திருப்பூர் மாவட்டம், பல்லடம் அரசு மருத்துவமனையில் ஆட்சியர் கிறிஸ்துராஜ் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் தற்கொலைக்கு முயன்ற மாணவரை, ஆட்சியர் கிறிஸ்துராஜ் சந்தித்தார்.
அந்த மாணவரிடம் பேசிய ஆட்சியர் கிறிஸ்துராஜ், “நான் யார் தெரியுமா? இந்த மாவட்டத்தின் ஆட்சியர். நானெல்லாம் தேர்வுகளில் தோல்வியடைந்து அதன் பிறகு நன்கு படித்து இப்போது வேலையில் இருக்கிறேன்.
தேர்வில் தோல்வி, வெற்றி என்பது மிகப்பெரிய விசயமில்லை. தோல்வி அடைந்தாலும் அதிலிருந்து மீண்டு அடுத்த கட்டத்துக்கு முன்னேறுவதுதான் முக்கியம். இது ஒரு தேர்வு மட்டுமே. தோல்வியால் சோர்வடைய கூடாது. தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கு துணைத் தேர்வு உள்ளது. அதில் எழுதி பலர் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள்.
ஆனால் நீ தேர்வில் தோல்வி அடையவில்லை. மதிப்பெண் குறைவாக எடுத்ததற்கு இப்படி தற்கொலை முயற்சி மேற்கொள்வது கூடாது. நாங்கள் எல்லாம் ஃபெயிலாகி அதன்பிறகு அடுத்தடுத்து முன்னேறி வந்துள்ளோம். மதிப்பெண் குறைந்து விட்டதற்கு வருத்தப்படக் கூடாது. அடுத்து நாம் என்ன செய்ய வேண்டும் என்று தன்னம்பிக்கையுடன் அடுத்த கட்டத்துக்குச் செல்ல வேண்டும். மனதை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும். பத்தாம் வகுப்புத் தேர்வில் விட்ட மதிப்பெண்ணை, பிளஸ்2-ல் எடுத்து சாதித்துக் காட்ட வேண்டும்.
அதுபோன்ற வாய்ப்பு உனக்கு நிச்சயம் வரும். வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கக் கற்றுக்கொள். பிளஸ் 2 தேர்வில் நீ பெறும் மதிப்பெண்ணை எனக்கு மெசேஜ் அனுப்ப வேண்டும்’’ என்றும் சொல்லி, ஆட்சியர் மாணவருக்கு தெம்பூட்டினார்.
மாணவரை ஊக்கப்படுத்தும் விதமாகவும் நம்பிக்கை தரும் விதமாகவும் ஆட்சியர் அக்கறையுடன் பேசியது பெற்றோரையும், அங்கிருந்தவர்களையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.