தமிழக முழுவதும் உள்ள 5000கும் மேற்பட்ட அரசு அனுமதி பெற்ற டாஸ்மாக் கடைகளில் கரூர் குரூப் என்ற பெயரில் அராஜக பண வசூல் நடைபெறுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. அமைச்சர் செந்தில் பாலாஜி பெயரை சொல்லி டாஸ்மாக் கடைகளில் தினந்தோறும் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை கட்டாயமாக பணம் வசூல் செய்யப்படுவதாக டாஸ்மாக் ஊழியர்களை மிரட்டி வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சென்னை மண்டலத்திற்குட்பட்ட டாஸ்மாக் அனைத்து சங்க கூட்டு நடவடிக்கை குழு சென்னை மத்திய மாவட்ட மேலாளருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அந்த கடிதத்தில் “சென்னை மத்திய மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கரூர் குரூப் என சொல்லிக்கொண்டு மனோகர் சம்பத் மற்றும் ஷியாம் ஆகியோர் நேரில் வந்தும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ரூபாய் 50,000 45 ஆயிரம் என்று கடைகளில் விற்பனைக்கு ஏற்றார் போல் எனக் கூறிக்கொண்டு பணம் தர கூறி வற்புறுத்துகின்றனர்.
DM பெயர் சொல்லி வருவதாகவும் கூறுகின்றனர். இவர்கள் யார்? எதற்கு கடைகளில் இருந்து பணம் கொடுக்க வேண்டும் என கேட்டால் பணம் கொடுக்காத கடைப்பணியாளர்கள் ரெய்டு மூலம் MRP பிடித்து வீக்கம் செய்யப்படுவர் என மிரட்டுகின்றனர்.
எனவே அதிகாரிகளை காட்டி மிரட்டி பசுளில் இறங்கும் மேற்படி கரூர் குரூப் மீது நடவடிக்கை எடுக்க அனைத்து சங்க கூட்டுக் குழுவின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்” என 9 டாஸ்மாக் கடை ஊழியர்கள் சங்கத்தினர் கூட்டாக கடிதம் அனுப்பியுள்ளனர். கரூர் குரூப் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அனைத்து சங்க கூட்டு நடவடிக்கை குழு டாஸ்மாக் மேலாளருக்கு கடிதம் எழுதி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.