நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் விலை எப்போதுதான் குறையும் என்ற கேள்வி, ஏழை மற்றும் நடுத்தர வர்க்க குடும்பங்களில் தொடர்ந்து இருந்து வருகிறது. இந்தியாவில் எண்ணெய் விலை உயரக் காரணம் என்ன? எண்ணெய் வணிகம் எத்தகைய கட்டமைப்பைக் கொண்டிருக்கிறது? விலையை குறைக்க வாய்ப்பு இருக்கிறதா? – இந்தக் கேள்விகளுக்கு விடை காண்போம்.
இன்றியமையாத உணவுப் பொருட்களில் ஒன்று சமையல் எண்ணெய். சந்தையில் இதன் விலை உயரும்போது இருக்கும் வேகம் குறையும்போது இருப்பதில்லை. இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றில் முக்கியமானது, சமையல் எண்ணெய்யை பெருமளவில் நாம் இறக்குமதி செய்வதுதான். நமது தேவையில் சுமார் 60 சதவீத சமையல் எண்ணெயை இறக்குமதியின் மூலமே நாம் பூர்த்தி செய்து வருகிறோம். உலகிலேயே அதிக அளவில் சமையல் எண்ணெய்யை இறக்குமதி செய்யும் நாடு இந்தியா. அதிக அளவில் சமையல் எண்ணெய் பயன்படுத்தும் இரண்டாவது நாடு இந்தியா.
நிதி ஆண்டு, கல்வி ஆண்டு என்பதுபோல் எண்ணெய் நிறுவனங்களால் கடைப்பிடிக்கப்படுவது ஆயில் ஆண்டு. ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் தொடங்கும் ஆயில் ஆண்டு, டிசம்பர் மாதத்தில் முடிவடையும். இறக்குமதி செய்யப்படும் எண்ணெய் இரண்டு வகையானது. ஒன்று சமையலுக்குப் பயன்படுத்தப்படக்கூடியது; மற்றது துணி சோப்பு, குளியல் சோப்பு, பெயின்ட் உள்ளிட்டவற்றை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் பயன்படுத்தக்கூடியது. நடப்பு எண்ணெய் ஆண்டின் முதல் அரையாண்டில் மட்டும் 80 லட்சத்து 2 ஆயிரத்து 36 மெட்ரிக் டன் சமையல் எண்ணெய்யை நாம் இறக்குமதி செய்திருக்கிறோம். இதே காலகட்டத்தில் ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 345 மெட்ரிக் டன் தொழிற்சாலை பயன்பாட்டுக்கான எண்ணெய்யை இறக்குமதி செய்திருக்கிறோம்.
நாம் இறக்குமதி செய்யும் எண்ணெய்யின் அளவு கூடிக்கொண்டே இருக்கிறது. இதற்கு முந்தைய எண்ணெய் ஆண்டில் இதே காலகட்டத்தில் நாம் இறக்குமதி செய்த சமையல் எண்ணெயின் அளவு 65 லட்சத்து 43 ஆயிரத்து 3 மெட்ரிக் டன்; தொழிற்சாலைகளுக்கான எண்ணெய்யின் அளவு ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 571 மெட்ரிக் டன். இரு வகையான எண்ணெய்களின் இறக்குமதியைப் பொறுத்தவரை ஒப்பீட்டளவில் நடப்பு எண்ணெய் ஆண்டின் முதல் அரையாண்டில் அதற்கு முந்தைய காலகட்டத்தைவிட 21 சதவீதம் அதிகரித்துள்ளது.
சமையல் எண்ணெய்யைப் பொறுத்தவரை சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய், சுத்திகரிக்கப்படாத எண்ணெய் என இரு வகை எண்ணெய்களை நாம் இறக்குதி செய்கிறோம். நடப்பு எண்ணெய் ஆண்டின் முதல் அரையாண்டில் 11 லட்சத்து ஆயிரத்து 347 மெட்ரிக் டன் சுத்திரிக்கப்பட்ட எண்ணெய்யையும், 69 லட்சத்து 689 மெட்ரிக் டன் சுத்திகரிக்கப்படாத எண்ணெய்யையும் நாம் இறக்குமதி செய்துள்ளோம்.
சுத்திகரிக்கப்பட்ட, வாசனை நீக்கப்பட்ட பாமாலின் எண்ணெய், சுத்திகரிக்கப்படாத பாமாயில், சுத்திகரிக்கப்படாத சோயாபீன் எண்ணெய், சுத்திகரிக்கப்படாத சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றையே நாம் அதிகம் இறக்குமதி செய்கிறோம். இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து, அர்ஜென்டினா, பிரேசில், உக்ரைன், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் இருந்துதான் நாம் அதிக அளவில் சமையல் எண்ணெயை இறக்குமதி செய்கிறோம்.
இவை தவிர கடலை எண்ணெய், நல்லெண்ணைய், ஆளிவிதை எண்ணெய், பருத்திவிதை எண்ணெய், ஆமணக்கு எண்ணெய் உள்ளிட்ட எண்ணெய்கள் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுகின்றன. இவற்றின் மூலம் 40 சதவீத சமையல் எண்ணெய் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.
உள்நாட்டு சந்தையில் சமையல் எண்ணெய்களின் மொத்த விலை குறித்த பட்டியலுக்கும் அவற்றின் சில்லறை விற்பனைக்கும் இடையே பெரிய வித்தியாசம் காணப்படுகிறது. மொத்த விலை பட்டியலின்படி கடலை எண்ணெய் விலை ஒரு கிலோ ரூ.162-க்கும், நல்லெண்ணெய் விலை கிலோ ரூ.272-க்கும், ஆளிவிதை எண்ணெய் விலை கிலோ ரூ.89-க்கும் விற்பனையாகிறது. பருத்தி எண்ணெய் கிலோ ரூ.86-க்கும், ஆமணக்கு எண்ணெய் விலை கிலோ ரூ.116-க்கும் விற்பனையாகிறது. ஆனால், இவற்றின் சில்லறை விற்பனை விலை மிகவும் அதிகமாகவே இருக்கிறது.
எண்ணெயை பாக்கெட்டில் அடைப்பதற்கான செலவு, போக்குவரத்துச் செலவு, ஏஜென்ட்டுகள், டிஸ்ட்ரிபூட்டர்களுக்கான கமிஷன், கடைசியாக கடைகளில் விற்கும் கடைக்காரருக்கான லாபம் என எல்லாம் சேருவதால் இவற்றின் சில்லறை விலை கூடுதலாக இருப்பதாகக் கூறுகின்றனர் இது குறித்து அறிந்தவர்கள். அதேநேரத்தில், இவ்விஷயத்தில் அரசு தனது கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
60 சதவீதம் அளவுக்கு வெளிநாடுகளை நம்பி இருப்பதால், சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப உள்நாட்டில் அவற்றின் விலை மாறுகிறது என கூறும் நிபுணர்கள், எண்ணெய் இறக்குமதியைக் குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் உள்நாட்டு உற்பத்தியை பெருக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதோடு, சில்லறை விற்பனையகங்களில் அவை விற்கப்படும் விலை குறித்தும் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.