாரி மகிமா அந்த பலாப்பழத்தை கண்டுபிடித்தாரா? இல்லை அதற்கு பதிலாக எதைக் கண்டுபிடித்தார் என்பது தான் இந்த படத்தின் கதை.
சாதி அரசியல்:
பசூர் சாதியை (கீழ் சாதி) சேர்ந்த பெண் எப்படி படித்து முன்னேறி போலீஸ் அதிகாரியாக உயர்ந்தாலும், உயர்ந்த சாதி எம்.எல்.ஏ தனது வீட்டின் கார்ப்பெட்டைக் கூட மிதிக்கக் கூடாது என திட்டுவது, ஹீரோயின் சென்ற பின்னர் கோமியத்தை அங்கே ஊற்றி சுத்தப்படுத்து என சொல்வது என சாதிய அரசியலை இயக்குநர் அழுத்தம் திருத்தமாக அதே நேரத்தில் காமெடியாகவே சொல்லி இருக்கிறார்.
இன்ஸ்பெக்டராக இருக்கும் ஹீரோயினுக்கும் கான்ஸ்டபிளாக இருக்கும் ஹீரோவுக்கும் காதல் இருந்தாலும், ஹீரோவின் அப்பா அந்த பெண் கீழ் சாதி என சொல்லி அவளை கல்யாணம் பண்ண உருப்பட மாட்டாய் என திட்டும் காட்சிகளில், என்னத்த படிச்சி என்னத்த முன்னேறினாலும், இந்த கேவலமான சாதிய புத்தி ஒரு படி கூட உயரவில்லையே, பின்னர் எப்படி அது உயர்ந்த சாதியாக இருக்கும் என்கிற கேள்வியைத்தான் எழுப்புகிறது.
கதையில் செம ட்விஸ்ட்:
அந்த வீட்டில் இருந்து தோட்டக்காரன் திடீரென 3 நாட்களாக மிஸ்ஸிங் என்பதை தேடி போலீஸார் அலைய, அந்த தோட்டக்காரரோ தனது 16 வயது மகள் காணவில்லை என காவல் நிலையத்துக்கு வந்து புகார் கொடுக்க சொன்னால், ஹீரோ அவ எவன் கூடயாவது ஓடிப்போயிருப்பா என சொல்லி விரட்டி விடுகிறார்.
இதற்காக ஹீரோ, ஹீரோயினுக்கு இடையே வெடிக்கும் பிரச்சனை சிறப்பாகவே உள்ளது. தோட்டக்காரன் சிக்கிய நிலையில், அவனை வைத்து கேஸை முடித்து விட உயரதிகாரி மகிமாவுக்கு உத்தரவு போடுகிறார். அவரும் வேறு வழியில்லாமல் பிரஸ் மீட்டில் தோட்டக்காரனை குற்றவாளி போல அழைத்து வர கடைசியில் அவருடைய மனம் கேட்காமல் அந்த பலாப்பழத்தை இவர் திருடவில்லை என்றும் காணாமல் போன அந்த தோட்டக்காரரின் மகள் தான் திருடிவிட்டார் என வழக்கை திசை திருப்பி அந்த பெண்ணை தேடிக் கண்டுபிடித்து விட்டால் காணாமல் போன பலாப்பழத்தையும் கண்டுபிடித்து விடலாம் என சொல்ல அந்த பெண்ணை தேட இவருக்கு அனுமதி ஆட்டோமேட்டிக்காக கிடைக்கிறது.
கடைசியில் அந்த பெண் எங்கே சென்றார், மகிமா தேடிக் கண்டு பிடித்தாரா? அந்த பலாப்பழம் என்ன ஆனது என்பதை ரொம்ப ரிஸ்க் எடுத்துக் கொள்ளாமல் காமெடியாகவே சொல்லி படத்தை முடித்து விட்டார் இயக்குநர்.
பிளஸ்:
மகிமாவாக நடித்துள்ள சானியா மல்கோத்ராவின் நடிப்பு தான் இந்த ஒட்டுமொத்த படத்தையே தாங்கிப் பிடிக்கிறது என்று சொல்ல வேண்டும். மேலும், பத்திரிகையாளராக வரும் நபர், அந்த உயர் அதிகாரி, உள்ளே ஆட்டம் போட்டுட்டு இருக்கிறதை அறுத்து விட்டா சரியாக இருக்கும் என உயர் அதிகாரியிடம் பேசி விட்டு உங்க பைல்ஸை சொன்னேன் சார் என ஹீரோயின் பேசும் வசனம் வேலை இடங்களில் நடக்கும் பாலியல் தொல்லைகளுக்கு எதிரான சவுக்கடி வசனமாக உள்ளது.
காதலனாக நடித்துள்ள ஆனந்த் வி ஜோஷி பணக்காரர்கள் திருமணத்தில் ஏழைகளை அடிக்க ஹீரோயினடம் வாங்கிக் கட்டுவது, தோட்டக்காரர் தனது மகளை காணவில்லை என்று வரும் போது அசிங்கமாக பேசி அவமதித்து அனுப்புவதற்காக கிடைக்கும் தண்டனை, பின்னர் அதிலிருந்து தெளிந்து நாயகியிடம் நல்ல பெயரை வாங்க அந்த பெண்ணை தனியாளாக தேடச் செல்வது என சிம்பிளான ஹீரோவாக ஸ்கோர் செய்கிறார்.
ஹீரோயின் டீமில் உள்ள லேடி போலீஸ், காரை காணவில்லை என தேடும் போலீஸ் என ஒரே கலாட்டா பேக்கேஜாக படம் உள்ளது. இசை, ஒளிப்பதிவு, திரைக்கதை, கிழிந்த பேன்ட் போட்டால் கேவலமானவளா என கேட்கும் வசனம், நானும் கீழ்ச்சாதி பெண் தான் அதுக்குன்னு நான் திருடியா என ஒருவரை ஹீரோயின் வெளுத்து வாங்குவது என காட்சிக்கு காட்சி படம் மிரட்டுகிறது.
மைனஸ்:
பெண்கள் காணாமல் போனால் போகட்டும் பலாப்பழம் தான் முக்கியம் என போலீஸ் அதிகாரிகள் செயல்படுவது, அமைச்சரே இந்த விஷயத்தை பப்ளிக்காக பேட்டிக் கொடுப்பது, கிளைமேக்ஸில் இது ஒரு பெரிய மாஃபியா என்றெல்லாம் காட்டாமல் ஒரு லோக்கல் சின்ன பசங்க காமெடியாக செய்யும் வேலை என்று கதையை முடித்திருப்பது கொஞ்சம் படத்தின் கிளைமேக்ஸ் வெயிட்டாக இல்லையே என்கிற எண்ணத்தை வரவழைத்து விடுகிறது.
பார்க்கலாமா? வேண்டாமா?:
லாஜிக் ஓட்டைகள் இருந்தாலும், போலீஸ் அதிகாரிகள் அரசியல்வாதிகளுக்கு அடிமைகளாக எப்படி இருக்கின்றனர் என்பதை காட்டிய விதத்திலேயே படம் ரசிகர்களை கவர்ந்து விடுகிறது. எந்தவொரு ஆபாசக் காட்சிகளோ, முத்தக் காட்சிகள் மற்றும் ஓடிடி தானே என இஷ்டத்துக்கு கெட்ட வார்த்தைகள் பேசுவது என எந்த சிக்கலும் இல்லாமல் குடும்பத்துடன் அமர்ந்து பார்க்கும் படமாக இந்த Kathal உள்ளது.