புதுக்கோட்டை மாவட்டம் ஆளப்பிறந்தான் அடுத்த குளத்தூர் ஊகான்வயல் பகுதியைச் சேர்ந்தவர் துரைராஜ். இவரது மகன் தர்மர்(20). இவர் டிப்ளமோ சிவில் படிப்பை முடித்துவிட்டு ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் சிவில் பிரிவில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் இவர் டிப்ளமோ சிவில் படித்ததை வைத்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த பொறியியல் துணை சேவைகள் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்துள்ளார். இந்நிலையில் தர்மருக்கு புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலை கல்லூரியில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் இன்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த பொறியியல் துணை சேவைகள் தேர்வை சுமார் 2598 பேர் எழுதினர். இதில் தர்மரும் தேர்வெழுத வருகை தந்த நிலையில் தேர்வரைக்குள் செல்லும் பொழுது அனைவரையும் பரிசோதனை செய்தே பிறகே தேர்வை நடத்துபவர்கள் தேர்வறைக்குள் அனுமதித்ததாக கூறப்படுகிறது. இந்த சோதனைக்குமிடையே தேர்வு எழுத வந்த பொறியியல் கல்லூரி மாணவர் தர்மர் பட்டன் கேமரா மற்றும் டிரான்ஸ்மீட்டரை யாருக்கும் தெரியாமல் தேர்வு அறைக்குள் எடுத்துச் சென்று தேர்வு எழுத தொடங்கியுள்ளார். கேள்வித்தாளை பட்டன் கேமராவில் காண்பித்து அதற்கு விடையை ஈரோட்டில் இருந்து தர்மர் படிக்கும் அதே கல்லூரியை சேர்ந்த தர்மரின் நண்பரான பரணிதரன் கேள்விகளுக்கான விடையை கூற டிரான்ஸ்மீட்டர் வழியாக விடையை கேட்டு எழுதி வந்துள்ளார்.
அப்போது தேர்வறையில் இருந்து தேர்வு கண்காணிப்பாளர் தர்மர் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டு அவரை மீண்டும் சோதனை செய்து பார்த்தபோது அவரிடம் பட்டன் கேமரா மற்றும் டிரான்ஸ்மிட்டர் இருந்ததும் அதை பயன்படுத்தி தேர்வை எழுதியதும் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து முதன்மை கண்காணிப்பாளர் மகேஸ்வரி மூலமாக புதுக்கோட்டை நகர காவல் நிலையத்தில் தர்மர் மீது புகார் கொடுத்ததை தொடர்ந்து நகர காவல் உதவி ஆய்வாளர் சரவணன் தர்மரை கைது செய்து அவர் தேர்வை காப்பி அடிக்க பயன்படுத்திய பட்டன் கேமரா மற்றும் ட்ரான்ஸ்மீட்டரை பறிமுதல் செய்தார். பின்னர் தர்மர் மீதும் அவருக்கு உதவிய ஈரோட்டில் உள்ள பரணிதரன் மீதும் வழக்குப்பதிந்த காவல்துறையினர் தர்மரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் இந்த வழக்கில் இரண்டாவது குற்றவாளியாக கருதப்படும் தர்மரின் நண்பரான பரணிதரனை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். தேர்வில் எந்திரன் திரைப்பட பாணியில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பொறியியல் கல்லூரி மாணவர் காப்பியடித்து தேர்வு எழுதிய சம்பவம் புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.